Aran Sei

பீகார் தேர்தல் – ‘மோடி 2014-ல் அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு?’ – தேஜஷ்வி கேள்வி

“பீகாரின் சம்பாரன் பகுதியில் சர்க்கரை ஆலைகளை திறப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, கிழக்கு சம்பாரானில் நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தில், “மோத்திஹாரியில் உள்ள மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறக்க வைத்து, அடுத்த முறை அங்கு வரும் போது அந்த ஆலைகளில் உற்பத்தியான சர்க்கரை போட்ட டீ குடிப்பேன்” என்று மோடி பேசியதாக குறிப்பிட்ட தேஜஷ்வி யாதவ், “ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி மோத்திஹாரிக்கு வந்திருக்கிறார். ஆனால், மூடப்பட்ட சர்க்கரை ஆலைகள் பற்றியோ, டீ பற்றியோ எதுவும் பேசவில்லை” என்று கிண்டல் செய்திருக்கிறார்

பீகாரில் 1980-ல் இயங்கி வந்த 28 சர்க்கரை ஆலைகளில் 10 மட்டுமே இப்போது இயங்குகின்றன. முசாபர்பூரில் உள்ள மோத்திபூர் சர்க்கரை ஆலை, மேற்கு சம்பாரன் மாவட்டத்தின் சன்பாத்தியா சர்க்கரை ஆலை, கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் ஹனுமான், சக்கியா ஆலைகள், மதுபனி மாவட்டத்தில் லோகாட், சாக்ரி ஆலைகள், தர்பங்காவின் ரய்யம் ஆலை மற்றும் சமீபத்தில் கொரோனா முழு அடைப்பின் காரணமாக சீத்தாமார்ஹியில் உள்ள ரிகா சர்க்கரை ஆலை ஆகியவை மூடப்பட்டு விட்டன. இவற்றில் வேலை செய்த தொழிலாளர்களும் இவற்றை சார்ந்திருந்த விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் தேர்தல் – மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளுக்கு விடிவில்லை

பீகாரில் மூன்று கட்டங்களாக நடந்து வரும் சட்டமன்ற தேர்தலில், முதல் கட்ட வாக்குப் பதிவு சென்ற 28-ம் தேதி 71 தொகுதிகளில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறவிருக்கும் நிலையில் அந்த 94 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

மூன்றாம் கட்டத்தில் 78 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நவம்பர் 7-ம் தேதி நடக்கவுள்ளது. வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்படும்.

இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி நான்கு இடங்களில் தேர்தல் கூட்டங்களில் பேசினார். அதற்கு முன்னதாக தேஜஷ்வி யாதவ் மோடிக்கு 11 கேள்விகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

பீகார்: மோடியை நோக்கி எழுப்பப்பட்ட 11 கேள்விகள்

தேஜஷ்வி யாதவ் ஒவ்வொரு நாளும் 10-12 கூட்டங்களில் பேசி வருகிறார். அவரது தேர்தல் பிரச்சார உரைகளைக் கேட்பதற்கு பெரும் அளவிலான கூட்டம் கூடி வருகிறது. 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற தேஜஷ்வி யாதவின் வாக்குறுதி இளைஞர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் பெரும் ஆதரவை உருவாக்கியிருப்பதாக தி ஹிந்து குறிப்பிடுகிறது.

“வேலை வாய்ப்புகளை எங்கிருந்து உருவாக்குவார்கள், அதற்கான பணம் எங்கே இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பிய பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், “வேலை வாய்ப்பு தொடர்பான வாக்குறுதி குழப்பத்தை உருவாக்கவே தரப்பட்டிருக்கிறது” என்று விமர்சித்திருக்கிறார்.

ஞாயிற்றுக் கிழமை தேஜஷ்வி யாதவ், கிழக்கு சம்பாரண், சமஸ்டிபூர், நாலந்தா, வைஷாலி, பாட்னா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார்.

நாலந்தாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தேஜஷ்வி யாதவ் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 50 ஆகக் குறைத்த முதலமைச்சர் நிதீஷ் குமாரை விமர்சித்தார். “தானே 70 வயதான நிதீஷ் குமார் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதைக் குறைத்திருக்கிறார். இந்த முறை பீகார் மக்கள் அவருக்கு ஓய்வு வழங்கப் போகிறார்கள். நாங்கள் அரசு அமைத்தால் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவோம்” என்று அவர் அறிவித்திருக்கிறார்.

“முன்பு யாருக்கும் சம்பளம் சரியான நேரத்தில் கிடைத்ததில்லை. அதை நாங்கள் சரி செய்தோம். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? மீண்டும் சம்பளம் கொடுக்காமல் இருப்பீர்களா? வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டாமா?” என்று நிதீஷ் குமார் தேஜஷ்வி யாதவை விமர்சித்திருப்பதாக நியூஸ்18 செய்தி தெரிவிக்கிறது.

நிதீஷ் குமார் தனது கோட்டையான நாலந்தாவிலும் அதைச் சுற்றிய மாவட்டங்களிலும் மிகக் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

சாலைகள் போடுவதிலும், மின்சார வழங்கலிலும், சட்ட ஒழுங்கை பராமரிப்பதிலும் நிதீஷ் குமாரின் சாதனைகளை பாராட்டினாலும், பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற அடிப்படை பொது சேவைகளை பெறுவதில் உள்ள குறைபாடுகளும், அரசு திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிடுகிறது.

பீகாரில் கல்வி, மருத்துவம் ஆகியவற்றின் தரத்தை உயர்த்துவதில் நிதீஷ் குமார் அரசு தவறி விட்டதை தேஜஷ்வி யாதவ் விமர்சித்தார். “பீகார் மக்கள் ஏன் பட்டப்படிப்பை மூன்று ஆண்டுகளில் முடிக்க முடிவதில்லை. படித்து முடிக்க அவர்களுக்கு ஏன் 4-5 ஆண்டுகள் பிடிக்கின்றன என்று நிதீஷ் குமார் பீகார் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கிழக்கு சம்பாராணின் இன்னொரு கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பலத்த கைத்தட்டல் எழுந்தது என்று குறிப்பிடுகிறது தி ஹிந்து நாளிதழ்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்