Aran Sei

விமான நிலைய தனியார் மயமாக்கலில் அதானி ஆதிக்கம் – மத்திய அரசு உடந்தையா?

credits : indian express

தானி குழுமம் 6 விமான நிலையங்களையும் கைப்பற்றுவதற்கு வழி வகுத்த, விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் நிகழ்முறை தொடர்பாக நிதி அமைச்சகமும் நிதி ஆயோகும் எதிர்ப்புகளை தெரிவித்தன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய புலனாய்வில் தெரிய வந்துள்ளது

மேலும், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமான மும்பை விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பங்குகளை அதானி பெற்றுள்ளது. ஜனவரி 12-ம் தேதி மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இந்திய விமானநிலையங்கள் ஆணையம் ஒப்படைத்துள்ளது.

Image Credit : indianexpress.com
அதானி குழுமம் பங்குகளை வாங்கிய மும்பை விமான நிலையம் – Image Credit : indianexpress.com

ஜிவிகே குழுமத்துடனான இந்த ஒப்பந்தத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் நவி மும்பை விமான நிலையத்திலும் அதானி குழுமத்துக்கு கட்டுப்படுத்தும் பங்கு உள்ளது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இவற்றுக்கு மேல், அரசாங்கத்தின் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு வணிக விமான சேவை தொடங்கப்பட்ட முந்த்ரா விமான நிலையத்துக்கும், சர்வதேச வணிக விமான நிலையமாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக, அதானி குழுமம் கட்டுப்படுத்தி இயக்கும் மும்பை, அகமதாபாத், மங்களூர், லக்னோ, ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களை, 2019-20 நிதியாண்டில் மொத்தம் 7.9 கோடி பயணிகள் பயன்படுத்தினர். இது உள்நாட்டு விமான போக்குவரத்தின் மொத்த பயணிகளின் எண்ணிக்கையான 34.10 கோடியில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியாகும்.

2019-ல் 6 விமான நிலையங்களை இயக்கும் உரிமத்தை தனியாருக்குக் கொடுக்கும் நிகழ்முறை தொடர்பான நிதி அமைச்சகத்தின் எதிர்ப்புகளும், நிதி ஆயோகின் எதிர்ப்புகளும் நிராகரிக்கப்பட்ட பிறகு, அகமதாபாதைச் சேர்ந்த அதானி குழுமம் 6 விமான நிலையங்களையும் கைவசப்படுத்திக் கொள்வதற்கு வழி ஏற்பட்டது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

6 விமான நிலையங்களை தனியார் மயப்படுத்தும் நடைமுறை தொடர்பாக மத்திய அரசின் பொதுத்துறை தனியார் துறை கூட்டு மதிப்பீடு கமிட்டி (PPPAC), டிசம்பர் 11, 2018-ல் விவாதம் நடத்தியிருக்கிறது.

இந்த விவாதத்திற்கு அனுப்பப்பட்ட, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் குறிப்பு, “6 விமான நிலையங்களில் எந்த ஒரு நிறுவனத்துக்கும் இரண்டுக்கும் மேல் ஒதுக்கக் கூடாது என்ற நிபந்தனையை சேர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளது. “அதிக அளவு நிதி அபாயத்தையும் செயல்பாட்டு பிரச்சினைகளையும் கணக்கில் எடுப்பதோடு, விமான நிலையங்களை வெவ்வேறு நிறுவனங்களுக்கு வழங்குவது போட்டியை அதிகரிக்கவும் உதவும்” என்று அந்தக் குறிப்பு கூறியிருந்தது.

டெல்லி, மும்பை விமான நிலையங்களுக்கு ஜிஎம்ஆர் மட்டுமே ஒரே தகுதிவாய்ந்த நிறுவனமாக இருந்த போதிலும், அதற்கு இரண்டு விமான நிலையங்களும் வழங்கப்படவில்லை. டெல்லி மின்வினியோக தனியார் மயமாக்கலிலும், நகரம் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அவை 2 நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அந்தக் குறிப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

PPPAC கூட்டத்தில், பொருளாதார விவகாரங்களுக்கான துறை காட்டிய இந்த சிவப்புக் கொடி விவாதிக்கப்படவே இல்லை என்று கூட்டக் குறிப்புகளிலிருந்து தெரிவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் குறிப்பு தயாரிக்கப்பட்ட அதே நாளில் நிதி ஆயோக், போதுமான தொழில்நுட்ப திறன் இல்லாத நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டால், அது ஒட்டு மொத்த திட்டத்தையும் சீர்குலைத்து, வழங்கப்படும் சேவைகளின் தரத்தை பாதிக்கும் என்று எச்சரித்திருந்தது.

இதற்கு பதிலளித்த, பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் எஸ்சி கர்க் தலைமையில் நடந்த PPAC கூட்டம், “அதிகாரம் கொடுக்கப்பட்ட செயலாளர்களின் குழு”வில்

“போட்டியில் இணைவதற்கு முன் நிபந்தனையாகவோ, வென்ற பிறகு தேவையாகவோ விமான நிலையத்தை இயக்கிய முந்தைய அனுபவம் விதிக்கப்படக் கூடாது. அது ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களை விற்பதில் போட்டியை ஊக்குவிக்கும்” என்று முடிவு செய்திருந்ததாக கூறியிருக்கிறது.

ஆறு விமான நிலையங்களை வாங்குவதற்கான போட்டியில் வெற்றி பெற்ற அதானி குழுமம் அகமதாபாத், மங்களூரு, லக்னோ விமான நிலையங்களை இயக்கும் பொறுப்பை பிப்ரவரி 2020-ல் கையகப்படுத்திக் கொண்டது. கொரோனா காரணமாக ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களை இயக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள 6 மாதம் கால அவகாசம் கேட்டு நவம்பர் 2020-ல் அவற்றையும் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில், ஹைதராபாத் ஜிவிஆர் குழுமத்திடமிருந்து நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமான மும்பை விமான நிலையத்திலும், புதிதாக கட்டப்பட்டு வரும் நவி-மும்பை விமான நிலையத்திலும் கட்டுப்படுத்தும் பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது.

ஜிவிகே குழுமம் அதானி குழுமத்திடம் பங்குகளை விற்பதற்கு ஒரு மாதம் முன்புதான் ஜிவிகே குழுமம் பல புலனாய்வு முகமைகளிடமிருந்து அழுத்தத்தை எதிர் கொண்டிருந்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

ஜூன் 27-ம் தேதி, மும்பை சர்வதேச விமானநிலைய பணிகளில் ரூ 705 கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி, சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.

அதன் அடிப்படையில், ஜூலை 7-ம் தேதி அமலாக்கத் துறை, ஜிவிகே குழுமத்தின் சேர்மன் ஜிவிகே ரெட்டி மீதும் அவரது மகன் சஞ்சய் ரெட்டி மீதும் இன்னும் சிலர் மீதும், நிதி முறைகேடு தடுப்பு சட்டத்தின் (PMLA) பிரிவு 3-ன் கீழ் ஒரு புகாரை பதிவு செய்திருந்தது.

ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான 50 ஆண்டுகால உரிமத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது. டெல்லி, மும்பை விமான நிலையங்கள் 30 ஆண்டுகளுக்கு மட்டும்தான் தனியார் இயக்குவதற்கு விடப்பட்டன என்பதையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

2019-ல் நிதி அமைச்சகத்திலிருந்து எரிசக்தி அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டு இப்போது ஆந்திர முதல்வரின் ஆலோசகராக இருக்கும் எஸ்சி கர்க் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகிறது.

இது தொடர்பாக அதானி குழுமத்துக்கும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கும் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்