Aran Sei

” நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு, விவசாய சட்டங்களை ரத்து செய்க ” – முன்னாள் இராணுவத்தினர்

டெல்லிக்கு அருகில் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் - Image Credit : thewire.in

மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக, டெல்லி எல்லையில் அமைதியாக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு நிபந்தனையற்ற, முழுமையான ஆதரவு தெரிவித்து 128 முன்னாள் இராணுவத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“போராடும் விவசாயிகளுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்கிறோம். அவர்களது கோரிக்கைகளை ஆதரிக்கிறோம்” என்று முன்னாள் இராணுவத்தினர் எழுதியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

“முதன்மையாக தொடர்புள்ளவர்களுடன் முன் கூட்டியே எந்த ஆலோசனையும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

நவம்பர் 26, 27 தேதிகளில் விவசாயிகள் டெல்லியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது அவர்கள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு, நீர் பீரங்கி தாக்குதல் நடத்தியதை முன்னாள் இராணுவத்தினர் கண்டித்துள்ளனர்.

“நாங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் ஆதரிக்கவும் உறுதி அளிக்கிறோம். அமைதியான எதிர்ப்புகளில் தோளோடு தோள் நிற்கிறோம். இந்த ஜனநாயக போராட்டத்தோடு நிற்கிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இராணுவப் படையினரில் 80 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் இந்த இயல்பான ஜவான்-கிசான் (படைவீரர்-விவசாயி) இணைப்பின் பகுதியாக இருப்பவர்கள் என்றும் இந்த இராணுவ முன்னாள் வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

“இந்த இயல்பான இணைப்பின் முக்கியத்துவத்தை புறக்கணிப்பது நமது நாட்டின் பாதுகாப்பை மோசமாக பாதிக்கக் கூடும்” என்று எச்சரித்துள்ள அவர்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி அரசை மறுபடியும் வலியுறுத்தியுள்ளனர் என்று தி வயர் தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள 128 முன்னாள் இராணுவத்தினரின் பட்டியலையும் தி வயர் வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்