Aran Sei

டெல்லிக் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை – கேமரா பதிவில் குளறுபடி

Image Credits: India TV News

டெல்லிக் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது என ‘பார் அண்ட் பெஞ்ச்‘ செய்தி வெளியிட்டுள்ளது.

தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கை அரசு தரப்பு வழக்கை ஆதரிக்கவில்லை என்றும் கலவரம் நடந்த இடத்தில் அந்நபர் இருந்தது நிறுவப்படவில்லை என்றும் கூறி டெல்லிக் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது என ‘பார் அண்ட் பெஞ்ச்‘ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவை நீதிபதி சுரேஷ் கைட்-ன் ஒற்றை நீதிபதி அமர்வு நிறைவேற்றியுள்ளது.

பிணை விண்ணப்பதாரர் யோகேஷ், 147/148/149/302/153- ஏ/436/505/34/120 பி ஐபிசி பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாக எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவுநீர் வடிகாலில் இருந்து மிகவும் சிதைந்த நிலையில் ஒரு சடலம் மீட்கப்பட்டதாகக் கூறி அரசு தரப்பு பிணை வழங்க மறுத்தது. பிரேதப் பரிசோதனையில் பிப்ரவரி 25 அன்று ஏற்பட்ட இரண்டு தோட்டாக்களால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் 17 சிதைவுக் காயங்கள் கண்டறியப்பட்டன.

யோகேஷும் மற்ற நபர்களும் ஒரு கும்பலை வழிநடத்தி, இஸ்லாமிய விரோத கோஷங்களை எழுப்பியதாக இரண்டு சாட்சிகள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர் என்றும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

குற்றத்தில் யோகேஷ் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருந்தார் என்பதால் அவரது முந்தைய பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கை மற்றும் காணொலிக்  காட்சிகளின் மீட்டெடுப்பு ஆகியவை, அரசு தரப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமையவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

“இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு ஏற்ப, தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கை மற்றும் கேமரா கட்சி முடிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அறிக்கையின் படி, இறந்தவரின் உடலில் இருந்து மீட்கப்பட்ட மூன்று தோட்டாக்கள் இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளில் இருந்து சுடப்படவில்லை,” என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“3-ம் நம்பர் கேமராவின் தரவுகளை மீட்டெடுக்க முடியவில்லை. குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் சிசிடிவியின் 3-ம் நம்பர் கேமரா நிறுவப்பட்டிருந்ததால் அது இந்த வழக்கின் முக்கியமான சான்றாகும். சிசிடிவியில் காட்சிகள் பதிவாவதைத் தவிர்ப்பதற்காக 1-ம் நம்பர் கேமரா சுமார் 08.54.51 மணியளவில் தவறான திசையை நோக்கி மாற்றப்பட்டது மற்றும் 2-ம் நம்பர் கேமரா சுமார் 08.54.12 மணியளவில் தவறான திசையை நோக்கி மாற்றப்பட்டது. 2-ம் நம்பர் கேமரா பெரும்பாலும் எதிர் மற்றும் அருகில் உள்ள பகுதியைப் பதிவுசெய்துள்ளது,” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் படி, குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணையின்போது அழைத்தால் வருவதை உறுதிசெய்ய ரூ.25,000 தொகையைச் செலுத்திப் பிணை பெற்றுக்கொள்ளலாம்.

“விசாரிக்கும் நீதிமன்றம் அணையைப் பிறப்பிக்கும்போது இந்த நீதிமன்றத்தின் கருத்தால் பாதிப்படையக் கூடாது,” என்பதையும் டெல்லி நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையே, மற்றொரு கலவர வழக்கில் கைது செய்யப்பட்டபோது, யோகேஷே தற்போதைய வழக்கில் தனக்குத் தொடர்பிருப்பதை வெளிப்படுத்தினார் என்றும் ‘பார் அண்ட் பெஞ்ச்‘ செய்தி குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்