Aran Sei

போர்க்குற்றம் சாட்டப்பட்ட மியான்மர் இராணுவ நிறுவனத்துக்கு அதானி வழங்கிய நிதி – புகைப்படங்கள், வீடியோ ஆதாரம்

image credit : livemint.com

தானி குழுமம் யாங்கூன் துறைமுக ஒப்பந்தத்துக்காக, மியான்மரின் இராணுவ தலைமைக் குழுவால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனத்துக்கு $5.2 கோடி வரை (சுமார் ரூ 380 கோடி) கொடுப்பதாக ஆஸ்திரேலியாவின் ஏபிசி நியூஸ் குற்றம் சாட்டியுள்ளது.

$29.3 கோடி (சுமார் ரூ 2130 கோடி) மதிப்பிலான யாங்கூன் துறைமுக திட்டத்துக்கு ஒப்புதல் வாங்குவதற்காக தான் மியான்மர் இராணுவ தலைவர்களுடன் ஒரு போதும் உறவாடியதில்லை அதானி குழுமம் சென்ற மாதம் மறுத்திருந்தது.

மியான்மர் இராணுவ ஆட்சியின் அமைச்சருக்கு அழைப்பு விடுத்த இலங்கை – ஜனநாயக செயல்பாட்டாளர்கள் கண்டனம்

ஆனால், அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கரன் அதானி மியான்மர் இராணுவ தலைமை குழுவின் மேல்மட்ட ஜெனரல் மின் அவுங் லியாங்-ஐ ஜூலை 219-ல் சந்தித்தது பற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் கிடைத்துள்ளதாக ஏபிசி நியூஸ் தெரிவிக்கிறது. ஜெனரல் மின் அவுங் லியாங் ஒரு போர்க்குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டவர் என்று ஏபிசி செய்தி கூறுகிறது.

image credit : abcnews.com
கரன் அதானி மியான்மர் இராணுவ தலைவருடன் – image credit : abc.net.au

அதானி குழுமம் துறைமுகத் திட்டத்துக்காக $14.1 கோடி (சுமார் ரூ 1022 கோடி) பண மூலதனமாகவும், $14.8 கோடி (சுமார் ரூ 1080 கோடி) சரக்கு மூலதனமாகவும் முதலீடு செய்யவுள்ளதாக மியான்மரின் கார்ப்பரேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் தெரவிக்கின்றன.

யாங்கூன் மண்டல வளர்ச்சி ஆணையத்திலிருந்து கசியவிடப்பட்ட ஆவணங்களின்படி, அதானி குழுமம் மியான்மர் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்துக்கு, “நில குத்தகை கட்டணங்கள்” என்ற பெயரில் $3 கோடி (சுமார் ரூ 219 கோடி) வழங்குவதாக தெரிய வந்துள்ளது.

சர்வதேச நீதிக்கான ஆஸ்திரேலிய மையமும் மியன்மாருக்கு நீதி என்ற குழுவும் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, துறைமுக இடத்தின் உரிமையாளர் என்ற வகையில் மியான்மர் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்துக்கு மேலும் $2.2 கோடி (சுமார் ரூ 160 கோடி) “நில ஒப்புதல் கட்டணம்” அதானி குழுமத்தால் செலுத்தப்படவுள்ளது.

 image credit : abcnews.com
கரன் அதானி மியான்மர் இராணுவ தலைவருடன் – image credit : abc.net.au

சென்ற மாதம் 1-ம் தேதி, மியான்மர் இராணுவம் தேர்தலில் வெற்றி பெற்ற மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சன் சூ கி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்து அதிகாரத்தை கைப்பற்றியது. இந்த இராணுவ ஆட்சிப் பிடிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதானி குழுமம் கொடுக்கும் நிதி, மறைமுகமாக மியான்மர் இராணுவத்தின் சர்வதேச குற்றங்களுக்கு பயன்படுத்தப்படலாம்” என்று மனித உரிமைகள் வழக்கறிஞர் ராவன் அரஃப் ஏபிசியிடம் கூறியுள்ளார்.

 image credit : abcnews.com
இராணுவத்தை எதிர்த்து மியான்மர் போராட்டங்கள் – image credit : abc.net.au

அதானி துறைமுகங்கள் நிறுவனத்தில் ஆஸ்திரேலிய அரசுக்குச் சொந்தமான ஃபியூச்சர் நிதியம் $32 லட்சம் முதலீடு செய்துள்ளது. மியான்மர் அரசின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளதை அடுத்து அந்த முதலீட்டை கைவிடுமாறு அழுத்தம் அதிகரிக்கும் என்று ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. ஆனால், அதானி துறைமுகங்கள் நிறுவனத்தில் தனது முதலீட்டை கைவிடும் எண்ணம் இல்லை என்று பியூச்சர் நிதிய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

2019-ல் மியான்மருக்குச் சென்ற ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை அறியும் குழு, மியான்மர் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்துடன் வணிக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று வெளிநாட்டு நிறுவனங்களை எச்சரித்திருந்தது. இந்த இராணுவ வணிக நிறுவனத்துடன் உறவு கொண்டுள்ள ஒரு நிறுவனமாக அதானி துறைமுகங்கள் நிறுவனத்தை அது குறிப்பிட்டிருந்தது.

இந்த உண்மை அறியும் குழுவின் உறுப்பினராக இருந்த ஆஸ்திரேலிய வழக்கறிஞர் கிறிஸ் சிடோடி, “மியான்மர் இராணுவத்துக்கும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லாந்தில் உள்ள கார்மிக்கேல் நிலக்கரி திட்டத்தில் தொடர்புடைய நிறுவனத்துக்கும் உள்ள உறவை சர்வதேச நீதிக்கான ஆஸ்திரேலிய மையமும் மியன்மாருக்கு நீதி என்ற குழுவும் வெளியிட்டுள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்தியுள்ளன” என்று கூறியுள்ளார்.

“மியான்மர் இராணுவத்தை வளப்படுத்தும் ஒரு நிறுவனத்தை நாம் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்க வேண்டுமா என்பதுதான் ஆஸ்திரேலிய மக்கள் முடிவு செய்யவேண்டிய விஷயம்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கார்மிக்கேல் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 image credit : abcnews.com
ஆஸ்திரேலிய கார்மிக்கேல் நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்து போராட்டம் – image credit : abc.net.au

அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், யாங்கூன் சர்வதேச முனைய திட்டம் அதானி குழுமத்தால் கட்டப்பட்டு வருகிறது, அதற்கு முழுவதும் சொந்தமானது என்று கூறியுள்ளார். “எந்த கூட்டு பங்காளிகளும் இல்லாத சுயேச்சையான சரக்குப் பெட்டக முனையம் அது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்