குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு வழக்கமான ஜமீனை நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டால், அவர் முன் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கின் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஜாமீனில் வெளியே வந்தபோதும் குற்றம் சாட்டப்பட்டவர் “ஆக்கபூர்வமான சட்டக் காவலில்” தான் உள்ளார் என்று நீதிபதி நவின் சின்ஹா தலைமையிலான அமர்வு விளக்கியுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மனீஷ் ஜெயின் என்பவர் முன் ஜாமீன் கோரிய வழக்கில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வழக்கில் கைதான மனீஷ் ஜெயினுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் அவர் அடுத்தடுத்த விசாரணைகளுக்கு ஆஜராகவில்லை. எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் 174 ஏ பிரிவின் கீழ் அவரது வழக்கமான ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தது. அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் கைது செய்யப்படுவோமோ எனும் அச்சத்தில் மணீஷ் முன்ஜாமீன் கோரியுள்ளார்.
“ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஒருவர் ஆக்கபூர்வமான ச சட்டக் காவலில் தான் உள்ளார். சட்டப்படி, குறிப்பிட்ட காரணங்களுக்காக அவரை மீண்டும் காவலில் வைக்க வேண்டும் எனும் தேவை ஏற்பட்டால், முன் ஜாமீன் பெற்றாலும் அதைத் தடுக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
“ஏற்கனவே சட்டத்தின் காவலில் இருக்கும் ஒருவருக்கு கைதாகி விடுவோமோ எனும் அச்சம் இருக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனீஷ் ஜெயினின் முன் ஜாமீன் முனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சரணடைந்து வழக்கமான ஜாமீனை பெற்றுக்கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பான நீதிமன்றம் அவரது வழக்கமான ஜாமீன் மனுவை எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் பரிசீலிக்கும் என்றும் நீதிபதி நவின் சின்ஹா தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.