Aran Sei

“பேச்சுவார்த்தையை அமித்ஷா திசை திருப்பினார்” – போராடும் விவசாயிகள் குற்றச்சாட்டு

Image Credit : thehindu.com

ரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது பற்றிய முடிவை இன்று எடுக்கவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. ஒன்றிய விவசாய இணைச் செயலர் விவேக் அகர்வால், ஞாயிற்றுக் கிழமை விவசாய சங்கங்களுக்கு எழுதிய கடிதத்தில் பேச்சுவார்த்தைக்கான நாளையும், நேரத்தையும் குறிப்பிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்தக் கேள்வி பஞ்சாப் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டியில் விவாதிக்கப்பட்டது. ஆனால், நேர நெருக்கடி காரணமாக, போராட்டத்தை ஒருங்கிணைக்கும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சம்யுக்த கிசான் மோர்ச்சா, செவ்வாய்க் கிழமை கூடி விவாதிக்க முடியவில்லை என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

விவசாயிகள் போராட்டம் – ” பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு உண்மைகளை திரிக்கிறது”

“பேச்சு வார்த்தை தொடர்பான முடிவு இன்று எடுக்கப்படும்” என்று சிங்கு எல்லையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விவசாயத் தலைவர் குல்வந்த் சிங் சாந்து கூறியுள்ளார்.

போராட்டம் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்றும், விவசாயிகளின் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாதது வரையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியக் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அவரிடம் வலியுறுத்துமாறு, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விவசாய சங்கங்கள் கடிதம் எழுதவிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய விவசாயிகள் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் செயற்குழு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விவசாய அமைச்சகத்தின் கடிதம் அரசுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் இல்லை என்பதைக் காட்டுவதாகக் கூறியுள்ளது.

“சட்டங்களில் இருக்கும் பிரச்சனை அவற்றின் குறிக்கோள்களில் உள்ளது. அதன்படி கார்ப்பரேட்டுகள் விவசாயிகளுடன் ஒப்பந்த விவசாயம் செய்வதற்கும், உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து கருப்புச் சந்தையில் விற்பதற்கும் சட்ட ரீதியான உரிமைகளைப் பெறுகிறார்கள்.” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

“விவசாய அமைச்சர் வேண்டுமென்றே உண்மைகளை திரித்து, பேச்சுவார்த்தை தொடர்பாக பணிவாகவும் திறந்த மனதோடும் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார். உண்மை என்னவென்னறால் AIKSCC-ம் மற்றவர்களும், சட்டங்களை இரத்து செய்யும்படி இலட்சக்கணக்கான மனுக்களை அனுப்பியுள்ளோம். அவற்றை அரசு கண்டுகொள்ளவில்லை” என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் சபையின் நிதிச் செயலரும் முன்னாள் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான பி கிருஷ்ண பிரசாத், பேச்சுவார்த்தை தொடர்பான தேக்க நிலைக்கு அரசாங்கம்தான் பொறுப்பு, விவசாயிகள் அல்ல என்று கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற சந்திப்பில் விவசாய அமைச்சர் நரேந்தர் தோமரும், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயலும், சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை அமைச்சரவையின் முன் வைத்து, டிசம்பர் 9-ம் தேதி பதில் அளிப்பதாகக் கூறியிருந்தனர். ஆனால், டிசம்பர் 8-ம் தேதி உள்துறை அமைச்சர் தலையிட்டு, சட்டங்களின் ஒவ்வொரு ஷரத்தாக விவாதிக்கலாம் என்று கூறினார் என்று அவர் கூறியுள்ளார்.

“இது ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையாக இல்லாத நிலையில் விவாதங்களில் உள்துறை அமைச்சருக்கு எந்தப் பங்கும் இல்லை. அமித் ஷா சொன்னது அமைச்சரவையின் கருத்தாக இருந்தால், விவசாய அமைச்சரும் வர்த்தக அமைச்சரும் 8-ம் தேதி நடந்த கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்காத விவசாய அமைப்புகளுடன் அரசு இணையாக பேச்சு வார்த்தை நடத்துவது “தார்மீக ரீதியில் தவறானது” என்று கூறிய கிருஷ்ண பிரசாத், அது விவசாய சங்கங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று காண்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், விவசாய அமைச்சர் நரேந்திர தோமர், விவசாயச் சட்டங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேல் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் படி கொண்டு வரப்பட்டுள்ளன என்றும், அவை இந்திய விவசாயத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றும், போராடும் விவசாய சங்கங்களுடன் ஒவ்வொரு ஷரத்தாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளது என்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பேசும் போது கூறியிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்