Aran Sei

பீகார் தேர்தல் : பாஜகவில் இருந்து வெளியேறும் முன்னணி தலைவர்கள்

Credits Sabrang

பீகார் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பிறகு மாநிலத்தின்  முன்னணி தலைவர்கள், லோக் ஜனசக்தி கட்சியில் இணைந்துள்ளனர்.

நடைபெறவுள்ள பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.

மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வானை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும், அதிக தொகுதிகளை லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

ஆனால், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், லோக் ஜனசக்தி கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடும் என சிராக் பஸ்வான் அறிவித்துள்ளார்.

Credits The Hindu

இதனிடையே, பாஜகவின் பீகார் மாநில துணைத் தலைவர் ராஜேந்திர சிங் பாஜகவில் இருந்து வெளியேறி லோக் ஜனசக்தியுடன் இணைந்து, தினாரா என்ற தொகுதியில் எல்ஜேபி வேட்பாளாராக போட்டியிடுகிறார்.

இவரைத் தொடர்ந்து, ராமேஸ்வர் சௌராசியா, உஷா வித்யார்த்தி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கட்சியில் இருந்து வெளியேறி லோக் ஜனசக்தியில் இணைந்து பீகார் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் வாக்கெடுப்புக்கு பிறகு பீகாரில் ஆட்சி அமைப்பதற்காக, கட்சியை விட்டு வெளியேறி லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளராக தேர்தலை சந்திப்பவர்களுக்கு பாஜக தலைமை மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்ற ஊகத்துக்கு இது வழிவகுத்துள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

ராஜேந்திர சிங் தி இந்து-க்கு அளித்துள்ள பேட்டியில், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் என் ரத்தத்தில் ஊறிப்போய் இருக்கின்றன. கடந்த 37 ஆண்டுகளாக நான் அதில் இணைந்து செயல்பட்டுள்ளேன். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்காக என்னுடைய முழு வாழ்க்கையையும் நான் அர்ப்பணித்துள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

ஆனால், தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்படாததோடு, கட்சியிலிருந்தும் ராஜேந்திர சிங் நீக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, “என்னுள் நிறைய வேதனைகள் இருந்தாலும் கூட யார் மீதும் எனக்கு எந்த வகை வெறுப்புணர்வும் இல்லை. மேலும் இது தொடர்பாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை.” என்று பதிலளித்துள்ளார்.

Credits The Hindu

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பாஜகவுடன் இணைவாரா என்ற கேள்விக்கு, ஒரு நீண்ட அமைதிக்கு பிறகு “காலம் தான் இதற்கு பதிலளிக்கும்… எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு என்ன தெரியும்?” எனக் கூறியிருக்கிறார்.

லோக் ஜனசக்தி கட்சியில் சேர்வதற்கு முன் பாஜக கட்சியைச் சேர்ந்த தலைவர் அமித் ஷாவை சந்தித்தாரா என்ற கேள்விக்கு அப்படி எந்த சந்திப்பும் நிகழவில்லை என்று ராஜேந்திர சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்துள்ள பேட்டியில், “லோக் ஜனசக்தி மற்றும் பாஜக-வுக்கு இடையிலான போட்டி நட்பு ரீதியிலானது.” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, “பாஜக வெற்றி பெற்றால், நாங்கள் வாழ்த்து கூறுவோம். நாங்கள் வெற்றியடைந்தால், பாஜகவுக்கு ஆதரவு வழங்குவோம். பீகாரில் பாஜக தலைமையிலான லோக் ஜனசக்தி ஆட்சி அமைய வேண்டும்.” எனவும் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்