Aran Sei

தென் இந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை – 5 மாநில பார் கவுன்சில்கள் கோரிக்கை

credits : the indian express

தென் இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என்று தென் மாநிலங்களின் பார் கவுன்சில்கள் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளன.

தெலங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா பார் கவுன்சில்களின் தலைவர்கள், தெலங்கானா மாநில பார் கவுன்சில் ஏற்பாடு செயத இணையவழி கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்தனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. நேற்று நடந்த கூட்டத்தில், இந்த நோக்கத்தை அடைவதற்கான கமிட்டியின் தலைவராக தெலங்கானா பார் கவுன்சில் தலைவர் ஆ நரசிம்ம ரெட்டியை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தொலைவு காரணமாகவும், தொலைதூரத்தில் உள்ள உச்சநீதிமன்றத்துக்கு செல்வதற்கு ஆகும் செலவு காரணமாகவும் நீதித்துறையின் உச்சபட்ச நீதிமன்றத்தை அணுகுவது என்ற நினைப்பையே மக்கள் கை விட்டு விடுகின்றனர் என்று இந்த பார் கவுன்சில்கள் கூறியுள்ளன.

இந்த கமிட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தின்நீதிபதிகள் ஆகியோரை சந்தித்து, தென் இந்திய மக்களின் விருப்பத்தை முன் வைக்க முயற்சிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஹன்ஸ் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

“அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 130, உச்சநீதிமன்றம் இந்தியாவில் எந்த இடத்திலும் அமர்வை ஏற்படுத்தலாம் என்று தெளிவாக கூறுகிறது. இந்த முடிவை தலைமை நீதிபதி, ஜனாதிபதியின் ஒப்புதலோடு எடுக்கலாம்” என்று பார் கவுன்சில் தலைவர்கள் கருதுகின்றனர்.

தென் இந்தியாவில் ஒரு உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தாலும், இந்த பகுதியின் முன்னணி சட்டத் துறை வல்லுனர்கள் கூட்டாக, இந்தக் கோரிக்கைக்காக போராடப் போவதாக உறுதி கொள்வது இது முதல் முறை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

நாட்டின் நான்கு பகுதிகளிலும் மேல்முறையீட்டு அமர்வுகளை உச்சநீதிமன்றம் அமைக்காமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை என்று நரசிம்ம ரெட்டி கூறியுள்ளார்.

தென் இந்தியாவில் உச்சநீதிமன்ற கிளைக்கு பொருத்தமான இடமாக ஹைதரபாத் இருக்கும் என்றும் அவர் கருதுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்