சிபிஐ சிறப்பு நிதி மன்றம், பாபர் மசூதி இடிப்பு வழக்கில், இன்று, தீர்ப்பளிக்க உள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி எஸ்.கே.யாதவ், முன்னாள் துணை பிரதமரும் பா.ஜ.கவின் முத்த தலைவருமான எல்.கே.அத்வானி உட்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும், தீர்ப்பு நாள் அன்று, நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், முன்னாள் அமைச்சர் உமா பாரதி மற்றும் பஜ்ரங் தள்ளை உருவாக்கியவரும் தலைவருமான வினய் கட்டியார் போன்ற பலரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
தீர்ப்பளிக்க உச்சநீதி மன்றம் விதித்த மாத இறுதி காலக்கெடுவுக்காக சிபிஐ சிறப்பு நிதி மன்றம் வேலை செய்து வந்தது. செப்டம்பர் 1-ம் தேதி அரசுத் தரப்பு மற்றும் எதிர்த் தரப்பின் இறுதி வாதங்களைக் கேட்ட நீதிபதி, தீர்ப்பெழுத துவங்கினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் தரப்பின் சில இறுதி ஆவணங்களைக் காணொளி கூட்டத்தின் மூலம் சமர்ப்பித்துள்ளனர்.
1992-ம் ஆண்டு, டிசம்பர் மதம், இந்துத்துவ அமைப்புகள் திரட்டிய “கர சேவகர்கள்”, அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று கூறி பாபர் மசூதியை இடித்தனர். இன்று, மசூதியை இடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், இக்குற்றத்தில் ஈடுபட்டிருந்தார்களா இல்லையா என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ 351 சாட்சிகளையும், சுமார் 600 ஆவணங்களையும் ஆதாரங்களாக நீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
48 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, அவர்களில் 16 பேர் வழக்கு விசாரணை நடந்த இந்த 28 ஆண்டுகளில் இறந்து விட்டனர்.
16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இம்மசூதியை இடிக்கும்படி சதி செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள், “கர சேவகர்களை” தூண்டிவிட்டதாக சிபிஐ வாதிட்டது.
ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என வாதிட்டனர். அரசியல் காழ்ப்புணர்வோடு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பொய்யாக இந்தக் குற்றத்தில் தங்களை தொடர்புபடுத்தியதாகக் கூறினார்கள்.
முகலாய மன்னரான பாபரின் ஆட்சிக் காலத்தில், ராமர் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தன. அதன் உச்சகட்டமாக 1992 டிசம்பர் 6-ம் தேதி இந்த மசூதி கர சேவகர்கள் கும்பல்களால் இடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் பாபர் மசூதி இருந்த நிலத்தின் மீதான உரிமை தொடர்பான ஒரு முக்கிய தீர்ப்பில், உச்சநீதி மன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்கியது, அதே நேரத்தில் மசூதி இடிக்கப்பட்டது சட்ட மீறல் என்று கூறியது. மசூதி கட்டுவதற்கு அப்பகுதியில் மற்றொரு 5 ஏக்கர் இடம் கண்டறிந்து ஒதுக்கும்படி உத்தரவிட்டது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரில் கோயில் கட்டும் பொறுப்பில் உள்ள அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் என்பவரும் ஒருவர்.
தீர்ப்பை வழங்க சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு உச்சநீதி மன்றம் முன்னதாக நிர்ணயித்த காலக்கெடு ஆகஸ்ட் மாத இறுதியாக இருந்தது. ஆகஸ்ட் 22 அன்று இந்த காலக்கெடு ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
நீதிபதி சுரேந்திர குமார் யார்?
கிழக்கு உத்தர பிரதேசத்தின் ஜோன்பூர் மாவட்டத்தில் உள்ள பகான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் வீட்டில் பிறந்த சுரேந்திர குமார், தனது 31 வயதில் மாநில நீதித்துறை சேவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு, அவர் லக்னோ மாவட்ட நீதிபதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டபோது, வழக்கறிஞர் சங்கம் அவருக்கு பிரிவு உபசார நிகழ்ச்சியை நடத்தியது.
ஆனால், உச்சநீதிமன்றம் ஏற்கனவே அவருடைய பதவிக்காலத்தை நீட்டித்து, சிறப்பு நீதிமன்றத்தின் (அயோத்தி வழக்கு) தலைமை நீதிபதியாக தொடர்ந்து செயல்பட்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை முடிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டது.
வழக்கு கடந்துவந்த பாதை
1992 டிசம்பர் 6-ம் தேதி மசூதி இடிக்கப்பட்ட பின் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆர்) பதியப்பட்டது. முதலில் கர சேவ்கர்கள் குழு (இந்துத்துவ அமைப்புகளின் தொண்டர்கள்) மீதும் பின்னர் பாஜக தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீதும் எஃப்ஐஆர் பதியப்பட்டது.
மசூதிக்கு பதிலாக அங்கே ராமர் கோவிலை கட்டுவதற்கான பிரச்சாரத்தை அத்வானி அப்போது துவக்கி வைத்தார்.
அதற்கு பின் மேலும் நாற்பத்தைந்து எஃப்ஐஆர்கள் பதியப்பட்டன. இந்த வழக்கை விசாரிக்க 1993-ம் ஆண்டு ஜூலை 8 அன்று உத்தரப்பிரதேசத்தின் ரே பரேலியில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு, ஜூலை 28 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, 57 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டன.
28 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், உச்சநீதி மன்றம் இந்த வழக்கை மே 30, 2017 அன்று லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றியது.
உச்சநீதி மன்றம், 2019, ஜூலை 19 அன்று இந்த வழக்கின் குற்றவியல் விசாரணையை நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை 6 மாதங்களாக நீட்டித்தது. மேலும், இறுதித் தீர்ப்புக்கு ஒன்பது மாத காலக்கெடுவை நிர்ணயித்தது.
இந்த ஒன்பது மாத காலக்கெடு ஏப்ரல் 19 அன்று முடிந்தது, ஆகையால் சிறப்பு நீதிபதி மே 6 அன்று மீண்டும் கால நீட்டிப்பு வழங்கக்கோரி உச்சநீதி மன்றத்திற்கு கடிதம் எழுதினார்.
உச்சநீதி மன்றம், மே 8 அன்று, தீர்ப்புக்காக ஆகஸ்ட் 31-ம் தேதியை புதிய காலக்கெடுவாக நிர்ணயித்தது. ஆகஸ்டில், உச்சநீதி மன்றம் மீண்டும் காலக்கெடுவை செப்டம்பர் 3 வரை நீட்டித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளனர். இருப்பினும், தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது தனக்கு முக்கியமல்ல என்று கூறிய சிலரில் உமா பாரதி ஒருவர் : “நான் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டால், நான் ஆசீர்வதிக்கப்படுவேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பை வழங்க தயாராக உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமான மூவர் விசாரணையைத் தவிர்க்க வாய்ப்புள்ளது. முன்னாள் அமைச்சர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக இன்று நீதி மன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டிருக்கின்றனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.