Aran Sei

அன்பிற்கான யுத்தம், போர்க்குணத்துடன் அழகாக வெல்லப்பட வேண்டும் – அருந்ததி ராய்

ரோஹித் வெமுலாவின் 32 வது பிறந்த நாள் மற்றும் 1818 ஆம் ஆண்டு நடைபெற்ற, பீமா கோரேகான் போரின் வெற்றியைக் குறிக்கும் இந்த நிகழ்வில் பேச என்னை அழைத்த, ‘2021- எல்கர் பரிஷத்’ அமைப்பாளர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

யாரின் ஆட்சியில் மகர்களும் பிற தலித் சாதியினரும் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு விவரிக்க முடியாத வழிகளில் இழிவுபடுத்தப்பட்டார்களோ, அதே பெஷ்வா மன்னர் இரண்டாம் பாஜிராவை, பிரித்தானிய துருப்புகளில் இணைந்து போரிட்டு மகர்கள் தோற்கடித்த இடம் இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை.

லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்களின் கழுத்தை நெறித்து வீதிகளுக்கு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை, உடனடியாக திரும்பப் பெறக் கோரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு எனது ஆதரவை இந்த மேடையில் இருக்கும் மற்ற பேச்சாளர்களோடு இணைந்து வெளிப்படுத்துகிறேன்.

உத்தரபிரதேச அரசாங்கத்தின் பார்வையில், ஆதிக்க சாதி இந்து ஆண் மட்டுமே, முழு அதிகாரத்தை கொள்ள உரிமை படைத்தவராகிறார். விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் (இந்திய விவசாயத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள்) ஏன் “முன்னிறுத்தப்படுகிறார்கள்” என்று இந்திய தலைமை நீதிபதி கேட்டதற்கும் இதற்கும் வேறுபாடுகள் இல்லை.

தங்கள் குடும்பங்களுடன் வசிக்காத உழைக்கும் பெண்கள், அவர்களின் சொந்த பாதுகாப்புக்காக காவல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும், காவல்துறையினரால் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், மத்தியப் பிரதேச அரசு முன்மொழிந்திருக்கிறது.

அன்னை தெரசா உயிருடன் இருந்திருந்தால், இந்த சட்டத்தின் கீழ் அவர் நிச்சயமாக சிறைத்தண்டனை அனுபவித்திருப்பார். அவர் வாழ்நாளில் எத்தனை பேரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார் என்பதை கருத்தில் கொண்டால், 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை அவருக்கு கிடைத்திருக்கக்கூடும் என்பது என் யூகம். இந்தியாவில் ஏழைகள் மத்தியில் பணிபுரியும் ஒவ்வொரு கிறிஸ்தவ பாதிரியாரின் தலைவிதியாக இது மாறக்கூடும்.

“இந்துக்கள் என்று நாம் அழைக்கப்படும் கெடுவாய்ப்பு நமக்கு இருப்பதால், நாம் இவ்வாறு நடத்தப்படுகிறோம். நாம் வேறொரு மதத்தை பின்தொடர்ந்தால் , யாரும் நம்மை அப்படி நடத்தத் துணிய மாட்டார்கள். நம்மை சமமாக நடத்தி மதிப்பளிக்கும் எந்த மதத்தையும் தேர்வு செய்யுங்கள். நாம் இனியாவது நமது தவறை சரிசெய்வோம்” என்று சொன்னவரை என்ன செய்யப்போகிறீர்கள்?

இவை பாபாசாகேப் அம்பேத்கரின் வார்த்தைகள் என்பது உங்களில் பலருக்குத் தெரியும். ஒரு சிறந்த வாழ்க்கை முறைக்கான வாக்குறுதியுடன் வெகுஜன மத மாற்றத்திற்கான தெளிவான அழைப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம். இந்த மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், “வெகுஜன மத மாற்றம்” என்பது “இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மதம் மாறும்போது” என வரையறுக்கப்படுகிறது. அந்த வார்த்தைகள் அம்பேத்கரை கூட குற்றவாளியாக்கும்.

வெகுஜன மதமாற்றத்திற்கு வெளிப்படையாக ஒப்புதல் அளித்ததற்காக மகாத்மா பூலேவும் குற்றஞ்சாட்டப்படுவார்:

“ஆரியர்களின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அழித்த முஸ்லீம்கள், அவர்களை வலுக்கட்டாயமாக அடிமைப்படுத்தி, சூத்திரர்கள் மற்றும் ஆதி சூத்திரர்களை ஆரியர் பிடியிலிருந்து அதிக எண்ணிக்கையில் வெளியே கொண்டு வந்து, தங்களது மதத்தில் இணைத்து முஸ்லிம்களாக மாற்றினர். இது மட்டுமல்லாமல், அவர்களுடன் உணவுண்ணுதல் மற்றும் திருமண உறவுகளை ஏற்படுத்தி அவர்கள் அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கினர்”

இந்த துணைக் கண்டத்தின் மக்கள்தொகையை உருவாக்கும் லட்சக்கணக்கான சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் தான், வரலாற்று மாற்றத்திற்கும் வெகுஜன மத மாற்றத்திற்கும் சான்றாவர் “இந்து மக்கள்தொகையின்” எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் குறைவு தான், ஆதிக்க சாதியினருக்கு தமது மக்கள் தொகை குறித்த பதற்றத்தை கொடுத்ததோடு, அரசியலை இந்துத்துவத்தின் பக்கம் மடைமாற்ற செய்தது.

இருப்பினும், இன்று ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்தில் இருப்பதால், மதமாற்றத்தின் போக்கு மாறிவிட்டது. விஸ்வ இந்து பரிஷித் நடத்தும் கர் வாப்சி மட்டும் தான் இன்று நடக்கும் பெரிய அளவிலான மதமாற்ற நிகழ்வாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்து சீர்திருத்தக் குழுக்கள் தொடங்கிய “கர் வாப்சி” (வீடு திரும்புவதல்) என்று அழைக்கப்படும் இந்த செயல்முறையில், காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை இந்து மதத்திற்கு “திருப்பி” அழைத்து வருவது அடங்கும். ஆனால், ‘வீட்டிலிருந்து’ விலகிச் சென்றதால் அவர்கள் அடைந்த மாசுபாட்டைத் தூய்மைப்படுத்தும் வகையில், சுத்திகரிப்பு விழா நடத்தாமல் அவர்கள் மீண்டும் இந்து மதத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.

இந்த நடைமுறையை உத்தர பிரதேசத்தின் சட்டம் எவ்வாறு எதிர்கொள்கிறது?

சட்டத்தில் பின்வரும் பகுதி உள்ளது: “எந்தவொரு நபரும் தனது முந்தைய மதத்திற்கு மாறினால், அது இந்த சட்டத்தின் கீழ் மாற்றமாக கருதப்படாது.” இதைச் செய்வதன் மூலம், இந்து மதம் ஒரு தொன்மையான மதம் என்ற கட்டுக்கதையை நிலைநிறுத்துவதோடு, அதை சட்டப்பூர்வமாக்குகிறது. இது நூற்றுக்கணக்கான பழங்குடியினரின் மதங்களையும், இந்திய துணைக் கண்டத்தின் தலித் மற்றும் திராவிட மக்களையும் மட்டம் தட்டுகிறது. இது பொய்யானது மற்றும் வரலாற்றோடு பொருந்தி போகாதது.

இந்தியாவில், புராணங்களை வரலாறாகவும், வரலாற்றை புராணங்களாகவும் மாற்றும் வழிகள் இவை.

ஆதிக்க சாதி வரலாற்றாசிரியர்கள் இவர்கள் தங்களை ஆதிகுடிகள் என்றும் மற்றும் ஆரியர்களின் சந்ததியினர் என்றும் ஒரே நேரத்தில் கூறிக்கொள்வதில் எந்தவிதமான முரண்பாடுகளையும் காண மறுக்கிறார்கள்.

காந்தி தனது தென்னாப்பிரிக்க தொழில்வாழ்க்கையின் தொடக்கத்தில், 1893 வாக்கில், டர்பன் தபால் நிலையத்தில் இந்தியர்களுக்கு தனி நுழைவு வாயில் வேண்டும் என்று பரப்புரை செய்திருக்கிறார். இதனால் அவரால் காஃபிர்கள் என்றும் கழிவுகள் என்றும் அழைக்கப்பட்ட கருப்பு ஆப்பிரிக்கர்களுடன் நுழை வாயிலை, இந்தியர்கள் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்பதோடு, இந்தியர்களும் – ஆங்கிலேயர்களும், இந்தோ-ஆரியர் வழி வந்தவர்கள் என வாதாடினார். ஆதிக்கசாதி இந்தியர்களும், ஒடுக்கப்பட்ட கூலித்தொழிலாளிகளும் தனித்தனியாக தெரிய வேண்டுமென்பதற்காக முயற்சி மேற்கொண்டார்.

இன்று இங்கு இருக்கும் வெவ்வேறு துறை சார்ந்த பேச்சாளர்களைப் பார்க்கும் போது, எல்கர் பரிஷத்தின் அறிவுசார் திறன் வெளிப்படுகிறது. இது எல்லா திசைகளிலிருந்தும் நம்மை நோக்கி வரும் ஒருங்கிணைந்த தாக்குதலை எதிர்கொள்ள உதவும்.

நாம் ஒரு தொட்டிக்குள் அடைபட்டு நமக்குள், நமது சாதிகளுக்குள் அடித்துக்கொள்வதை விடவும் பேரானந்தம் இந்த அரசுக்கு வேறில்லை, பெரும்பாலும் நமது கோபம் மடைமாற்றப்படுகிறது. நாம் அடைபட்டிருக்கும் தொட்டிகளை உடைத்துக்கோண்டு காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்தாலொழிய இவர்களை நாம் சமாளிக்க முடியாது.

இதை செய்ய நாம் நமது தயக்கங்களிலிருந்து வெளியேற வேண்டும், ரோஹித் வெமுலா போல கனவு காண வேண்டும். அவர் இறந்தாலும் கனவோடு இறந்ததால், இன்று நம்மோடு இங்கு தான் புதிய தலைமுறைக்கான ஈர்ப்பாக இருக்கிறார்.

மனிதாபிமானம், குறிக்கோள், அறிவுத்தேடல் ஆகியவற்றை விரிவுப்படுத்திக்கொள்வதற்கான தேவையை வலியுறுத்தியவாறு அவர் இறந்திருக்கிறார். உலகம் அவர் மீது ஒட்ட நினைத்த அடையாளங்களை மறுத்த அவர், சமூகம் அவரை அடைக்க நினைத்த பெட்டிக்குள் சுருங்கி அடங்க மறுத்து ஒரு நட்சத்திர துகளாக மாறிவிட்டிருக்கிறார். அவர் நட்சத்திர துகளால் ஆனவர் என்பது அவருக்கு முன்பே தெரியும்.

நம்மை மட்டுபடுத்தும் கண்ணிகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் யாரும் எந்தவொரு அடையாளங்களின் தொகுப்பல்ல.

எதிரிகளை எதிர்கொள்ளும் அதேவேளை நம் நண்பர்களை அடையாளம் காண்பது மிகவும் அவசியம், ஏனெனில் நம்மால் தனியாக இந்த யுத்தத்தை நடத்திட முடியாது.

கடந்தாண்டு நடைபெற்ற தீரமிகு குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களும், தற்போது நடைபெறும் விவசாயிகளின் போராட்டமும் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன. வெவ்வேறு வரலாற்று பின்புலமும், சிந்தனையும் கொண்ட பல்வேறு விவசாய சங்கங்கள், போராட்டத்திற்காக ஒன்றிணைந்துள்ளன.

சிறு மற்றும் பெரு விவசாயிகளுக்கும், நிலக்கிழார்கள் மற்றும் நிலமில்லா கூலி உழைப்பாளர்களுக்கும், ஜாட் சீக்கியர்கள் மற்றும் மசாபி சீக்கியர்களுக்கும், இடதுசாரி சங்கங்கள் மற்றும் நடுநிலை சங்கங்களுக்கும் இடையே எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன.

சாதிப்பிரச்சினையில் 2006 ஆம் ஆண்டு, கை கால்கள் வெட்டப்பட்ட பந்த் சிங் சொன்னது போல, இவர்களுக்குள் சாதி முரண்பாடுகள் கூட இருக்கின்றன. இங்கு இன்று இருக்க வேண்டிய ரந்தீப் மட்டோக்கின் லேண்ட்லெஸ் (Landless) ஆவணப்படத்தில் சொல்லப்பட்டது போல, அந்த முரண்பாடுகள் இன்னும் களையப்படவில்லை.

இருந்தாலும் ஒரு இருத்தலியல் போருக்காக அவர்கள் அனைவரும் முரண்பாடுகளை மறந்து ஒன்றிணைந்து அரசோடு யுத்தம் செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட அம்பேத்கர் நிர்பந்திக்கப்பட்ட இந்த நகரத்தில், ஜோதிபா மற்றும் சாவித்திரி பூலே புரட்சிகரமாக செயல்பட்ட இந்த நகரத்தில், இந்த யுத்தத்துக்கு நாம் ஒரு பெயர் தர வேண்டும். “சத்ய சோதக் ரெசிஸ்டன்ஸ்” (உண்மை விரும்பிகளின் எதிர்ப்பு) என்பது தான் அது (RSS க்கு எதிராக SSR).

வெறுப்புக்கு எதிரான அன்பின் யுத்தம். அன்பிற்கான யுத்தம். போர்க்குணத்தோடு நடத்தப்பட்டு அழகாக வெல்லப்பட வேண்டிய யுத்தம்.

நன்றி.

எல்கர் பரிஷத் 2021 நிகழ்ச்சியில், அருந்ததி ராய் ஆற்றிய உரை. டிசம்பர் 31, 2017 முதல் ஜனவரி 1, 2018 க்கு பிறகு, எல்கர் பரிஷத் நிகழ்ச்சி நடைபெற்றது இதுவே முதல் முறை.

அருந்ததி ராய், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர். 

(www.thewire.in இணையதளத்தில் வெளியான, அருந்ததி ராய் உரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்