தனது அரசியல் நிலைப்பாடுகள் பல்கலைக்கழகத்துக்கு பாதிப்பாக பார்க்கப்படுகின்றன என்று நிர்வாகம் கூறியதைத் தொடர்ந்து, அசோகா பல்கலைக் கழகத்திலிருந்து பதவி விலகிய பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா, “டியர் சூப்பர் ஹீரோஸ்” என்று அழைத்து பல்கலைக் கழக மாணவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கல்வியாளரும் அரசியல் விமர்சகருமான பிரதாப் பானு மேத்தா, சென்ற வாரம் அசோகா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் பாஜகவை விமர்சிப்பதன் விளைவுகள் தொடர்பான விவாதத்தை கிளப்பியுள்ளது என்று என்டிடிவி கூறியுள்ளது.
ஜூலை 2019-ல் பிரதாப் பானு மேத்தா அசோகா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பொறுப்பில் இருந்து விலகினார். சென்ற செவ்வாய்க் கிழமை அவர் பேராசிரியர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டார்.
அதைத் தொடர்ந்து 2 நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய அரவிந்த் சுப்பிரமணியனும் அசோகா பல்கலைக் கழகத்திலிருந்து விலகியிருந்தார்.
அசோகா பல்கலைக் கழகம் தனியார் நிதியில் உருவாக்கப்பட்ட முதல் கலைத் துறை கல்விக்கான நிறுவனம் என்று கருதப்படுவதாக என்டிடிவி கூறியுள்ளது. பிரதாப் பானு மேத்தா, அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோர் அதிலிருந்து விலகியது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளதாகவும், பிற பல்கலைக் கழக பேராசிரியர்களும் பிரதாப் பானு மேத்தாவை ராஜினாமாவை திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கத்தை விமர்சித்து ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வந்த பிரதாப் பானு மேத்தா, தனது பொது எழுத்துக்கள் பல்கலைக் கழகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக தனது பதவி விலகல் கடிதத்தில் கூறியிருந்தார்.
பிரதாப் பானு மேத்தாவுக்கு ஆதரவாக போராடி வரும் அசோகா பல்கலைக் கழக மாணவர்கள், அவர் எழுப்பிய பிரச்சினைகளை முன்னிட்டு இன்று முதல் 2 நாட்கள் வகுப்புகளை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
கருத்துரிமைக்கு ஆதரவாக போராடும் அசோகா பல்கலைக் கழக மாணவர்களுக்கு பிரதாப் பானு மேத்தா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்களை, “சூப்பர் ஹீரோஸ்” என்று அழைத்துள்ள அவர், “அவர்களது உற்சாகமளிக்கும் தார்மீக தெளிவையும், ஆழமான அரசியல் அறிவையும்”, “சுதந்திரத்தின் மீதும் ஜனநாயகம் மீதும் கொண்ட அக்கறையை அடிப்படையாகக் கொண்ட எதிர்ப்பையும்” பாராட்டியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், “எதேச்சாதிகாரத்தின் கரும் இருள்” சூழ்ந்துள்ளது என்றும் அதை எதிர்த்து “கொள்கை அடிப்படையிலும் அறிவுரீதியாகவும்” போராட வேண்டும் என்றும், “முக்கியமான விழுமியங்களை ஆதரித்தும் பதில் சொல்லும்படி கோரியும்” போரடும் மாணவர்களின் அமைதியும் தெளிவான வெளிப்படுத்தலும் தனக்கு ஆறுதல் அளிப்பதாக கூறியுள்ளார்.
“உங்கள் முன் அசோகா என்ற நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறது. உங்கள் மூத்தோர்களான நாங்கள் புரிந்து கொள்ளத் தவறியதை உங்கள் போராட்டங்கள் உடனடியாக உள்வாங்கிக் கொண்டன. உங்கள் போராட்டம் இரண்டு தனிநபர்கள் தொடர்பானது இல்லை. இது இந்திய ஜனநாயகத்தின் மீது கவிந்து கொண்டிருக்கும் இருண்ட, அச்சுறுத்தும் மேகத்தைப் பற்றியதும் ஆகும்” என்று பிரதாப் பானு மேத்தா எழுதியுள்ளார்.
“மாணவர்களின் போராட்டம் அசோகா பல்கலைக் கழகத்தின் மதிப்பை உயர்த்தத்தான் செய்யும். நீண்ட கால நோக்கில் உங்கள் குரல் பல்கலைக் கழகத்தை ஒரு சிறந்த பல்கலைக் கழகமாக உயர்த்தும். தனது ஆதர்சங்களையும், மதிப்பீடுகளையும் மீண்டும் உறுதி செய்ய வைக்கும்” என்று பிரதாப் பானு மேத்தா எழுதியுள்ளார்.
முன்னதாக, அசோகா பல்கலைக் கழக வேந்தர் ருத்ராங்ஷு முகர்ஜி, துணைவேந்தர் மாளபிகா சர்க்கார், அறக்கட்டளை தலைவர் ஆஷிஷ் தவன் ஆகியோர் பதவி விலகிய பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா, பேராசிரியர் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோரோடு இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நிர்வாக குறைபாடுகள் உள்ளன என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி தெரிவி க்கிறது.
உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களையும் கல்லூரிகளையும் சேர்ந்த சுமார் 150 அறிவுத்துறையினர் பிரதாப் பானு மேத்தாவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாகவும் என்டிடிவி தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.