Aran Sei

சிந்து நதிநீர் பங்கீடு – இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் ஆணையர்களின் சந்திப்பு

image credit : indianexpress.com

ரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சிந்து நதி நீர் ஆணையத்தின் கூட்டம் நேற்று டெல்லியில் கூடியுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகள் ஆன பிறகு இமயமலையில் தோன்றி இந்தியா வழியாக பாய்ந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை பகிர்ந்து கொள்வதற்கான “சிந்து நதிநீர் ஒப்பந்தம்” இரு நாடுகளுக்கிடையே 1960-ல் போடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதி நீர் ஆணையம் “குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் என மாறி மாறி சந்திக்க வேண்டும்”.

ஆனால், 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 29, 30 தேதிகளில் பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஆணையம் கூடுகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் தலையீடு – இந்திய வெளியுறவுத் துறை மௌனம்

இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதல் (பிப்ரவரி 14, 2019), பாகிஸ்தானின் பாலக்கோடு மீது இந்தியா நடத்திய வான்வழி தாக்குதல் (பிப்ரவரி 26, 2019), ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டது (ஆகஸ்ட் 2019) ஆகியவை காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு நெருக்கடியில் சிக்கியிருந்தது.

சென்ற மாதம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர்நிறுத்த மீறல்களை நிறுத்திக் கொள்வதாக இரு நாட்டு ராணுவ தளபதிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இப்போது சிந்து நதி நீர் ஆணையத்தில் இந்தக் கூட்டம் நடந்துள்ளது.

சிந்து நதி ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கில் பாயும் சட்லெஜ், பியஸ், ராவி ஆறுகளின் நீர் முழுவதையும் இந்தியா எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் அளவு ஆண்டுக்கு சுமார் 3.3 கோடி ஏக்கர் அடி (MAF).

மேற்கில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் ஆறுகளின் ஆண்டுக்கு சுமார் 13.5 கோடி ஏக்கர் அடி நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆற்றின் ஓட்டத்தின் போக்கிலான நீர்மின் திட்டங்களை மேற்கு ஆறுகளில் அமைப்பதற்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது.

அவற்றின் வடிவமைப்புக்கும் இயக்கத்துக்கும் குறிப்பான வரைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின் கீழ், மேற்கு ஆறுகளில் இத்தகைய இந்தியாவின் நீர் மின் திட்டங்கள் தொடர்பாக தனது கவலைகளை எழுப்ப பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது.

image credit : wikipedia
சிந்து நதியின் பாதையும் அதன் முக்கியமான துணை ஆறுகளும் – image credit : wikipedia

செனாப் ஆற்றின் துணை ஆறான மருசுதரில் இந்தியா 1,000 மெவா நீர்மின் திட்டத்தை கட்டி வருகிறது. இந்தத் திட்டம் ஜம்மு & காஷ்மீரின் கிஷ்வர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. லோயர் கல்னய் என்ற இரண்டாவது திட்டமும் செனால் ஆற்றில் கட்டப்பட்டு வருகிறது.

நேற்று நடந்த பேச்சுவார்த்தைகளில், “இந்தத் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தான் தனது கவலைகளை எழுப்பியது. இரண்டு தரப்பும் தத்தமது நிலைப்பாடுகளை தெரிவித்தனர்” என்று ஒரு அதிகாரி கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

2018-ல் நடந்த கூட்டத்திலும் இந்தத் திட்டங்கள் தொடர்பான விவாதம் நடந்தது என்றும் 2019-ம் ஆண்டு ஜனவரி 28 முதல் 31-ம் தேதி வரை பாகிஸ்தான் சிந்து நதிநீரின் ஆணையர் செனாப் படுகையில் பகால் துல், லோயர் கல்னாய் மற்றும் பிற நீர்மின் திட்டங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு குழுவுக்கு தலைமை வகித்துச் சென்றார் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

இந்தத் திட்டங்கள் தொடர்பான விவாதம் 2013-ம் ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்