Aran Sei

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் – மரியாதை செலுத்திய தலைவர்கள்

Image Credits: The Indian Express

ட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மும்பை சைத்யபூமியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் நினைவிடத்தில் இன்று காலை முதலே ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதையும், இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சருமான டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி காலமானார்.

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பை இன்று நாம் நினைவில் கொள்கிறோம். இந்தியாவை அனைத்து விதமான பாகுபாடுகளிலிருந்தும் விடுவிக்க உழைப்பதே அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான ஒரே வழி” என்று கூறியுள்ளார்.

“பழைய சனாதன இந்தியாவைத் தகர்த்துப் புதிய ஜனநாயக இந்தியாவைக் கட்டமைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர். சாதிய தடுப்புச்சுவரைத் தவிடுபொடியாக்கிச் சமத்துவத்தை நிரவி ஒப்புரவு சமூகத்தை உருவாக்க வழிவகுத்தவர். புரட்சியாளருக்கு எமது வீரவணக்கம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“அறிவுச் சூரியன், இந்நூற்றாண்டின் புதிய புத்தர்! எல்லோருக்குமான வழிகாட்டி – பாபாசாகிப் அம்பேத்கரின் நினைவுநாளில், அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் நடை போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அண்ணல் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினேன்!” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். “சமூகநீதிச் சுடர் காப்போம்!” என்றும் அவர் கூறியுள்ளார்.

“அண்ணல் அம்பேத்கர் இந்திய சமூகத்துக்கு ஆற்றிய பணி அளப்பரியது. அவர் தலைமையில் உருவாகிய அரசியல் அமைப்பு சாசனத்தை அடியோடு மாற்றக் கடும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், முன்னெப்போதையும் விட அவர் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல அவரின் நினைவு நாளான இன்று உறுதி பண்ணுவோம்” என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இந்தியாவின் சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இந்நாளில் நாட்டின் அரசியலமைப்புச் சட்ட மாண்புகளை பாதுகாப்போம்!” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

“டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாள் அன்று அவரை நினைவு கூர்வோம். அவரது எண்ணங்களும் லட்சியங்களும் பல லட்சக் கணக்கானவர்களுக்குத் தொடர்ந்து பலத்தைத் தருகின்றன. நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அம்பேத்கரின் நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்பின் பேசிய அவர், அம்பேத்கர் காட்டிய வழியில் மோடி அரசு பயணிக்கிறது என்று கூறியுள்ளார். “பல தசாப்தங்களாகத் தாழ்த்தப்பட்ட பிரிவின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் மோடி அரசு செயல்படுகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்