Aran Sei

‘இனி அமெரிக்காவைச் சார்ந்துதான் இந்திய ராணுவம்’ – இடதுசாரிகள் எச்சரிக்கை

ந்திய அரசு அமெரிக்காவுடன் கடந்த வாரம் மேற்கொண்ட ராணுவ ஒப்பந்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் இந்திய ராணுவத்தை, அமெரிக்க ராணுவத்துடன் பிணைப்பதுடன், நீண்டகால போக்கில் அமெரிக்காவின் திட்டங்களுக்கு ஏற்றபடி இந்திய ராணுவம் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளன.

“தகவல்களையும், மிண்ணணு கட்டமைப்புகளையும் பகிர்ந்து கொள்வது (அமெரிக்க ராணுவத்துடன்), இந்திய ராணுவ கட்டமைப்பின் முடிவெடுக்கும் சுதந்திரம் மற்றும் நம்பகத்தன்மையில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தங்கள், அமெரிக்காவின் ஆயுதங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும். அந்த ஆயுதங்களின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான சமீபத்திய மோதல் காரணமாக, அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்ற வாதத்தை இடதுசாரிகள் முற்றிலும் புறக்கணித்துள்ளனர். ஏனெனில், சீனாவுடனான பதற்றத்திற்கு முன்னரே இந்த ஒப்பந்தம் கையெழுத்திட முடிவு செய்யப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தம் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் நீண்டகால அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்தும். இது தேசத்தின் நலன் கருதி ஏற்படுத்தியது அல்ல” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சீனாவுடன், அரசியல் மற்றும் ராஜதந்திரீதியிலான பேச்சுவார்த்தையை தொடர்வதன் மூலம் எல்லை பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு, அமெரிக்காவின் ஆசிய பிராந்தியத்தின் புவிசார் அரசியல் தந்திரத்திற்கு, இந்தியா சேவகனாக மாற வேண்டிய தேவையில்லை” என்று இந்தியாவின் இரு பெரும் இடதுசாரி கட்சிகள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இராணுவ தகவல்களுக்கான பொது பாதுகாப்பு (GSOMIA)’ எனப்படும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் 2002-ல் கையெழுத்திட்டன. இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்துள்ள முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்கும், தரங்களை உறுதி செய்வதற்கும் குறிப்பிட்ட நெறிமுறைகளை இந்த ஒப்பந்தம் வழங்கும்.

2016-ம் ஆண்டு, பாதுகாப்பு வர்த்தகத்தையும் தொழில்நுட்பப் பகிர்வையும் மேம்படுத்த, இந்தியாவை தனது ‘முக்கிய ராணுவ கூட்டு நாடாக’ அமெரிக்கா அறிவித்தது.

ஆகஸ்ட் 2016-ல், இந்தியாவும் அமெரிக்காவும் ‘தளவாடங்களை பகிர்ந்துகொள்வதற்கான உடன்பாடு ஒப்பந்தத்தில் (LEMOA)’ கையெழுத்திட்டன. இது ஒரு நாட்டின் இராணுவத்தை மற்ற நாட்டின் ராணுவ தளங்களில் பணியாற்ற அனுமதிக்கிறது.

2018-ம் ஆண்டு, இந்திய, அமெரிக்க ராணுவங்கள் இணைந்து பணியாற்ற வழிவகை செய்யும் மிக முக்கிய ஒப்பந்தமான ‘தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்’ கையெழுத்தானது.

இறுதியாக, கடந்த செவ்வாய்கிழமையன்று ‘அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA)’ இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தானது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்