Aran Sei

‘விவசாயிகள் சோர்வடையமாட்டார்கள், 6.5 லட்சம் கிராமங்கள் உடன் நிற்கின்றன’ – ராஜஸ்தான் முதல்வர்

“போராடி வரும் விவசாயிகள் சோர்வடைவார்கள், அதனால் போராட்டம் தானாகவே முடிவுக்கு வரும் என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆனால்,விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் இருக்கிறார்கள்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கூறியுள்ளார்.

நேற்று (ஜனவரி 3) ஜெய்ப்பூரில் உள்ள ஷாகீத் ஷம்ராக் பகுதியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தி்ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் அசோக் கெலோட்டும், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டும் பங்கேற்றுள்ளனர்.

ஒன்றிணையும் இந்திய விவசாயிகள் : விவசாய சட்டத்திற்கெதிராகத் தீவிரமடையும் போராட்டம்

அப்போது பேசிய முதல்வர் அசோக் கெலோட், “டெல்லியின் எல்லைகளில் கடும் குளிருக்கு இடையில் விவசாயிகளின் போராட்டம் 39 நாட்களைக் கடந்து நடந்து வருகிறது. ஆனால், மத்திய அரசோ மிகவும் உணர்ச்சியற்றதாக இருக்கிறது. விவசாயிகள் சோர்வடைவார்கள், போராட்டம் தானாக முடிந்து விடும் என்று மத்திய அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான், வேண்டுமென்றே காலம் கடத்தி வருகிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

எல்லாவற்றையும் சந்தை செய்யும் என்றால் அரசு எதற்கு? : வீடியோ

“ஆனால், விவசாயிகள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் தவறான எண்ணங்கள் விரைவிலே தெளிவு பெறும். இந்த விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் மட்டுமே உட்கார்ந்து இருப்பதாக மத்திய அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. அது தவறு. நாட்டில் உள்ள 6.5 லட்சம் கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.

“விவசாயிகளின் தலைவிதியை தீர்மானிக்க மத்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. மத்தியில் ஆளும் பாசிச அரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அதனால் அவர்களுக்கு நாட்டை அழிக்க வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. நாட்டில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்காகவே தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.” என்று அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மாசோதாக்கள் – ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல்

காங்கிரஸ் தொண்டர் ஒவ்வொருவருக்கும் கட்சி சொல்வது என்னவென்றால், ஒவ்வொருவரும் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டும், தேவைப்பட்டால் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தன் கட்சி தொண்டர்களுக்கு கெலோட் அறிவுறுத்தியுள்ளார்.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்