Aran Sei

ஜீவனாம்சம் வழங்குவது குறித்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

credits : the hindu

ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் தேதியிலிருந்தே ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி அமர்வு வழங்கியுள்ளத்து.

இதற்கான காரணத்தை விளக்கிய நீதிபதிகள் பெண்கள் மிகவும் மோசமான நிலையில் கணவர்களால் கைவிடப்படுகிறார்கள் எனவும் அவர்களையும் அவர்கள் குழந்தைகளையும் பராமரித்துக் கொள்ள எந்த வழியும் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளனர் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜ்னேஷ் மற்றும் நேஹாவின் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த வழக்கில் நேஹாவிற்கு ஜீவனாம்சமாக 1/09/13ல் இருந்து 31/08.2015 வரை மாதம் 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர்களுடைய குழந்தைக்கு ஜீவனாம்சமாக மாதம் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.  மேலும் 1/9/2015 ற்குப் பிறகு குழந்தைக்கு மாதம் 10,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் மகாராஷ்ட்ராவின் குடும்பநீதி மன்றம் கூறியுள்ளது.

இதற்கெதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் ராஜ்னேஷ் தரப்பு மேல்முறையீடு செய்ததில் பொருளாதாரத்தில் கணவருக்கு சரிசமமான நிலையிலேயே மனைவியும் இருப்பதால் ஜீவனாம்சத்தை அதிகப்படுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நேஹா செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ராஜ்னேஷினுடைய முகநூல் பக்கத்தில் அவர் பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்து விலையுயர்ந்த கேமராவின் மூலம் வனவிலங்குகளை செய்த புகைப்படங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மனைவியை விட கணவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதனால் அவர் ஜீவனாம்சத்தை தர வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் ஜீவனாம்சம் தர வேண்டிய வழிமுறைகளையும் கீழ்நிலைநீதி மன்றங்கள் மற்றும் குடும்பநீதி மன்றங்களுக்கு வழங்கியுள்ளனர் என லைவ் லாவில் வெளியான செய்தி கூறியுள்ளது.

ஒரு தவறான கல்யாணத்தால், பெண்கள் பணம் இல்லாமல் பல ஆண்டுகள் துன்பப்படுகின்றனர். ஜீவனாம்சம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு சரியான நீதி கிடைப்பதில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஜீவனாம்ச வழக்கு 60 நாட்களுள் முடித்து வைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் அது பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுவதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

நீதிபதி  இந்து மல்ஹோத்ரா ”ஜீவனாம்ச சட்டங்களின் அடிப்படையே கைவிடப்பட்ட மனைவி மற்றும் குழந்தைகளை வறுமையிலிருந்தும் ஆதரவற்ற நிலையிலிருந்தும் பாதுகாப்பதாகும். விண்ணப்பத் தேதியிலிருந்து ஜீவனாம்சத்தை செலுத்தாவிட்டால், அந்த வழக்கு முடியும் வரை அவர்கள் எந்த வருமானமும் இன்றி துன்பப்பட நேரிடும். அந்த அடிப்படையில் தான் ஜீவனாம்சம் வேண்டும் என்ற விண்ணப்பிக்கின்ற தேதியிலிருந்து அது கொடுக்கப்பட வேண்டும்” என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஜீவனாம்சத்தைக் கணக்கிடும்போது குழந்தைகளின் கல்வி, அடிப்படைத் தேவைகள் மற்றும் பிற நடவடிக்கைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும். “குழந்தைகளின் கல்விச் செலவுகள் பொதுவாக தந்தையால் ஏற்கப்பட வேண்டும். மனைவி வேலைக்குச் சென்று போதுமான அளவு சம்பாதித்தால், செலவுகளை கணவன் மனைவி இடையே பகிர்ந்துக் கொள்ளலாம்” என்று நீதிபதி மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விலைவாசி உயர்வு மற்றும்  வாழ்க்கைச் செலவுகள் போன்ற  காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் மனைவி அவர் பிறந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கைத் தரமும் ஜீவனாம்சம் வழங்குவதில் முக்கியப் பங்கு  வகிக்கும் என தெரிவித்துள்ளார்.

நிரந்தர ஜீவனாம்சம் குறித்து குறியுள்ள நீதிபதிகள் கணவர் தனது வாழ்நாள் முழுவதும் மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடுவது சரியானதாக இருக்காது என்று நீதிமன்றம் கருதுகிறது எனவும் நிரந்தர ஜீவனாம்சத்தை நிர்ணயிக்கும் போது திருமணத்தின் காலத்தை கணக்கிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ள

ஜீவனாம்சம் கேட்டு தொடுக்கும் வழக்கில், கணவன் மனைவி இருவரும் தங்கள் சொத்து விவரங்களை இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்