Aran Sei

‘உ.பி.யில் குற்றவாளிகளை காக்கும் இயக்கமா?’ பிரியங்கா, ராகுல் காட்டம்

Credits Scroll

மத்திய பாஜக மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் இருந்த நபரை விடுவிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர் காவல் நிலையத்தில் அத்துமீறி நடந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தச் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து, “எப்படி ஆரம்பித்தது: பெண் பிள்ளைகளைக் காப்போம். எப்படி தொடர்கிறது: குற்றவாளிகளைக் காப்போம்.” என உத்தர பிரதேச அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “எந்த பிரச்சார இயக்கத்தின் கீழ் இது நடைபெறுகிறது என்பதை உத்தரபிரதேச முதலமைச்சர் தெரிவிப்பாரா? பெண் பிள்ளைகளைக் காக்கும் இயக்கமா அல்லது குற்றவாளிகளைக் காக்கும் இயக்கமா?” என்று ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அக்டோபர் 15-ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேஷன் கடையை எங்கு ஒதுக்குவது என்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

உள்ளூர் அரசு அதிகாரிகளும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் இருதரப்பினரிடையே நடந்த வாக்குவாதத்தில் பாஜக பிரமுகர் திரேந்திர பிரதாப் துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டதில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாக ஏஎன்ஐ குறிப்பிட்டுள்ளது.

அவர் தற்காப்புக்காக மட்டுமே துப்பாக்கியால் சுட்டார் என்று சுரேந்திர சிங் கூறியதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பிரியங்கா காந்தி ட்விட்டரில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை குறிப்பிட்டு, அவர்களும் குற்றவாளிக்கு துணைபோகிறார்களா என கேட்டுள்ளார்.

 

“குற்றவாளிக்கு ஆதரவு அளிக்கும் இந்த எம்எல்ஏக்கு நீங்கள் துணை நிற்கிறீர்களா? இல்லை என்றால் அவர் இன்னும் பாஜகவில் நீடிப்பது ஏன்?” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்