Aran Sei

’ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு’ : போனில் பதிவான கொலையாளிகளின் குரல்

Aftab Alam

காரில் அஃப்தாப் ஆலமின் உயிரற்ற உடல் கிடந்ததாக அவரது மகன் முகமது சபீரிடம் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு காவலர்கள் கூறியிருக்கிறார்கள்.

காவலர்கள் கூறியது கேட்டு பெரியளவில் அதிர்ச்சியாகாததாக கூறும் அஃப்தாபின் மூத்த மகன் முகமது சபீர் (20), அதற்கு சில மணிநேரங்களுக்கு முன் அப்பா தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருந்ததாக கூறுகிறார். அப்போதே ஏதோ தவறு நிகழ்ந்திருப்பதை சபீர் உணர்ந்திருக்கிறார்.

தொலைபேசி மறுமுனையில் குடிபோதையிலிருந்த ஆட்கள் அஃப்தாபிடம் குடிக்க விரும்புகிறாரா என்று கேட்க, அவர் ”வேண்டாம்” என மறுத்து கூறியதை சபீர் தொடர்பிலிருந்தபடி கேட்டிருக்கிறார்.

அந்த நபர்கள் அப்பாவிடம் அவருடைய பெயரை சொல்லச்சொல்லி கேட்டதும், ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்த சபீர், தொலைபேசி அழைப்பினை பதிவு செய்திருக்கிறார். ’தி வயர்’ வசம் உள்ள பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி அழைப்பில், 8:39 நிமிடங்களில் ஒருவர் ‘ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு, சொல்லு ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கூறுவதைக் கேட்க முடிகிறது.

இந்துத்துவ வன்முறை தாக்குதல்களின் கூக்குரலாக மாறியிருக்கும் இந்தக் கோஷம், இதற்கு முன்னர் பல கும்பல்தாக்குதல்களுக்கு வழிவகுத்துள்ளது.

பிறகு எந்த உரையாடலும் சபீருக்கு கேட்கவில்லை. ஆனால், பதினோரு நிமிடங்கள் கழித்து, 19:41 நிமிடத்தில் ஒருவர் ”மூச்சு நின்னுருச்சு” எனக் கூறுவதைக் கேட்க முடிகிறது.

சபீர் கூறுகையில் ”நேற்று மதியம் 3 மணியளவில் அப்பா அவருடைய பழைய வாடிக்கையாளர் ஒருவரை புலந்த்ஷரில் கொண்டுவிட காரில் சென்றிருந்தார். 7 மணிக்கு அவரை இறக்கிவிட்ட பிறகு உடனே வீட்டுக்கு புறப்பட்டுவிட்டார். வழியில் எனக்கு தொடர்புகொண்டு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த ஃபாஸ்ட் டேகில் பணம் ரீச்சார்ஜ் செய்யச்சொன்னார்.” என்றார்.

”7:30 மணிக்கு ரீச்சார்ஜ் செய்த பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார், அப்போது சுங்கச்சாவடிக்கு அருகில் இருந்திருப்பாரென  நினைக்கிறேன். அவர் கடந்துவந்த சில நபர்களின் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுந்ததால் எனக்குத் தொடர்புகொண்டு, போனை பாக்கெட்டில் வைத்திருக்கலாம்” என சபீர் கூறுகிறார்.

தந்தையின் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகும் வரை, 40 நிமிடங்களுக்கு சபீர் அந்த தொலைபேசி அழைப்பினை பதிவு செய்துள்ளார். உடனே அருகிலிக்கும் மயூர் விஹார் காவல் நிலையம் சென்று உதவி கேட்டுள்ளார்.

“நடந்ததைக் கூறியதும் உதவி ஆய்வாளர் சஞ்சய் எனக்கு உதவினார். உடனடியாக அப்பாவின் தொலைபேசி எண்ணை டிராக் செய்து, சிம் கார்ட் கடைசியாக பதல்பூர் காவல் நிலையத்தின் அருகே இயங்கியதென்பதை கண்டுபிடித்தார்.” என சபீர் கூறுகிறார். காவலர்கள் அங்கிருந்து அஃப்தாப் ஆலமின் காயம்பட்ட உயிரற்ற உடலைக் கண்டெடுத்து, அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இறந்த நிலையில் அப்பாவைப் பார்த்ததை நினைவுகூர்கையில் சபீர் உடைந்து அழுகிறார். ”அவருடைய நாக்கு மிகவும் மோசமாக காயம்பட்டிருந்தது. காதுகளிலிருந்து இரத்தம் வழிந்தது. முகத்தில் பெரிய வெட்டுக்காயம் இருந்தது. கும்பலாக அவரை அடித்துச் சாகடித்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.” என, இந்தியாவில் வெறுப்பினால் நிகழ்த்தப்படும் வன்முறைக் குற்றங்களைக் குறிக்கும் சொல்லைக் குறிப்பிட்டு சபீர் கூறினார்.

“ஆனால் காவல்துறை வெறும் திருட்டு வழக்காக மட்டுமே இதனைப் பதிவு செய்துள்ளது.” என்று கூறும் சபீர், ”நாங்கள் இஸ்லாமியர்கள், ஆனால் வாழ்வதற்கான உரிமை எங்களுக்கு உண்டு.” என்றார்.

இது கும்பலாக செய்யப்பட்ட படுகொலையோ அல்லது வெறுப்புச் சம்பவமோ இல்லை என மறுத்துக் கூறிய பதல்பூர் காவல் நிலைய அதிகாரி, சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கூறினார்.

கொலை நடந்த இரவு பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் மீது 394 (கொள்ளை முயற்சியில் தாக்கியது), 302 (கொலைக்கான தண்டனை) மற்றும் 201(சாட்சிகளை அழித்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அஃப்தாப் ஆலம் கொலையாளிகளை எவ்வாறு எதிர்பட நேர்ந்தது, அவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

மகன்கள் படிப்பில் ஆர்வம்கொண்ட அர்ப்பணிப்புள்ள தந்தை

நொய்டா திரிலோகப்புரியில் வசித்து வந்த அஃப்தாப் ஆலம், 1996 முதலே ஓட்டுநராக பணிபுரிந்திருக்கிறார். அதுவே அவருடைய வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது. அவருடைய மனைவி, மூன்று மகன்கள், நோய்வாய்பட்ட பெற்றோர் மற்றும் இரண்டு உடன்பிறந்தவர்கள் அனைவரும் அஃப்தாப் மற்றும் சபீரின் வருமானத்தை நம்பியே உள்ளனர்.

பொதுமுடக்கம் சமயம் கொரோனா பரவல் அச்சத்தால் ஆலம் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். எனினும், குடும்ப நண்பரும் பழைய வாடிக்கையாருமான ஒருவர், உத்தரபிரதேஷ் குர்கானிலுள்ள புலந்த்ஷர் வரை கூட்டி செல்லச்சொல்லி கேட்டதை அவரால் மறுக்க முடியவில்லை.

ஊரடங்கினால் வருமானம் இல்லாமல் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யவே மிகுந்த நெருக்கடி இருந்துவந்த நிலையில் இந்த சவாரி உதவக்கூடும் என ஆலம் கருதியுள்ளார்.

ஆலமின் இளைய மகன்கள், முகமது ஷாகித் (19), முகமது ஷாஜித் (17), மற்றும் சபீர், மூன்று பேருமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று சிறப்பாக படித்துவருபவர்கள்.

சபீர் தில்லி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.காம் மூன்றாமாண்டு படிக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 76% மற்றும் 92% பெற்றுள்ள ஷாகித் மற்றும் ஷாஜித், மயூர் விஹார் அல்கான் அரசு பள்ளியில் பயின்று வருகிறார்கள்.

ஆலமுடைய 65 வயது தந்தை முகமது தாஹிர் கூறும்போது, “திருட்டாக இருந்தால் அவர்கள் ஏன் காரை எடுத்துச் செல்லவில்லை? காரை எடுத்துக்கொண்டு அவன் உடலை தெருவில் வீசியிருப்பார்கள். இது ஒரு கும்பலால் நிகழ்த்தப்பட்டிருக்கும் கொலைவெறி தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் ஆலமின் போனை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.” என்றார்.

நீட் நுழைவுத் தேர்வுக்கு படித்து வரும் ஷாஹித், மகன்களுக்கு நல்ல கல்வி கிடைக்கச்செய்வது ஒன்று மட்டுமே அப்பாவின் குறிக்கோளாக இருந்தது என்று கூறுகிறார்.

ஷாஹித் கூறுகையில், ”பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான இடஒதுக்கீட்டில் நல்ல பள்ளியில் படிக்கிறேன். கொரோனா சூழலிலும் கூட தன்னுடைய குறைந்த வருமானத்தில் அப்பா எங்களுடைய பள்ளி கட்டணத்தை செலுத்தினார். தம்பி ஷாஜித் அடுத்த ஆண்டு ஐஐடி நுழைவுத்தேர்வுக்காக தயாராகிவருகிறார்.” என்றார்.

”ஓட்டுநராக பணிபுரிந்ததில், ஒரு நாள் கூட யாருடனும் அவர் சண்டையிட்டதில்லை. வேலைக்குச் சென்று, வீட்டுக்கு திரும்பி வந்து மகன்களுடனே பெரும்பாலன நேரத்தை செலவிட்டார். எப்பவும் எங்களுக்காக உழைத்துச் சம்பாதித்தபடி இருந்ததால் தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்லக்கூட அவருக்கு நேரம் இருந்ததில்லை.” எனக் கூறுகிறார் ஷாஹித்.

சமையலறையை சுட்டிக்காட்டி ஷாஹித் “வீட்டில் போதிய உணவு பொருட்கள் இல்லை ஆனால், என்னுடைய புத்தக அடுக்கைப் பாருங்கள். சாப்பாட்டுக்கு தேவையான பணம் இல்லாவிட்டாலும் கூட அப்பா எனக்கு 1800 ரூபாய்க்கு புத்தகங்களும் நோட்டுகளும் வாங்கித்தந்தார்.” என கூறுகிறார்.

குடும்பத்தில் மிகுந்த அறிவுக்கூர்மை உடையவராக கருதப்படும் அஃப்தாபின் இளைய மகன் ஷாஜித் கூறுகையில் “பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான சமயத்தில், ஷாஹித் என்னைவிட குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தார். ஆனாலும் அப்பா என்னை தனியாக சிறப்பிக்காமல் ஒரு ஆயிரம் ரூபாய் தாளை கொடுத்து இருவரையும் 500 ரூபாய் பகிர்ந்துகொள்ள சொன்னார். எங்கள் இரண்டு பேர் மீதும் அப்பாவுக்கு நம்பிக்கை இருந்தது. ஒருநாள் ஷாஹிதும் அவரை பெருமை கொள்ளச்செய்வார் என்பது அவருக்கு தெரிந்திருந்தது.

ஆலமின் 60 வயது தாயார் நஜ்மு நிஸா இனி எப்படி குடும்பம் நகரும் என வருந்துகிறார்.

ஆலமுடைய மனைவி ரெஹானா கடூனுக்கு கணவரின் இறப்பு திங்கட்கிழமை மதியம்தான் தெரியவந்துள்ளது. தன் கணவருக்கு நீதி வேண்டும் என்கிறார் அவர். அம்மாவை சமாதானப்படுத்திய ஷாஹித், அஃப்தாப் ஆலமுக்கு நீதி கிடைக்கச் செய்யப்போவதாக உறுதியளித்தார்.

”பள்ளி ஆசிரியகளிடம் இதுகுறித்து பேசுகிறேன், அவர்கள் கட்டாயம் வழிகாட்டுவார்கள். நடந்தது குறித்து ஒன்றும் செய்வதற்கில்லை. இனி நடக்கப்போவதை எதிர்கொள்ளலாம்” என 19 வயது ஷாஹித் கூறுகிறார்.

அஃப்தாப் ஆலமின் இறுதிச் சடங்கு திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடந்தது.

(தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

https://thewire.in/communalism/jai-shri-ram-muslim-driver-lynched-death-uttar-pradesh

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்