Aran Sei

ஒரு பாலினத் தம்பதிக்குப் பாதுகாப்பு வழங்குக – போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ரு பாலினத் தம்பதியினருக்குக் குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் வரும் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு வழங்குமாறு, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை (நவம்பர் 2) உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த சுல்தானா மிஸ்ரா மற்றும் கிரண் ராணி ஆகியோர் தாக்கல் செய்த மனுவிற்கு, எஸ்.கே.குப்தா மற்றும் பங்கஜ் பாட்டிய ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக ‘தி வயர்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றம் (நன்றி : PTI)

தாங்கள் பல ஆண்டுகளாக உறவில் இருந்து வருவதாகவும் ஆனால் தங்களின் பாலியல் உறவுக்குக்கான தேர்வைக் காரணம் காட்டிக் குடும்பமும் சமூகமும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்று மனுதாரர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

ஒரே பாலின திருமண விவகாரம் – சனாதனத்திற்கு இடமில்லை – நீதிபதி கருத்து

மேலும், இதனால் நாங்கள் அச்சுறுத்தலுக்கும் கொலை மிரட்டலுக்கும் ஆளாகின்றோம் என்று அவர்கள் மனுவில் கூறியுள்ளதாக ‘தி வயர்’ குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நடந்த நவ்தேஜ் சிங் ஜோஹர் வழக்கைக் குறிப்பிட்டு, LGBTQIA மக்களின் அவலநிலையை மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக ஜோஹர் வழக்கில் உச்சநீதிமன்றம், ’ஒருவரின் பாலியல் தேர்வு என்பது தனிமனிதச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றோடு சேர்ந்தது’ என்று தீர்ப்பளித்திருந்தது.

தைவான் ராணுவத்தில் ஒரே பாலின ஈர்ப்பாளர்களுக்குத் திருமணம்

இதைத் தொடர்ந்து, ஒரு நபரின் பாலியல் தேர்வை அடிப்படையாக வைத்துச் செய்யப்படும், எந்தவொரு பாகுபாடும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேலும், பாலியல் தேர்வின் காரணமாக மட்டுமே, ஒருவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது அவர்களின் உரிமைகளைக் கண்காணிக்கவும் இந்திய ​​அரசியலமைப்பானது கடமைப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘ஒரு பாலின இணையர்களுக்குக் குடும்ப உரிமை உள்ளது’ – போப் பிரான்சிஸ்

“மனுதாரர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு எந்தத் துன்புறுத்தலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நாங்கள் ஷாம்லி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்துகிறோம்” என்று நீதிமன்றம் கூறியதாக ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்