Aran Sei

டெல்லி மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் மசோதா – கேஜ்ரிவால் தலைமையில் இன்று போராட்டம்

Image credit : indianexpress.com

டெல்லி மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் தேசிய தலைநகர் பிரதேச மசோதாவை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்தவுள்ளது.

தேசிய தலைநகர் பகுதி டெல்லி அரசாங்கம் (திருத்த) மசோதா 2021-ஐ மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா துணைநிலை ஆளுனருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும் இடையேயான உறவை மறு வரையறை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கிறது. மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு நிகராக டெல்லியையும் கொண்டு வருவது இதன் நோக்கம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடத்தும் பாஜக – கிரண் பேடியை திரும்பப் பெறுக : நாராயணசாமி எச்சரிக்கை

இதை எதிர்த்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் இன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைப்பாளர் கோபால் ராய் கூறியுள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

“பாஜக ஆளும் மத்திய அரசு டெல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்களை மீண்டும் பறிக்க முயற்சிக்கிறது. டெல்லி சட்டப் பேரவை தேர்தல்களில் மோசமாக தோற்றுப் போனது பாஜக. சமீபத்தில் நடந்த மாநகராட்சி துணைத் தேர்தல்களிலும் எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை. இதனால், மத்தியில் ஆளும் பாஜக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்க சதி செய்கிறது” என்று கோபால் ராய் கூறியுள்ளார்.

“உச்சநீதிமன்றத்தின் ஒரு அரசியல் சட்ட அமர்வின் தீர்ப்பை மாற்றுவதற்கான முயற்சியும் ஆகும், இது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரெஞ்ச் காலனிய அரசை விட கிரண் பேடி மோசமாக செயல்படுகிறார் – குடியரசுத் தலைவரிடம் நாராயணசாமி புகார்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முன்னர், மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசாங்கத்தின் அதிகாரங்களை முடக்க முயற்சித்தது. “எல்லா அதிகாரங்களும் துணைநிலை ஆளுனரிடம் ஒப்படைக்கப்பட்டன, ஒவ்வொரு கோப்பையும் துணைநிலை ஆளுனரின் வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. அதன் விளைவாக பல கோப்புகள் முடங்கிப் போயின, தாமதமாகின” என்று அவர் தெரிவித்துள்ளார்.

துணைநிலை ஆளுனரின் தலையீட்டை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அக்கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவை எதிர்த்து ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்தவுள்ளது. டெல்லி முதலமைச்சரின் முன்னாள் நாடாளுமன்ற செயலர் அனில் பரத்வாஜ் இந்த மசோதாவை “கருப்பு மசோதா” என்று அழைத்து, “அது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தின் மீதும், மக்களின் விருப்பத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கிறது” என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் – குழிதோண்டி புதைக்கப்படும் ஜனநாயகம்

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பு இருக்கும் என்று டெல்லி பாஜக கூறியுள்ளது. “தான் ஒரு யூனியன் பிரதேசத்தில் போட்டியிடுகிறோம், முழு அதிகாரம் கொண்ட மாநிலத்தில் அல்ல என்று ஆம் ஆத்மி கட்சிக்குத் தெரியும். கேஜ்ரிவால் எல்லா அதிகாரங்களும் கொண்ட முதலமைச்சராக விரும்பினால் அவர் முழு அதிகாரம் கொண்ட மாநிலத்தில் போட்டியிட வேண்டும்” என்று டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்