Aran Sei

`பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ – இது பாஜகவின் அரசியல் சதி

அசாமின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சியின் தலைவர் மெளலானா பத்ருத்தின் அஜ்மலை, சில்சார் விமான நிலையத்தில் `பாகிஸ்தான் ஜிந்தாபாத்` எனும் கோஷங்கள் எழுப்பி வரவேற்றதாக அசாமின் பாஜக தலைவர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஏஐயுடிஎஃப், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளனர். ”பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்லும் கட்சியுடன்தான் காங்கிரஸ் கூட்டணி வைக்க விரும்புகிறதா” எனக் கேட்டுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா.

பாஜகவின் தகவல் தொழிற்நுட்பத் தலைவர் அமித் மாலவியா ”தற்போது சில போலியான உண்மையைக் கண்டறியும் நபர்கள் (fact checkers) இது பாகிஸ்தான் சிந்தாபாத் அல்ல ஆசிஸ் கான் சிந்தாபாத் என நம்ப வைக்க முயற்சி செய்வர்” எனக் கூறியுள்ளார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக் சிங்காள், ராஜ்தீப் ராய் ஆகியோரும் இந்தக் காணொலியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

பத்ருத்தின் அஜ்மல் வருகையின் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாகத் தொடர்ந்து செய்தி ஒளிபரப்பி இருக்கிறது அசாமின் செய்தி நிறுவனமான நியுஸ் லைவ். இந்த நிறுவனம் ஹிமாந்தா பிஸ்வாவின் மனைவியால் நடத்தப்பட்டு வருகிறது.

டைம்ஸ் நவ், நியுஸ் 18, ஏசியா நெட் வங்காளம் மற்றும் ஹிந்தி நிறுவனங்களும் பாகிஸ்தான் சிந்தாபாத் எனும் கோஷங்களை ஏஐயுடிஎஃப் தொண்டர்கள் எழுப்பியதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்தியை வெளியிட்ட தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏஐயுடிஎஃப் தரப்பின் வாக்குமூலங்களையும் வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ்பிரசிடம் பேசிய ஏஐயுடிஎஃப் செய்தித் தொடர்பாளர் “பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை ஏஐயுடிஎஃப் தொண்டர்கள் எழுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டு பாஜகவின் அரசியல் சதி” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என ஏஐயுடிஎஃப் தொண்டர்கள் கோஷமிட்டதாக வெளியான காணொலியை ஆய்வு செய்த ஏஎல்டி நியுஸ் ”ஏஐயுடிஎஃப் தொண்டர்கள் ஆசிஸ் கான் ஜிந்தாபாத்” எனக் கூறியதை பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று திரித்துப் பரப்பப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. ஆசிஸ் கான் அகமது அசாமின் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தக் காணொலியில் சொல்லப்பட்டிருப்பதைக் கேட்பதற்கு இயர் போன் (ear phones) அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது ஏஎல்டி நியுஸ்.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஏஐயுடிஎஃப் கட்சி “பாகிஸ்தான் ஜிந்தாபாத் என ஏஐயுடிஎஃப் தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள் என்று, ஹிமந்தா பிஸ்வாவின் நியுஸ் லைவ் செய்தி நிறுவனச் செய்தி முற்றிலும் தவறானது” எனக் கூறியுள்ளது.

”எங்கள் தொண்டர்கள் பத்ருத்தின் ஜிந்தாபாத், ஏஐயுடிஎஃப் ஜிந்தாபாத் , ஆசிஸ் கான் ஜிந்தாபாத் எனும் கோஷங்களையே எழுப்பினார்கள். இதில் ஆசிஸ் கான் ஜிந்தாபாத் எனும் கோஷத்தை பாகிஸ்தான் ஜிந்தாபாத் என பாஜக நிறுவ முற்படுவதாக” அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”2021-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அமைந்துள்ள கூட்டணியில் (காங்கிரஸ், இடதுசாரிகள், ஏஐயுடிஎஃப்) குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் பாஜகவின் அரசியல் சதி இது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்