பாஜக தலைவர் வீட்டு வாசலில் மாட்டு சாணத்தைக் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், பஞ்சாப் மாநில பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திக்ஷன் சூட், வேளாண் சட்டத்தை பற்றி அறிந்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாகவும், உண்மையில் டெல்லி எல்லையில் அவர்கள் சுற்றுலாவுக்கு சென்றுள்ளதாகவும் கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டிற்கு முன் சாணத்தைக் கொட்டிய விவசாயிகள் : போராடியவர்களை கைது செய்ய சொல்லி பாஜக தலைவர் தர்ணா
இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, சூட் வீட்டின் முன்பு விவசாயிகள் சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, ஒரு டிராக்டரில் அவர்கள் கொண்டு வந்திருந்த மாட்டு சாணத்தை அவர் வீட்டின் முன்பு கொட்டி தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, மாவட்ட பாஜக தலைவர் சுரீந்தர் பால் பாட்டியா என்பவர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஜனவரி 1 ஆம் தேதி, திக்ஷன் சூட் வீட்டிற்கு அவர் போனதாகவும், அப்போது, டிராக்ட்ரில் கொண்ட வந்த மாட்டு சாணத்தை சிலர் அவர் வீட்டின் முன்கொட்டியதாகவும் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒத்திகை தடுப்பூசி முகாம்கள் என்றால் என்ன? – இதை நடத்த காரணம் என்ன?
பேராட்டம் நடத்தியவர்கள் திக்ஷன் சூட்டை தாக்க முயன்றதாகவும், உடனே அவருடைய ஆட்கள் அதை தடுத்துவிட்டதாகவும், அந்த நேரத்தில் டிராக்டரை ஒட்டியவர், திக்ஷன் சூட்டை நோக்கி மோத வந்ததாகவும் சுரீந்தர் பால் பாட்டியா தனது புகாரில் தெரிவித்துள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையினர், கொலை முயற்சி உட்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல், அச்சுறுத்துதல், கலவரம் செய்தல், சட்டத்திற்குப் புறம்பாக கூடுதல் மற்றும் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறியுள்ளது.
பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய கிசான் சங்கத்தின் ஜலந்தர் மாவட்ட தலைவர் மந்தீப் சிங் “காவல்துறை பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. தாக்குதல் எதுவும் நடைபெறாமல், யாருக்கும் காயமும் ஏற்படாமல், கொலை முயற்சி மற்றும் கலவரம் செய்தல் ஆகிய பிரிவுகள் எவ்வாறு விவாசயிகளுக்கு எதிராக சேர்க்கப்படும்? இந்த வழக்கு திரும்பப் பெறப்படாவிட்டால், ஜனவரி 7 ஆம் தேதி, ஜலந்தர் சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவோம்” என்று கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.