Aran Sei

அர்னாப் கோசாமிக்கு எதிரான வழக்கு – முக்கிய பிரிவை நீக்கியது போலீஸ்

ரிபப்ளிக் தொலைகாட்சியின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் பிரதான குற்றச்சாட்டு நீக்கப்பட்டிருப்பதாக தி வயர் தெரிவிக்கிறது.

ரிபபளிக் டிவிக்கு உள்ளரங்க வடிவமைப்பு செய்து கொடுத்த அன்வய் நாயக், தனக்கு கொடுக்கப்பட வேண்டிய 5.40 கோடி ரூபாய் கொடுக்கப்படாததால் தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய தற்கொலை குறிப்பில், அர்னாப் கோசாமி, ஃபெரோஸ் ஷேக் மற்றூம் நிதிஷ் சர்தா ஆகியோர் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டிருந்தார்.

2018 ஆம் ஆண்டு இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டு, சாட்சியங்கள் இல்லை என்று கூறி வழக்கு முடித்துவைக்கப்பட்டது. பிறகு, கடந்த நவம்பர் மாதம் மீண்டும் இந்த வழக்கில் விசாரணை தொடங்கிய போது, அர்னாப் கோசாமி , ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதிஷ் சர்தா அலிபாக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைதான ஒரு வாரத்திற்குள்ளேயே உச்சநீதிமன்றம் வரை சென்று ஜாமீன் பெற்றார் அர்னாப்.

இப்போது, அர்னாப் கோஸ்வாமிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையில் முக்கியமான குற்றச்சாட்டு நீக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 34-ன் [கூட்டுநோக்கோடு குற்றச்செயலை புரிவது] கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த குற்றம் நீக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபோது, மூன்று பேரும் சேர்ந்து திட்டமிட்டே நாயக்கை தற்கொலைக்கு தூண்டியதாக சேர்க்கப்பட்டிருந்தது.
2019 ஆம் ஆண்டில் வழக்கு முடித்து வைக்கப்பட்டபோது, மூன்று பேரும் சேர்ந்தே தற்கொலைக்கு தூண்டினார்கள் என நிரூபிக்க போதுமான காரணங்கள் கிடைக்கவில்லை என விசாரணை செய்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் காவல்துறை ஆய்வாளர் ஜமில் ஷேக், நாயக்கின் ஊழியர்களின் வாக்குமூலங்கள், வங்கி அறிக்கைகள், மின்னஞ்சல்களில் எல்லாம் கடனை செலுத்த முடியாதது தான் நாயக்கின் தற்கொலைக்கு காரணம் என்பதை நிரூபிக்க சாட்சியங்கள் இருப்பதாக சொல்கிறார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வளியிட்டுள்ளது.

மேலும் அதே செய்தியில், ரிபப்ளிக் டிவிக்கு செய்த வேலைக்கு பணம் தரவில்லையென்றால் உயிர் வாழ்வதே கஷ்டமாகிவிடும் என நாயக் தெரிவிக்கும் “உறுதியான சாட்சியம்” இருப்பதாக விசாரணை செய்யும் வேறொரு அதிகாரி தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக “வலிமையான குற்றப்பத்திரிக்கை” பதிவு செய்யப்படும் என்று மஹாராஷ்ட்ர அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்திருந்தார். உடனே அர்னாப் கோசாமி, மும்பை உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வதற்கு தடை விதிக்க கோரி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் 34-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீக்கப்பட்டிருந்தாலும், சட்டப்பிரிவு 306 ( தற்கொலைக்கு தூண்டல்), சட்டப்பிரிவு 109 ( தற்கொலைக்கு தூண்டியதற்கு தண்டனை) ஆகிய குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருக்கின்றன. 1,914 பக்கங்க குற்றப்பத்திரிக்கையில், 65 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவற்றில் பலருடைய வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்