Aran Sei

அர்னாப் சிறையில் – `ஊடகச் சுதந்திரம் பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதை இல்லை’ : காங்கிரஸ்

ட்டடக் கலைஞர் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டியதாக நேற்று கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது மேலும்  ஒரு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, நேற்று மும்பைக் காவல்துறையால் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி மீது காவல்துறையைத் தங்கள் கடமையை நிறைவேற்ற விடாமல் தடுத்ததாகக் கூறி மேலும் ஒரு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்னாப் கோஸ்வாமியின் வீட்டுக்குள் போலீஸ் குழு ஒன்று நுழைய முயற்சிப்பதில் தொடங்கி, அவர் கைது செய்யப்படுவதை வரையிலான நிகழ்வுகளைக் காட்டும் ஒரு 14 நிமிட வீடியோ, புதன் கிழமை காலை நடந்த சம்பவங்களை தெளிவாகக் காட்டுவதாகவும், போலீஸ் தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் வன்முறையைப் பயன்படுத்தியதாக அர்னாப் சொல்வது ஆதாரமற்றது என்பதைக் காட்டுவதாகவும் மும்பை மிரர் தெரிவிக்கிறது.

ராய்கரைச் சேர்ந்த போலீஸ் குழு துணை மேற்பார்வையாளர் பிரவீன் பட்டீல் தலைமையில் அர்னாப் கோஸ்வாமியின் வீட்டை காலை 7 மணி அளவில் சென்றடைந்தது. காவல்துறையினர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு, வீட்டுக்குள்  இருந்தவர்கள் கதவைத் திறக்க மறுக்கின்றனர். அர்னாப் கோஸ்வாமி கதவைத் திறந்தவுடன், பிரவீன் பட்டீல் அவரை வெளியில் வரும்படி கூறுவதையும், அதற்குப் பதிலாக அர்னாப் கதவை மூட முயற்சிப்பதையும் வீடியோவில் காண முடிகிறது. அப்போது பட்டீல் அர்னாப் கோஸ்வாமியைப் பிடிக்க முயற்சிக்கிறார். போலீசார் வீட்டுக்குள் நுழைகின்றனர்.

அதைத் தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமியும் அவரது மனைவியும் தொடர்ந்து, அர்னாப் “உடல் ரீதியாகத் தாக்கப்பட்டார்” என்று பல முறை தொடர்ந்து கூறுகின்றனர்.

போலீஸ் அதிகாரி பட்டீல், மீண்டும் மீண்டும் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, போலீசுடன் ஒத்துழைக்கும்படி அர்னாப் கோஸ்வாமியைக் கேட்கிறார். அவர் கைது செய்யப்படுவதாகவும் அலிபாகுக்குக் கொண்டு செல்லப்படுவார் என்றும் பட்டீல் தெரிவிக்கிறார். ஆனால், கோஸ்வாமி தொடர்ந்து, “அவங்க என்னை உடல் ரீதியாகத் தாக்கினார்கள்” என்று மட்டும் சொல்கிறார்.

ஒரு பெண் போலீஸ் அதிகாரி, அர்னாப் கோஸ்வாமியின் மனைவியிடம் கைது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கூற, அர்னாப் எந்த ஆவணத்திலும் கையெழுத்திட வேண்டாம் என்று கத்துகிறார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு மும்பை போலீஸ் குற்றவியல் பிரிவு உதவி ஆய்வாளர் சச்சின் வேஸ் உள்ளே வந்து அர்னாபிடம் ஒத்துழைக்கும்படி கேட்கிறார். அர்னாபோ, அப்போதுதான் உள்ளே வந்த சச்சின் வேஸும் தன்னைத் தாக்கினார் என்று குற்றம் சாட்டுகிறார். இறுதியில் ஒருவழியாக 13 நிமிடங்களுக்குப் பிறகு போலீஸ் அர்னாபைப் பிடித்துக் கைது செய்கின்றனர்.

இது தொடர்பாக, அர்னாப் கோஸ்வாமி, அவருடைய மனைவி சயம்பத்ரா ரே மற்றும் அவரது மகன் மீது என் எம் ஜோஷி காவல் நிலையத்தில் எஃப் ஐ ஆர்  பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 353 – அரசு ஊழியரை தங்கள் வேலையைச் செய்ய விடாமல் தடுத்தல், 504 – அவமதிப்பு மற்றும் வன்முறையைத் தூண்டியது, 506 – குற்றம் கருதி மிரட்டுவது, 34 – கூட்டு நோக்கத்துடன் குற்றத்தைச் செய்வது ஆகிய பிரிவுகளில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி மும்பை மாநகரம் அலிபாக்கில், 53 வயதான அன்வே நாயக் எனும் கட்டடக் கலைஞர் தற்கொலை செய்து கொண்டார். ரிபப்ளிக் டிவியின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, ஸ்கை மீடியாவைச் சேர்ந்த ஃபெரோஸ் ஷேக் மற்றும் ஸ்மார்ட்வொர்க்ஸைச் சேர்ந்த நீதிஷ் சார்தா ஆகிய மூவரும் தனக்குத் தர வேண்டிய 5 கோடியே 40 லட்சம் ரூபாயைத் தர மறுத்ததால் தற்கொலை செய்து கொள்வதாக தன்னுடைய இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு மும்பை போலீசால் மூடப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட அன்வே நாயக்கின் மகளின் முறையீட்டைத் தொடர்ந்து, இந்த வழக்கை மறு விசாரணை செய்யும்படி மகாராஷ்டிரா அரசின் குற்றவியல் புலனாய்வுத் துறை ( சிஐடி) க்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக இப்போது அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை மதியம் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த அலிபாக் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது, அர்னாப் கோஸ்வாமி மீது வன்முறை செலுத்தப்பட்டதாக அவரும் அவரது வழக்கறிஞரும் குற்றம் சாட்டினர்.

அதைத் தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. மாலையில் அவர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது, மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் வன்முறை பிரயோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

நீதிபதி அவரை 14 நாள் நீதித்துறைக் காவலுக்கு அனுப்பியுள்ளார் என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது பிணை மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அர்னாபின் கைதிற்குப் பாஜக தலைவர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளது ”ஊடகச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த எமர்ஜென்சியை இது நினைவூட்டுவதாகவும்” பாஜக தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுப்ரியா ஷிண்டே அர்னாபின் கைது குறித்த கேள்விக்குப் பதிலளித்தார். அவர், “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைந்த மாநிலங்களில் நிரபராதிகள் தண்டிக்கப்படமாட்டார்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரை சட்டம் அதன் கடமையைச் செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

சுப்ரியா ஷிண்டே credits : the hindu
சுப்ரியா ஷிண்டே image credit : the hindu

மேலும் பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என பாஜகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சுப்ரியா “சுதந்திரமான யாரையும் கண்டு அஞ்சாத பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டபோது எங்கே சென்றீர்கள்? பிரஷாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டபோது எங்கே சென்றீர்கள்? வாரணாசியின் அவல நிலையைச் சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் சுப்ரியா மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டபோது எங்கே சென்றீர்கள்? உ.பியில் நடந்த பிபிஇ ஊழலை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் மீதே எஃப் ஐ ஆர் போடப்பட்டதே, அதற்குப் பாஜகவின் பதில் என்ன” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஊடகச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசத் தகுதியற்ற கட்சி பாஜக. ஊடகங்களைத் தங்கள் அதிகாரம் மூலம் மிரட்டி அடிபணிய வைத்துத் தங்கள் கட்டுக்குள் வைக்க முயலும் கட்சி பாஜக ” எனக் கூறியுள்ளார் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர்.

அர்னாப் கோஸ்வாமியைக் கைது செய்ததற்காகத் தற்கொலை செய்து கொண்டவரின்  மனைவி மற்றும் மகள் இருவரும் மகாராஷ்டிரா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்