அரசு அறிவிப்புகள், சட்டங்கள் சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் இருக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்காக நிறுவப்பட்டுள்ள நீதிமன்றங்களின் வழிமுறைகள், அங்கு நிகழும் விவாதங்கள் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை என்றும் சட்டங்கள் மக்களுக்கு மிகவும் அந்நியமாக இருக்கிறது எனவும் உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர் சுபாஷ் விஜயரன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெரும்பாலான வழக்கறிஞர்கள் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத வகையில் மிகவும் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தெளிவற்ற முறையில் எழுதுகிறார்கள் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
“இரண்டு வார்த்தைகள் தேவைப்படும் இடத்தில் எட்டு வார்த்தைகள் பயன்படுத்துகிறோம். துல்லியமாக கூற முயன்று ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப கூறுகிறோம். தேவைக்கு அதிகமான வார்த்தைகள் பயன்படுத்துகிறோம். ஆனால் தகவலைக் கொண்டு சேர்ப்பிக்க முடிகிறதா?” என்று மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"Make Law Understandable To Layman": PIL In SC Seeks Direction To Draft Statutes, Rules and Notifications In Plain Language https://t.co/e8rdm3si8l
— Live Law (@LiveLawIndia) October 10, 2020
அரசியலமைப்பு, சட்ட திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்காகவே செயல்பட்டு வருகிறது என்றாலும், இவை குறித்து எந்தத் தெளிவும் இல்லாமல் ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே மக்கள் இவற்றை அணுகுகிறார்கள். இதனால் மக்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனவும் மனுதாரர் சுட்டிக் காட்டியுள்ளார்.
”உச்சநீதி மன்றத்தில் நடக்கும் வழக்கு விவாதங்களுக்கு நேரவரம்பு மற்றும் சட்ட வரைவுகளுக்கு அதிகபட்ச பக்க எண்ணிக்கை விதிக்கப்பட வேண்டும். மோசமாக எழுதப்படும் சட்டவரைவுகள், தேவையற்ற நீண்ட விவாதங்களால் நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்களின் ஆற்றலும் நேரமும் விரையமாகிறது.” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
”குடிமக்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சட்டங்களும் விதிமுறைகளும் இல்லை. இவை அனைத்தும் மிகவும் குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கின்றன. மக்கள் நீதியைக் கண்டடைவதற்கான அடிப்படை உரிமையை இது மறுக்கிறது.” என குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டதிட்டங்களை, விதிமுறைகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், கையேடுகள் உருவாக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார்.
எளிமையான ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதுவது குறித்து சட்டப்படிப்பின் 3 மற்றும் 5-ம் ஆண்டுகளில் கட்டாய பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் மனுதாரரான வழக்கறிஞர் சுபாஷ் விஜயரன் கோரிக்கை வைத்துள்ளார்.
மக்கள் நீதியை கண்டடைய, முதலில் அவர்கள் சட்டங்களையும், உரிமைகளைக் கோருவதற்கான வழிமுறைகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.