Aran Sei

பாபர் மசூதி தீர்ப்பு – ‘சிபிஐ பாஜக அரசின் கூண்டுக்கிளி’ : ஸ்டாலின்

யோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கரசேவை நிகழ்ச்சியின் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

தலைவர்கள் மீதான தனி வழக்கு ரேபரேலி நீதிமன்றத்திலும், ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மீதான தனி வழக்கு லக்னோ நிதிமன்றத்திலும் நடந்தது. கடந்த 28 ஆண்டுகளாக இந்த வழக்கும் வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்தது. இந்நிலையில் லக்னோ சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ளதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 30-ம் தேதி லக்னோ சிபிஐ நீதிமன்ற  நீதிபதி எஸ்.கே.யாதவ் இந்த வழக்கின் தீர்ப்பை அளித்தார். அதில், “ கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. அசோக் சிங்கால் உள்ளிட்ட சங்பரிவார் தலைவர்கள் குழந்தை ராமர் சிலையைப் பாதுகாக்கவே விரும்பினார்கள். குற்றம் சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக சிபிஐ உறுதியான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தாக்கல் செய்யவில்லை. மேலும் சிபிஐ வழங்கிய ஒளி, ஒலி ஆதாரங்களில் நம்பகத்தன்மை இல்லை” என தீர்ப்பளித்துள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “மசூதி மட்டுமல்ல; எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயத்திலும் அநியாயமாகும்; அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும். குற்ற வழக்குகளில் – குறிப்பாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பைச் சீர்குலைத்த “பாபர் மசூதி” இடிப்பு வழக்கில் – நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சிபிஐ, அப்படிச் செயல்பட ஏனோ தவறி, இன்று மத்திய பாஜக அரசின் “கூண்டுக்கிளியாக” மாறிவிட்டது வெட்கக் கேடானது.” என்று கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்! வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,” இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அழிவுச் செயல் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. அந்தக் கொடூர சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், திட்டமிட்டு இச்சம்பவம் நடக்கவில்லை என்று அனைவரையும் விடுதலை செய்திருப்பது நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும். நடுநிலையோடு இப்பிரச்சினையை அணுகுகின்றவர்களின் மனசாட்சி இந்தத் தீர்ப்பு அநீதியின் தீர்ப்பு என்றுதான் கூறும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பிசிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கர சேவகர்களிடம் கீழே இறங்கிவரும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால், கட்டடத்தை இடிக்க வேண்டாம் என்றோ, அல்லது சேதப்படுத்த வேண்டாம் என்றோ அவர்கள் கூறவில்லை. கர சேவகர்கள் மசூதியை இடிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தலைவர்களின் விருப்பமாக இருந்தது என லிபரஹான் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக” என்று தெரிவித்தார்.

“பாபர் மசூதியை இடிக்க யாரும் சதித்திட்டம் தீட்டவில்லை, யாரும் இடிக்கவில்லை என்கிறார்கள். அது என்ன கடவுள் செயலா, இல்லை இடி விழுந்து தரைமட்டமாகிவிட்டதா? சிபிஐ நீதிமன்றம் வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக கருதுகிறோம்.” என்று கூறுயிருக்கிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்