Aran Sei

ஜம்மு & காஷ்மீர் – ‘ எதிர்க்கட்சி ஒற்றுமையில் கடுப்பாகிறார் அமித் ஷா ‘

Image Credits: The Print

வம்பர் 28-ம் தேதி முதல் ஜம்மு & காஷ்மீரில் மாவட்ட கவுன்சில் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த கட்சிகளின் கூட்டணியான குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை கடுமையாக தாக்கியுள்ளார்.

“குப்கர் கும்பல் உலக அளவில் போய்க் கொண்டிருக்கிறது! அன்னிய சக்திகள் ஜம்மு & காஷ்மீரில் தலையிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். குப்கர் கும்பல் இந்திய மூவண்ணக்கொடியையும் அவமதிக்கிறது. சோனியாஜியும், ராகுல்ஜியும் குப்கர் கும்பலின் இந்த செயல்களை ஆதரிக்கிறார்களா? தங்களது நிலைப்பாட்டை அவர்கள் இந்திய மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“காங்கிரசும் குப்கர் கும்பலும் ஜம்மு & காஷ்மீரை பயங்கரமும் குழப்பமும் நிறைந்த காலத்துக்கு திரும்ப எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள்.” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஒன்றிய அரசு ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவை நீர்க்கச் செய்து அம்மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பிறகு முதல் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தல் எட்டு கட்டங்களாக நவம்பர் 28 முதல் டிசம்பர் 19 வரை நடக்கவுள்ளது, வாக்குகள் டிசம்பர் 22 அன்று எண்ணப்படும்.

இதில் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இக்கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு & காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இந்தக் கூட்டணியுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்ள காங்கிரஸ் கட்சி முடிவு செயதுள்ளது.

ஓரணியில் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் – மாவட்ட கவுன்சில் தேர்தலில் போட்டி

அமித் ஷாவின் இந்தத் தாக்குதலுக்கு குப்கர் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்டி பதிலடி கொடுத்துள்ளார்.

“ஒரு கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவதும் இப்போது தேச விரோதமாம். அதிகார வெறிக்காக எத்தனை கூட்டணிகளை வேண்டுமானாலும் பாஜக ஏற்படுத்திக் கொள்ளலாம், ஆனால், நாங்கள் ஒரு ஒருமித்த முன்னணியை அமைப்பதன் மூலம் எப்படியோ தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கிறோமாம்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“முன்பு பாஜக துக்டே துக்டே கும்பல் இந்தியாவின் இறையாண்மையை அச்சுறுத்துவதாக கதை சொல்லியது. இப்போது அவர்கள் ‘குப்கர் கும்பல்’ என்ற சொல்லை பயன்படுத்தி எங்களை தேச விரோதிகளாக முன் வைக்கின்றனர். தினம் தினம் அரசியல் சட்டத்தை மீறிக்கொண்டிருக்கும் பாஜகவின் இந்த குற்றச்சாட்டு வேடிக்கையிலும் வேடிக்கை” என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் கூட்டணியைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் ஓமர் அப்துல்லா. “தேர்தலில் பங்கேற்பதாலும் ஜனநாயக நடைமுறையை ஆதரிப்பதாலும் தலைவர்கள் கைது செய்யப்படுவதும் தேச விரோதிகள் என்று அழைக்கப்படுவதும் ஜம்மு & காஷ்மீரில் மட்டும்தான் நடக்கும். பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்க்கும் எல்லோருமே ‘ஊழல்வாதிகள்’ என்றும் ‘தேச விரோதிகள்’ என்றும் முத்திரை குத்தப்படுகின்றனர் என்பதுதான் உண்மை” என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும், “மக்கள் கூட்டணி தேர்தல்களை புறக்கணிக்கப் போவதாக அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி நடந்திருந்தால் பாஜகவும், புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் அரச விசுவாச கட்சி தடையின்றி ஜம்மு & காஷ்மீரில் வெற்றி பெற சாதகமாகியிருக்கும். நாங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அமித் ஷா கடுப்பாகியுள்ளார்” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

“பாஜக-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதத்தை கொண்டு வருவதற்காகவா ஏற்படுத்தப்பட்டது” என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் ட்வீட் செய்துள்ளார்.

2014 சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியானது மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து ஜம்மு & காஷ்மீரில் ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

லடாக் தன்னாட்சி மலை கவுன்சில் தேர்தல்களில் குறைந்த இடங்களை மட்டுமே வெல்ல முடிந்த பாஜக ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளை ஜம்மு&காஷ்மீரில் எதிர்கொள்ள முடியாமல் போகும் நிலையில் அமித் ஷா இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

லடாக் தன்னாட்சி கவுன்சில் தேர்தல் – பாஜகவுக்கு வெற்றி

“ஜனநாயக நடைமுறையில் பங்கேற்பது பாஜகவுக்கு வேண்டுமானால் ‘கும்பல்களின்’ பணியாக இருக்கலாம், ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது புனிதமானது. ஜம்மு & காஷ்மீரில் அரசியல் கட்சிகளின் ஒத்த கருத்தும், ஒற்றுமையும் பாஜகவை தொந்தரவு செய்கிறது. சர்வாதிகார அரசு எங்களுக்கு என்ன முத்திரை குத்தினாலும் கவலைப்படாமல் அரசியல் சட்ட உரிமைகளை மீட்பதற்கு நாங்கள் போராடுவோம்” என்று சிபிஐ (எம்) கட்சித் தலைவர் எம் ஒய் தாரிகாமி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்