அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் மிக முக்கியமான சட்டசபை தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி அதன் சமூக வலைதள பிரிவு தலைவர் அமித் மால்வியாவை, வங்காளத்தின் இணை பொறுப்பாளராக நியமித்திருக்கிறது.
புதிய பதவிக்கு வந்த உடனேயே, “வங்காளம் எனக்கு மிக முக்கியமான மாநிலம். இந்த மாநிலத்திற்கு இணை பொறுப்பாளராக நியமிக்கப்படுவது எனக்குப் பெருமை” என கட்சியின் மேலிடங்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார் அமித் மால்வியா.
பாஜக எந்தளவு சமூக வலைதளங்களை நம்பியிருக்கிறது என்பதை இந்த பதவி நியமனம் குறிக்கிறது என பல அரசியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
கல்கத்தாவின் சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் அரசியல் விஞ்ஞாயன பேராசிரியர் மைதுல் இஸ்லாம், “ அமித் மால்வியா வங்காளத்தில் பாஜகவின் இணை பொறுப்பாளராக அமர்த்தப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, 2019-ல் அவர் நல்ல வளர்ச்சியை உருவாக்கியது. இரண்டாவது, மால்வியா 2021 தேர்தலுக்கு முன் நிறைய போலிச் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி பிரச்சாரம் செய்வார் என பாஜக நம்புவது. பாஜகவின் முக்கியமான பலங்களில் ஒன்று சமூக வலைதள இயக்கம்” என்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சௌகதா ராய், “அமித் மால்வியா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியோ, பாஜகவிற்கு களப்பணி செய்தவரோ அல்ல. அவர் வங்காளத்தின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு முழுக் காரணமும் அவர் போலி செய்திகளை சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வார் என்பது தான். அவரால் அதை மட்டும் தான் சிறப்பாக செய்ய முடியும். இதனால் பாஜகவின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஏகப்பட்ட போலி செய்திகள் வருவதை இனி நம்மால் பார்க்க முடியும்” என தி வயரிடம் பேசும் போது பகிர்ந்து கொண்டார்.
மேலும் அவர் , பாஜகவின் சமீபத்திய நடவடிக்கைகள் எல்லாமே வங்காள பாஜக தலைவர்கள் மீது கட்சிக்கு நம்பிக்கை இல்லாததை சுட்டிக் காட்டுவதாக இருப்பதை குறிப்பிட்டார். “பாஜக அதன் டில்லி தலைவர்களை எல்லாம் வங்காளத்தை கட்டுப்படுத்த இறக்கிக் கொண்டிருக்கிறது. இங்கிருக்கும் தலைவர்கள் மீது கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்பதை தான் இது காட்டுகிறது” என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத வங்காள பாஜக தலைவர் ஒருவர், “அமித் ஜி 2019 பொது தேர்தலின் போது பாஜகவிற்கு தேவையாக இருந்த உந்துதலை கொடுத்தார். அவரை வங்காளத்தின் இணை பொறுப்பாளராக நியமித்தது யோசித்து எடுக்கப்பட்ட முடிவு தான். வங்காளத்தில் பாஜகவின் சமூக வலைதள இயக்கத்தை அமித் ஜி பலப்படுத்துவார்” என்றார்.
அமித் மால்வியாவும் போலிச் செய்திகளும்!
கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவின் சமூக வலைதள இயக்கத்தை கவனித்து வரும் அமித் மால்வியாவிற்கு போலிச் செய்திகளை பரப்புதலில் நீண்ட வரலாறு இருக்கிறது. இவருடைய ட்வீட்களும், போஸ்ட்களும் செய்திகளின் உண்மையை பரிசோதிக்கும் நிறுவனங்களால் பல முறை அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆல்ட் நியூஸ் நிறுவனம், அமித் மால்வியா தனி நபர்களையும், சமூகங்களையும், எதிர்க்கட்சிகளையும், தலைவர்களையும், இயக்கங்களையும் இழிவுபடுத்த போலிச் செய்திகளை பரப்புவதாக தெரிவித்திருக்கிறது.
இந்நிறுவனம் ஒரு புலனாய்வு அறிக்கையில், அமித் மால்வியா போலிச் செய்திகளை பரப்பிய 16 தருணங்களை பட்டியலிட்டிருந்தது. பல முன்ணணி பாஜக தலைவர்கள், மால்வியாவின் ட்வீட்களையும் போஸ்ட்களையும் உண்மைத்தன்மையை பரிசோதிக்காமலேயே பகிர்வதால், போலிச் செய்திகள் பெரியளவு பிரச்சாரங்களாக மாறுகின்றன.
ஜனவரி 15 அன்று, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட டில்லியின் ஷஹீன் பாக்கில் பெண்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக ஆட்கள் பேசும் ஒரு வீடியோவை அமித் மால்வியா பகிர்ந்திருந்தார்.
பல செய்தி நிறுவனங்கள் மால்வியாவின் இந்த ட்வீட்டை செய்திகளாக வெளியிட்டன; சில செய்திச் சேனல்கள் இதை வைத்து விவாத நிகழ்ச்சிகள் கூட நடத்தியன. பிறகு, ந்யூஸ்லாண்ட்ரி (newslaundry) மற்றும் ஆல்ட் ந்யூஸ் (altnews) நிறுவனங்கள் இணைந்து நடத்திய விசாரணையில், இப்படி ஒரு நிரூபிக்கப்படாத தகவலை போராட்டக் களத்திற்கு எட்டு கிமீ தொலைவில் ஒரு இடத்தில் இருந்து மூன்று பேர் முன் வைத்ததாகவும், அதில் ஒருவர் அதை வீடியோ எடுத்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
பாஜக இந்த போலி பிரச்சார வீடியோவை அதன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தது. சில டிவி சேனல்களும், இணையதளங்களும் இந்த போலி பிரச்சாரத்திற்கு உதவியாக இருந்தன.
2019 மக்களவை தேர்தலின் போது, வித்யாசாகர் கல்லூரி மாணவர் ஒருவர் எழுதியதாக ஒரு பதிவை மால்வியா பகிர்ந்தார்.
அந்தப் பதிவில் வடக்கு கல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பேரணி நடந்த போது கல்லூரி வளாகத்திற்குள் எப்படி வன்முறை வெடித்தது என்பது குறித்து எழுதப்பட்டிருந்தது. அந்த ‘மாணவர்’ திரிணாமுல் காங்கிரஸ் தான் வளாகத்திற்குள் இருந்த ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் உருவச்சிலை உடைக்கப்பட்டதற்கு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.
கொஞ்ச நேரத்திலேயே பலர் இந்தப் பதிவை அவர்கள் எழுதியது போல ‘ நான் வித்யாசாகர் கல்லூரியின் மாணவர்’ என பகிரத் தொடங்கினர். “இன்றைக்கு ஃபேஸ்புக்கில் எல்லோருமே ’நான் வித்யாசாகர் மாணவன் தான் போல’ ” என பகடி பதிவுகளையும் பார்க்க முடிந்தது.
சமூக வலைதள போர்!
எந்த அளவீட்டை வைத்து பார்த்தாலும், சமூக வலைதள இயக்கத்தில் பாஜக மற்ற கட்சிகளை விட இந்திய அளவில் முன்னே தான் இருக்கிறது. வங்காளத்திலும் கூட, பாஜகவின் சமூக வலைதளப் பணி தீவிரமாக இயங்குவதாகவும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸை எதிர்த்து நிற்க முக்கிய கருவியாகவும் இருக்கிறது.
வங்காளத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியாதது பாஜகவிற்கு சவாலாக இருந்தது. இது தான் அக்கட்சி வங்காளத்தில் சமூக வலைதள துறையில் அதிகளவு ஈடுபட்டு இருப்பதற்கு காரணம்.
லண்டன் சென்று திரும்பிய 39 வயதான உஜ்வால் பரீக், வங்காளத்தில் பாஜகவின் சமூக வலைதள இயக்கத்தை ஒருங்கிணைப்பவராக இருக்கிறார். 70,000 வாட்ஸப் குழுக்கள் உட்பட பல்வேறு சமூக வலைதள இயக்கங்களை இவர் மேற்பார்வை செய்கிறார்.
“உஜ்வாலும் அவருடைய குழுவும் தான் மமதா ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் கேட்டு கோபப்படும் வீடியோவை வைரலாக்கியது. அந்தக் குறிப்பிட்ட வீடியோ பாஜகவிற்கு கடந்த வருட மக்களவை தேர்தலில் பெரியளவு உதவியது” என மற்றொரு வங்காள பாஜக தலைவர் தெரிவித்தார்.
2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக 18 இடங்களை வென்ற பிறகு – இதுவே பாஜக அதிகளவு சீட்களை வங்காளத்தில் முதல்முறையாக வெல்வது – திரிணாமுல் காங்கிரஸ் பிரசாந்த் கிஷோர் மற்றும் ஐ-பேக் எனும் அரசியல் ஆலோசனை குழுவை பணியமர்த்தியது.
அதற்கு பிறகு, திரிணாமுல் காங்கிரஸில் பல மாற்றங்களை பார்க்க முடிந்தது. பாஜகவின் சமூக வலைதள இயக்கத்தோடு களமாட திரிணாமுல் காங்கிரஸ் நெருங்கி வருவதாக தெரிகிறது.
ஐ-பேக் திரிணாமுல் காங்கிரசுக்காக வடிவமைத்த முதல் திட்டம் ‘தீதி சே போலோ’. இதன் கீழ், பொது மக்கள் தங்கள் புகார்களையும், பரிந்துரைகளையும் தொலைபேசி வழியாகவும், இதற்கென வடிவமைக்கப்பட்ட இணையதளம் வழியாகவும் பதிவு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டனர்.
‘பங்க்ளார் கோர்போ மமதா’ எனும் மற்றுமொரு சமூக வலைதள பிரச்சாரமும் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் வெற்றியை பெற்றிருக்கிறது. 25 லட்சம் மக்களுக்கு மேல் இந்த பிரச்சாரத்தின் பக்கத்தை ஃபேஸ்புக்கில் பின் தொடர்ந்திருக்கிறார்கள். 92,000 பேர் இதை ட்விட்டரில் பின் தொடர்ந்திருக்கிறார்கள்.
‘மார்க் யுவர்செல்ஃப் சேஃப் ஃப்ரம் பிஜேபி’ (பாஜகவிடம் இருந்து தப்பித்ததாக அடையாளப் படுத்திக் கொள்ளுங்கள்) எனும் மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் பிரச்சாரமும் பெருமளவு மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. புதன்கிழமை நிலவரப்படி, 10 லட்சம் மக்களுக்கு மேல் தாங்கள் “பாஜகவில் இருந்து தப்பித்ததாக” குறித்திருக்கிறார்கள். இந்த பிரச்சாரத்திற்கான ஃபேஸ்புக் குழுவில் 93.5 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
தி வயர் இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.