Aran Sei

தொழில்நுட்ப பிரச்சினையா, காலி மைதானமா? ஜார்கிராம் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன?

image credit : thewire.in

த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடாகியிருந்தது. ஆனால், மதியம் 12.35 மணியளவில், அமித் ஷா நேரில் வர மாட்டார் என்றும் இணைய வழி பேசுவார் என்றும் பாஜகவின் ஊடக ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.

மதியம் 1 மணிக்கு மேல் பாஜகவின் மேற்கு வங்க பேஸ்புக் பக்கத்தில் ஒரு நேரலை ஒளிபரப்பு தொடங்கியிருக்கிறது. அமித் ஷா சுமார் 7 நிமிடங்களுக்கு மட்டும் பேசினார் என்று தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

வேட்புமனு தாக்கல் செய்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி காயமடைந்து மருத்துவமனையில் – சதித்திட்டம் என்று குற்றச்சாட்டு

294 உறுப்பினர்கள் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தல், வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இப்போது நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பாஜகவின் தலைவர்களான நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

“தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் இங்கு வரவிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, என்னுடைய ஹெலிகாப்டர் சேதமாகி விட்டது. எனவே என்னால் நேரில் வர முடியவில்லை. என்னுடன் மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், எங்களது பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோரும் உள்ளனர்” என்று அமித் ஷா தனது இணைய வழி உரையில் பேசியுள்ளார்.

போதுமான அளவு கூட்டம் கூடாததால்தான் அமித் ஷா கூட்டத்தை ரத்து செய்து விட்டதாக பெயர் கூற விரும்பாத ஒரு உள்ளூர் பாஜக தலைவர் தெரிவித்ததாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பிப்ரவரி மாதம் 9-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, ஜார்கிராமின் லால்கரில் குறைவான கூட்டமே கூடியதால் திட்டமிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் திரும்பி விட்டிருக்கிறார்.

அதே போல, மார்ச் 7-ம் தேதி, கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானங்களில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பல பாஜக தலைவர்களும் பேச விருந்தனர். அதில் பெரிய அளவு கூட்டம் கூடியிருக்கவில்லை என்றும் மோடியின் ஹெலிகாப்டர் பக்கத்தில் உள்ள ரேஸ் கோர்சில் இறங்குவதற்கு முன் கூட்டம் சிறிதளவு அதிகரித்தது என்றும் தி வயர் தெரிவிக்கிறது.

பெரிய மைதானத்தை சிறு பகுதிகளாக பிரித்து கூட்டத்தை ஒரே இடத்தில் குவித்து, காமராக்களில் நிறைய கூட்டம் இருப்பது போல தெரியும்படியான ஏற்பாட்டை பாஜக பின்பற்ற ஆரம்பித்திருக்கிறது.

மேற்கு வங்க பாஜக வேட்பாளர்கள் பட்டியல் – எதிர்ப்பு தெரிவித்து வெளியேறும் அதிருப்தி தலைவர்கள்

ஆனால், ஜார்கிராம் நாடாளுமன்ற தொகுதியி்ல 2019-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது, எனவே, அமித் ஷாவின் கூட்டத்தில் போதுமான கூட்டம் கூடவில்லை என்பதை வைத்து பாஜகவின் வாய்ப்புகளை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களில் பெரும்பகுதியினரும், பெரிய எண்ணிக்கையில் உள்ள இன்னொரு பிற்படுத்தப்பட்ட சாதியான மகாத்தோக்களும், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அடக்குமுறைக்கு அஞ்சி தங்களது அரசியல் ஆதரவை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை என்றும் தி வயர் கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்