எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு கைதான சுதா பரத்வாஜ் மாதந்தோறும் 5 புத்தங்களைப் பெற்று கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தின் பீமா ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோரேகான் கிராமத்தில் 1818-ம் ஆண்டு, மராத்தியா பேஷ்வா படைக்கும், ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி படைக்கும் போர் நடைபெற்றது.
இதில் கிழக்கிந்திய படையில் இடம்பெற்றிருந்த 49 பட்டியல் இன மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவாக அங்கு ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் எல்கர் பரிஷத் என்ற பெயரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில், பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் பங்கேற்றன. இதைத்தொடர்ந்து மறுநாள் புனே மாவட்டம் முழுவதும் வன்முறை நடந்தது.
இந்த வன்முறையை தூண்டிவிட்டதாக சமூக செயற்பாட்டாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களுமான சுதா பரத்வாஜ், கவ்தம் நவ்லாகா, வரவர் ராவ், ஆனந்த் டெல்டும்டே உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
கடந்த நவம்பர் 11-ம் தேதி சுதா பரத்வாஜின் வழக்கறிஞரின் தரப்பில் சென்ற ஒருவர் சிறையில் உள்ள அவருக்கு ஒரு பார்சலை வழங்கியுள்ளார். அந்த பார்சலில் இரண்டு உடைகளும், ஒரு புத்தகமும் (ஸ்டேன் பெக்கெட் எழுதிய தி எம்பயர் ஆஃப் காட்டான் புத்தகம்) இருந்துள்ளது. சிறை அதிகாரிகள் உடைகளை மட்டும் அளித்துவிட்டு புத்தகத்தை கொடுக்க மறுத்துள்ளனர்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லாகா, ஹனி பாபு ஆகியோரின் வழக்கறிஞர்கள் சிறையில் புத்தகங்களும் தினசரி நாளேடுகளும் படிப்பதற்கு அனுமதியளிக்க கோரி தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி டி.இ.கோத்தலிக்கார் சுதா பரத்வாஜுக்கு புத்தகங்கள் வழங்குமாறு சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
”புத்தகங்களை சிறை கண்காணிப்பாளர் தீவிரமாக ஆராய வேண்டும் அந்தப் புத்தகங்களில் வன்முறை தூண்டக்கூடிய கருத்துக்கள் இருந்தாலோ அல்லது அல்லது தடை செய்யப்பட்ட அமைப்பான புரட்சிகர ஜனநாயக முன்னணி அல்லது சிபிஐ (மாவோயிஸ்டு) பற்றிய புத்தகங்களுக்கு அனுமதியளிக்க கூடாது” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.