Aran Sei

போராடும் விவசாயிகள் மத்தியில் ஒரு நாள் – வீடியோ

மோடி அரசின் விவசாய சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராகவும் மின்சார மசோதாவுக்கு எதிராகவும் போராடும் விவசாயிகள் டெல்லியின் சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ளார்கள்.

ஸ்கூப்வூப் என்ற யூடியூப் சேனல் 10 நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு நேரில் சென்று பதிவு செய்து வெளியிட்ட வீடியோவை இங்கு பகிர்கிறோம்.

போராட்டத்தை 6 மாதங்கள் வரை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளாக, பஞ்சாபிலும் ஹரியானாவிலும் உள்ள கிராமங்களிலிருந்து தினமும் உணவுப் பொருட்களும், பாலும், பத்திரிகைகளும் வருவது, போராட வந்தவர்களுக்கு ஆதரவாக கிராமத்தில் வேலைகளை செய்யும் கிராம கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

போராட்ட களத்திலேயே சமைத்து உணவு வினியோகிப்பது, தூங்குவதற்கான ஏற்பாடுகள் என்ற விவசாய சங்கங்கள் எளிமையுடனும் உறுதியுடனும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

“விவசாய மண்டிகளை அல்லது அரசு கொள்முதல் நிலையங்களை ஒழித்துக் கட்டி விட்ட பீகாரின் தொழிலாளர்கள் பஞ்சாபுக்கு கூலி வேலை செய்ய வருகிறார்கள். இந்த புதிய சட்டங்கள் மூலம் பஞ்சாபின் நிலைமையும் பீகாரைப் போல ஆகி விடும். அதன் பிறகு, எங்கு போய் வேலை தேட முடியும்? நகரங்களில் அற்பக் கூலிக்கு வேலை செய்ய ஆள் பட்டாளத்தைத் திரட்டத்தான் இந்த விவசாய சீர்திருத்த சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

வீடியோவின் சில பகுதிகளின் மொழியாக்கம் கீழே.

டெல்லி எல்லைப் புறத்தில் முகாமிட்டிருக்கும் டிரக்குகள் மற்றும் மக்கள் திரள் சுமார் 30-40 கிலோமீட்டர் தூரத்துக்கு பரவி உள்ளனர் என்று எங்களுக்கு கிடைத்த தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.

இங்கு ஒரு தடவை சுற்றிப் பார்க்கலாம். மக்களோடு பேசுவோம், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

இங்கே பொதுஉணவு (லங்கர்) விநியோகிக்கப்படுகிறது, இனிப்புகளையும் தண்ணீரையும் தண்ணீரை விநியோகித்து வருகின்றனர். சேவை உணர்வுடன் இதைச் செய்கின்றனர். குடும்பத்தோடும சிலர் வந்துள்ளனர்.

“வணக்கம் ஐயா”

“வணக்கம்”

“இரவில் இங்கு எத்தனை பேர் தூங்குவார்கள்?”

“நிறைய பேர்!”

“உங்களிடம் மின்சார எக்ஸ்டென்ஷன் பாக்சுகளும் மின்னிணைப்பும் இருக்கிறதா?”

“ஆம், எல்லாம் இருக்கு, எங்களுக்கு தண்ணீரும் மின்சாரமும் கிடைக்கிறது. தேவைப்பட்டால் நாங்கள் ஒரு ஆண்டு வரை இங்கு முகாமிட்டு போராட முடியும்.”

*****

போராட்டத்தின் பின்னணி

இது பற்றிய விபரம் தெரியாதவர்களுக்காக சொல்கிறேன். பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் 2-4 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜூன் மாதத்தில், விவசாய சீர்திருத்தங்களுக்கான அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. பின்னர், அவற்றுக்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன, இது விவசாயிகளிடையே கவலைகளையும் அச்சங்களையும் எழுப்பியுள்ளது. அவர்கள் அரசுடன் பேச முயன்றனர், பேச்சு வார்த்தையில் அவர்கள் தங்கள் எதிர்ப்புக்கான காரணங்களை விளக்கக்காட்சிகளாக வழங்கியுள்ளனர்.

நமது விவசாய அமைச்சர் யார் என்று தெரியாதவர்களுக்கு சொல்கிறேன், அவர் பெயர் நரேந்திர சிங் தோமர். ஜீ நியூஸ்-க்கு அவர் அடிக்கடி பேட்டி தருவதால் அதைப் பார்ப்பவர்களுக்கு அவர் நன்கு அறிமுகமாகியிருப்பார். மற்றபடி பொதுவெளியில் அதிகம் அவருக்கு அறிமுகம் கிடையாது. விவசாயிகளுடன் பேசக் கூட அவருக்கு நேரம் இல்லை.

இங்கு ஜீ நியூஸ் செய்தியாளர்கள் வருகிறார்கள். இது காலிஸ்தான் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களை கவனிப்போம். கவனமாக கேட்போம். அவர் எதிர்ப்பின் சாராம்சத்தை கூறுகிறார். நாம் அதில் குறுக்கிடக் கூடாது. அவர்களும் தங்கள் வேலையைச் செய்கிறார்கள்.

இந்த போராட்டம் டெல்லி-ஹரியானாவில் எல்லையில் உள்ள சிங்குவில் நடக்கிறது. முடிந்தவரை, போராட்டம் நடக்கும் பல இடங்களை உங்களுக்குக் காட்ட முயற்சிக்கிறோம். திக்ரி, காசிப்பூர் பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது.

*****

“இந்த நரேந்திர மோடிஜியின் போஸ்டர் கிழிக்கப்பட்டதா?”

“ஆமாம்.”

“நீங்க அதைக் கிழித்தீர்களா?”

“நான் கிழித்ததாக பொய் சொல்லி உங்களுக்கு முன்னால் ஒரு ஹீரோவாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு 10% உற்சாகம் இருக்கிறது என்றால், இங்கு வந்திருக்கும் விவசாயிகள் எல்லோரும் 100% உற்சாகத்துடன் உள்ளனர்.”

******

விவசாயிகளா, ஆப்கானிஸ்தானிலிருந்து வருபவர்களா?

“இது நேரலையா?”

“இல்லை ஐயா, இது நேரலையில் இல்லை. இது ஓரிரு நாட்களில் இணையத்தில் வெளியாகும்.”

“புராரி மைதானத்துக்குப் போகும்படி அவர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் யாருக்காக சாலையில் பள்ளம் தோண்டினார்கள், சாலைகளை உடைத்தார்கள், யாரை எதிர் கொள்ள அவர்கள் தயாரித்தார்கள்? ஆப்கானிஸ்தானிலிருந்து யாராவது வருகிறார்களா, என்ன? வருவது இந்தியாவின் விவசாயிகள்.”

“அவர்கள் உங்களை நடத்திய விதம் சரி என்று நினைக்கிறீர்களா?”

“இல்லை இல்லை. எனக்கு 60 வயது, அவர்கள் என்னை தண்ணீர் பீரங்கிகளாலும் கண்ணீப் புகைக் குண்டுகளாலும் தாக்கினார்கள். அவர்கள் சிலரை நகர்ப்புற நக்சல்கள் என்று அழைக்கிறார்கள், சிலரை தேச விரோதிகள் என்று அழைக்கிறார்கள்.

மருத்துவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டால், ​​அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறினார்கள். மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நின்றபோது, ​​அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறினார்கள். இப்போது, விவசாயிகள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள், அவர்களும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்கிறார்கள். இதன் பொருள் இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிப் பேர் வழிதவறி விட்டார்கள். எதிர்ப்பு தெரிவிக்கும் எவரும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

பீகாரும் பஞ்சாபும் – என்ன வேறுபாடு?

விஷயம் என்னவென்றால், பீகார், மத்தியப் பிரதேசம், உ.பி.யில் விவசாயிகளுக்கு மண்டி அமைப்பு இல்லை, அவர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். பஞ்சாபிலும் ஹரியானாவிலும் விவசாயிகளுக்கு அதே நிலைமை ஏற்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறதா? இப்போது, ​​பிரச்சனையை சரி செய்யுங்கள் என்று நாம் கேட்கும்போது, ​​நாங்கள் கூட தவறாக வழி நடத்தப்படுகிறோம், நாங்கள் பயங்கரவாதிகள் என்று கூறுகிறார்கள்.

2006-ல் பீகாரில் ஏபிஎம்சி மண்டிகள் முறை ஒழித்துக் கட்டப்பட்டது, ஏகபோகம் என்று இவர்கள் சொல்வது நீக்கப்பட்டது. இப்போது அங்கு நிலைமை என்ன?

பஞ்சாபில் இருந்து தங்கள் நிலங்களை விற்று விட்டு பீகார் செல்ல விரும்பும் யாரையாவது காட்ட முடியுமா? பீகாரில் திறந்த சந்தை விவசாயிகளுக்கு பயனளித்திருந்தால், பீகாரில் இருந்து மக்கள் பஞ்சாபிற்கு ஏன் வேலை தேடி போகிறார்கள்? பஞ்சாபிலிருந்து பீகாருக்குத்தானே போயிருப்பார்கள்?

முந்தைய அரசாங்கங்கள் எங்களை நோயாளியாக்கின, மோடி எங்களை ஐ.சி.யுக்குள் தள்ளுகிறார்.

விவசாய சட்டங்கள் எங்களை விடுவிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள் … சோட்டு ராம் மண்டி முறையை அறிமுகப்படுத்தியபோது நாங்கள் விடுவிக்கப்பட்டோம். இப்போது மோடி மண்டி அமைப்பிலிருந்து நம்மை வெளியேற்றி நம்மை விடுவிக்கப் போகிறாரா, என்ன?

திறந்த சந்தை காரணமாக அமெரிக்காவின் விவசாயம் சுரண்டப்பட்டது. ஒட்டு மொத்த நாட்டிலும் உத்தர பிரதேசம், பீகார் போன்ற நிலைமையைக் கொண்டு வரப் போறாங்களா? இந்த மூன்று சட்டங்களும் அமல்படுத்தப்பட்டால் எங்கள் நிலம் எல்லாம் தரிசாகிப் போய் விடும் விவசாயிகளை நிலத்திலிருந்து அகற்றி நகர்ப்புறங்களில் மலிவான உழைப்பை வழங்க அவர்களை பயன்படுத்துவதற்கான திட்டம் இது.”

“இந்தப் போராட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?”

“அது மோடிஜியைப் பொறுத்தது. அடுத்த ஆறு மாதங்களுக்கு உணவுப் பொருட்களோடு வந்திருக்கிறோம். நாங்கள் இங்கேயே முகாமிட்டு சாப்பிட்டுக் கொண்டு போராடுவோம், இது எங்களுக்கு ஒரு சுற்றுலா போலத்தான். எங்கள் வயல்களிலும் இப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம்.

அவர்கள் தோண்டிய பள்ளங்களை ஒவ்வொன்றாக நிரப்புகிறோம். குழாய் தண்ணீரில் பல் துலக்குகிறோம். நீர் பீரங்கிகள் எங்களை எப்படி பயப்படுத்த முடியும்?

நான்கு நாட்களுக்கு ஏழு பேர் இங்கே இருக்கும் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம், நான்கு நாட்களுக்குப் பிறகு, வேறு ஏழு பேர் இங்கே இருப்பார்கள், எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வந்து போராட்டங்களைத் தொடருவார்கள்.”

“சுழற்சி முறையில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்பீர்களா?”

“நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம். இது ஒரு மாதம், இரண்டு மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் ஆனாலும் எதிர்ப்பு தொடரும்.”

******

“நான் ஹரியானாவைச் சேர்ந்தவன் என்பதை நிரூபிக்க எனது ஐ-கார்டு, வாக்காளர் அடையாளத்தைக் காட்டுகிறேன். ஹரியானாவிலிருந்து இங்கு யாரும் இல்லை என்று ஹரியானா முதல்வர் கூறுகிறார். இந்த நபர்கள் பஞ்சாபில் இருந்து மட்டும் வந்தவர்கள் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார்கள்.”

விவசாய சட்டங்கள் யாருக்காக?

“இந்திய அரசாங்கம் மூன்று விவசாய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது, மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன. எனவே, இந்த மூன்று சட்டங்களையும் அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். விவசாயிகளுக்கு பயனளிப்பதற்காக இந்த மசோதாக்கள் எங்களுக்கு கிடைத்ததாக மோடி அரசு கூறுகிறது. 13-ம் தேதி மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், இப்படி சட்டங்களை கொண்டு வாருங்கள் என்று யார் உங்களிடம் கேட்டார்கள் என்று கேட்டோம்.”

“இரண்டாவதாக, இடைத்தரகர்களை அகற்ற இந்த சட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இடைத்தரகர் என்றால் என்ன என்று வரையறுக்கும்படி கேட்கிறோம். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சந்தைப்படுத்தல் அமைப்பு உலகின் மிகச் சிறந்த ஒன்றாகும்.  ‘இடைத்தரகர்கள்’ கொண்டு போகும் வண்டிகளை அவிழ்த்து விடுகிறார்கள், அவற்றை சுத்தம் செய்கிறார்கள், எங்களுக்கு பொருத்தமான கட்டணங்களைப் பெறுகிறார்கள், அவற்றை பைகளில் நிரப்புகிறார்கள், அவற்றை மாற்றி விவசாயிக்கு பணம் தரப்படுகிறது.”

யார் இடைத்தரகர்?

“அவர் 1500 க்கு விற்று 1900 ரூபாய் பில் செய்தால், அவர் ஒரு இடைத்தரகர். அவர் இந்த சேவைகளை எல்லாம் கொடுத்து அதற்காக ஒரு கமிஷனை எடுத்துக் கொள்கிறார். அவர் ஒரு சேவை வழங்குநர். அவர் ஒரு இடைத்தரகர் அல்ல. இடைத்தரகர் என்பது அவர்களுக்கு ஒரு சாக்கு.”

“இடைத்தரகர் என்பவர் வியாபாரத்திலும் வணிகத்திலும் ஈடுபடுபவர். இந்திய அரசின் ஒப்பந்தங்கள் எதுவும் ஒரு இடைத்தரகர் இல்லாமல் நடப்பதில்லை. அவர்களை பொறுத்தவரை, அவர் ஒரு சேவை வழங்குநர் அல்ல.”

விவசாய சட்டங்களை எதிர்த்து 3 மாதங்களாக நாடக்கும் போராட்டங்கள்

சிக்கல் என்னவென்றால், அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. பின்னர், மூன்று மசோதாக்களும் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால் ஒன்று வர்த்தகம் மற்றும் வணிகத்துக்கான சட்டம், இரண்டாவது விலை உத்தரவாதச் சட்டம் மூன்றாவது அத்தியாவசிய பொருட்கள் சட்டம். ​​விவசாயிகளுக்கு இந்த மசோதாக்களில் சில சிக்கல்கள் உள்ளன, அவற்றை மத்திய அரசிடம் கூறி வருகின்றனர். ஆனால் அரசாங்கம் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே, அவர்கள் தங்கள் போராட்டங்களை பஞ்சாப், ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு நகர்த்தியுள்ளனர்

குறைந்த பட்ச ஆதார விலை போன்ற மசோதாக்களில் கூடுதல் சிக்கல்களைச் சொல்கிறேன். முதலாவதாக, குறைந்த பட்ச ஆதார விலை. இரண்டாவதாக, பணம் பெறுவது தொடர்பாக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துடன் விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால், அவர்கள் அதற்காக மாவட்ட ஆட்சியரிடம்தான் முறையிட முடியும். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. மூன்றாவதாக, குறைந்த பட்ச ஆதார விலைகளில் அரசு விளைபொருட்களை வாங்கும் இடங்களான மண்டிகளை ஒழித்துக் கட்ட அரசு முயற்சிக்கிறது என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

இப்போது, ​​சிங்கு எல்லையில் எதிர்ப்பு தொடர்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். டெல்லி போலீசார் இங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு போலீஸ்காரருடன் உரையாடல்

எப்போதும் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்று கேள்விப்பட்டிருப்பதால் நாம் போலீசாரிடமும் பேசுவோம். இப்போது ஒன்றிய அரசு விவசாயிகளையும் படைவீரர்களையும் மோத வைத்திருக்கிறது.

“ஐயா, நீங்கள் கண்ணீர்ப்புகை அல்லது தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறீர்களா?”

“நாங்கள் ஒருபோதும் அதை ஆதரித்ததில்லை.”

“ஆதரித்ததில்லை என்றாலும் நீங்கள் செய்ய வேண்டியிருக்குமா?”

“நாங்கள் எதையும் பயன்படுத்தவில்லை.”

“கண்ணீர் புகையும் நீர் பீரங்கிகளும் பயன்படுத்தப்படவில்லையா?”

“நான் அங்கு இல்லை.”

“நீங்கள் செய்திகளைக் கூட பார்க்கவில்லையா? டெல்லியில் நீங்கள் புதிதாக வேலைக்கு வந்திருக்கிறீர்களா?”

“இல்லை, டெல்லி போலீஸில் 16 ஆண்டுகள் ஆகி விட்டன.”

“ஐயா, டெல்லி போலீஸ் பற்றி திரைப்படங்கள் சித்தரிக்கும் விதம் பற்றி உங்களுக்கு திருப்திதானா?”

“நேர்காணல் கொடுக்க எனக்கு அனுமதி இல்லை.”

“சரி. கேமராவை ஆஃப் செய்யுங்க”

****

மோடியும் அமித் ஷாவும், பிற பாஜக தலைவர்களும்

“நரேந்திர மோடியை விட எந்த பிரதமரும் பெரிய துரோகி அல்ல.”

“அவர் ஒரு துரோகியா?”

“அவர் ஒரு துரோகி.”

“உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி என்ன சொல்கிறீர்கள்? அவரும் ஒரு துரோகியா?”

“இந்த பொல்லாத நபரை நீக்குவோம். கனடா பிரதமர் ட்ரூடோ போன்ற ஒரு நல்ல பிரதமரைப் பெறுவோம். டிரம்பைப் போல அல்ல. ட்ரூடோவைப் போல

இவங்க எல்லோருமே திருமணமாகாதவர்கள். யோகி ஒரு திருமணமாகாதவர், மோடியும் ஒரு திருமணமாகாதவர். ஹரியானாவின் முதல்வர், கட்டார். அவரும் ஒரு திருமணமாகாதவர்க. இவங்க எல்லோருமே வேஸ்ட். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ பேசவோ அவர்களுக்குத் தெரியாது.”

*****

உள்ளூர் கடைக்காரர்களும் இங்கு சம்பாதிக்கிறார்கள், ஏனெனில் போலிஸ், விவசாயிகள் இருதரப்புக்கும் அவர் சிகரெட்டுகளையும் சூயிங் கம் விற்கிறார்கள்

எதிர்ப்பு தளங்களாக மாறும் இடங்கள். ஷாஹீன் பாக் இல் நாம் பார்த்தது போல். அதையும் ஒரு கருப்பு சட்டம் என்று நாம் அழைக்கலாம் … நான் அதை கருப்பு சட்டம் என்று அழைப்பதும் இனவெறி என்று நினைக்கிறேன். நாம் கருப்பு நிறத்தை மோசமான வண்ணம் என்று அழைத்தால், அதுவும் ஒரு பிரச்சினை.

கலவரக் கட்டுப்பாட்டு போலீஸ் வாகனத்தை பார்ப்போம். அதில் ஒரு பெண் அதிகாரியின் படமும் உள்ளது.

நீர் பீரங்கிகளைக் கொண்ட வாகனம் இது. ஓரிரு நாட்களுக்கு முன்பு நாங்கள் பார்த்த பகுதி இது … இதுதான் தடுப்புகளும் முள்வேலியும். இது கண்ணீர் புகையும் நீர் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்ட பகுதி. இது எல்லாம் நடந்தது ஹரியானா, டெல்லி எல்லைப் பகுதியில்

இது சிங்கு எல்லை. கடந்த 3-4 நாட்களாக ஜிடி கர்னல் சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

*****

சாலையின் மறுபுறம் உள்ளவர்கள் இப்போது கூடிவந்துள்ளனர். அந்த பக்கத்தில் உள்ளவர்கள் தரன் தரனில் இருந்தும் அமிர்தசரஸிலிருந்தும் வந்திருக்கிறார்கள். அங்கு உற்சாகம் அதிகமாக உள்ளது.

“ஐயா, உங்களுக்கு தெரியுமா? இதுவரை 2% பேர் கூட இங்கு வரவில்லை. எனது கிராமமான மொஹாலியில் இருந்து ஐந்து பேர் மட்டுமே உள்ளனர். 5 அல்லது 10 பேர் வரும் நபர்களின் எண்ணிக்கை அதுதான்.
நாங்கள் நான்கு நாட்கள் இங்கு இருப்போம், பின்னர் மற்றவர்கள் வருவார்கள். நாங்கள் வீட்டிற்கு செல்வோம்.”

“நீங்கள் இங்கு எத்தனை நாட்கள் இருப்பீர்கள்?”

“மோடிஜி ஒப்புக் கொள்ளும் வரை”

“அவர் ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது?”

“நாங்கள் இங்கேயே இருப்போம், நாங்கள் அவரை ஒப்புக் கொள்ள வைப்போம்”

குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள். இங்கு அதிகமான இளைஞர்கள் உள்ளனர்.

“நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்?”

“பஞ்சாப், அமிர்தசரஸ்”.

நீங்கள் இப்போதுதான் வந்திருக்கிறீர்களா?

“ஆம்.”

“எவ்வளவு நேரம் ஆனது”

“9 மணி நேரம். நாங்கள் பல இடங்களில் நிறுத்தினோம், எனவே சிறிது நேரம் பிடித்தது.”

“வழியில் யாராவது உணவும் நீரும் வழங்கினார்களா?”

“ஆம், நிறைய பேர்.”

“இவர்கள் விவசாயிகள் அல்ல, இடைத்தரகர்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?”

“இல்லை, நிச்சயமாக உண்மை இல்லை. இது முற்றிலும் தவறானது.

“சிலர் மோடியை கடவுள் என்று அழைக்கிறார்கள்.”

“டீ விற்பவர்கள் கடவுளா? முட்டாள்கள்தான் அவரை கடவுளாக கருதுகிறார்கள்.”

விவசாயிகள் பணக்காரர்களா?

“இவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்று சிலர் சொல்கிறார்கள், அவர்கள் எப்படி விவசாயிகளாக இருக்க முடியும்? அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“1947-ல் நாங்கள் பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்தபோது, ​​எங்கள் நிலத்தை சாகுபடி செய்யத்தக்கதாக மாற்றுவதற்கு கடுமையாக உழைத்தோம். அதன்பிறகு, நாங்கள் எங்கள் சொந்த நிலத்தை உருவாக்கி, விவசாயத்தைத் தொடங்கினோம், எங்கள் கடின உழைப்பால் விளைபொருட்களை விற்றோம். இன்று அவர்களிடம் பணம் இருந்தால், அது அவர்களின் கடின உழைப்பால் வந்ததுதான். அரசாங்கங்கள் அதைக் கொடுக்கவில்லை.”

“2022-ம் ஆண்டில், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று அவர்கள் கூறினார்கள்”

“இரட்டிப்பாக்குவது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் அது பாதிக்கும் குறைவாகவே ஆகி விடும் என்று எனக்குத் தெரியும்.”

*****

சியாட்டிலிலிருந்து பிரதீக்

“நான் ப்ரதிக், நான் வாஷிங்டனின் சியாட்டிலிலிருந்து வந்தவன். எனது தாத்தா இங்கே இருப்பதால் போராட்டத்தில் சேர நான் இங்கு வந்துள்ளேன்.”

“உங்கள் தாத்தா இங்கே இருக்கிறாரா? அவரது வயது என்ன?”

“சுமார் 85.”

“இதற்கு பதில் சொல்லுங்கள். உங்க தாத்தா மிகவும் பணக்காரர் என்று சொல்வார்கள், அவர் தனது பேரனை சியாட்டலுக்கு அனுப்பியிருக்கிறார். ஒரு விவசாயி அவ்வளவு பணக்காரனாக எப்படி இருக்க முடியும்?”

“என் தாத்தா மற்றும் தந்தை இருவரும் என்னை அங்கு அனுப்ப மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். நான் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை இல்லை. என் தந்தை கடினமாக உழைக்கிறார், அதனால்தான். அனைத்து ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பணக்காரர்களாக பிறக்கவில்லை. அவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர்.”

*****

குளிர் அதிகமாகிறது. நானும் என் ஸ்வெட்டரை போட்டுக் கொள்கிறேன்.

இந்தக் குளிரில், என்னென்ன நடக்கிறது. விவசாயிகள் குளிரை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் நாம் பார்க்கப் போகிறோம். இரவு 11-12 மணி வரை இங்கு தங்க முடிவு செய்துள்ளோம்.

அவர்கள் டிராக்டர்களில் இருந்தாலும், அது மூடப்பட்டவை இல்லை. குளிர்ந்த காற்று தொடர்ந்து உள்ளே நுழையும். இது ஒரு திறந்த வெளியில் மெத்தையில் தூங்குவது போன்றது.

உணவு தயாரிப்பும் வினியோகமும்

“நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்?”

“பாட்டியாலா.”

“ஏறக்குறைய எத்தனை பேருக்கு நீங்கள் உணவளிப்பீர்கள்?”

“முடிந்தவரை பல. இரவு முழுவதும் ஆனாலும் கூட.”

“இது ஒரு லாங்கர், இல்லையா?”

“இது பாபா நானக்கின் லங்கர்.”

“இது ஒரு நாளுக்கு அல்ல, எங்கள் டிராக்டர்களில் 6 மாதங்களுக்கு ரேஷன் கொண்டு செல்கிறோம்.”

“அதை நீங்களே கொண்டு வந்தீர்களா? நீங்கள் லங்கருக்கு சேவை செய்கிறீர்கள்.”

“நாங்கள் இன்றைக்கே போய் விடப் போவதில்லை. சட்டங்களை ரத்து செய்வது வரை இது தொடரும்.”

போராட்டத்தில் சேவை உணர்வும் ஒரு முக்கிய பகுதியாகும்.

“எங்கள் மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள். மேலும் மூன்று லட்சம் டிராக்டர்கள் வர உள்ளன. 15-20 கி.மீ தூரத்தில், வெவ்வேறு இடங்களில் பல லாங்கர்கள் உள்ளன.”

“ஏறக்குறைய, எத்தனை பேருக்கு லங்கர் தயாரிக்கப்படுகிறது?”

“சுமார் 15000 பேருக்கு”

போராட்டங்களின் போதெல்லாம், கல்சா எய்ட் மற்றும் சீக்கிய சமூகத்தின் பிற அமைப்புகள் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குகின்றன. இங்கே அது அவர்களின் சொந்தப் போராட்டமாக இருக்கும்போது, ​​அவர்கள் அவ்வாறு ஈடுபடும்போது, ​​ அவர்கள் சமூகத்திற்கு ஒரு தன்னார்வ சேவையைச் செய்கிறார்கள்.இந்த உணர்வு பெரும்பாலும் இந்த பகுதியில் உள்ளது. நீங்கள் இங்கு வராவிட்டால், நீங்கள் அதைப் பார்க்க மாட்டீர்கள், ஆனால் எல்லா சோதனைச் சாவடிகளிலும் அந்த உணர்வு, குறிப்பாக மாலையில் இருக்கிறது.

*****

விவசாயிக்கு என்ன கிடைக்கிறது?

“நாங்கள் விற்கும் பால் ஒரு லிட்டர் ரூ .20 க்கு போகிறது, சிலருக்கு ரூ 40-க்கு விற்கலாம். பிஸ்லரி தண்ணீர் பாட்டில் எவ்வளவு? ரூ .30 க்கு விற்கப்படுகிறது. நாங்கள் ஏழைகளா அல்லது கம்பெனிகள் பணக்காரர்களா?

எங்களிடம் எதுவும் இல்லை. எங்களிடம் மலிவான விலைக்கு வாங்குகிறீர்கள், ஆனால் அது மிக அதிக விலைக்கு விற்கிறீர்கள். ஒரு பெரிய கடையில் மக்காச்சோள மாவு கிலோ ரூ 150 க்கு விற்கப்படுகிறது. நாங்கள் கிலோவுக்கு 7 ரூபாய் என்று விற்கிறோம். சாதாரண மாவு கிலோ 20 க்கு விற்கப்படுகிறது.”

“யாரோ ஏதோ சொன்னார்கள், எல்லோரும் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜீ நியூஸ் மற்றும் ஆஜ் தக் போன்ற செய்தி சேனல்கள் அந்த ஒருவரை அழைத்து அதை முன்னிலைப்படுத்தின.”

“மோடி என்ன செய்தாலும் அதைச் சொல்லும் ஊடகங்கள் அதுதான். மோடியின் கோதி மீடியா (செல்லப் பிராணி மீடியா)”

*****

பயங்கரவாதிகளா, பாதுகாப்பானவர்களா?

“இப்போது, ​​இரண்டு பெண்கள் இங்கே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு ஆய்வுக்காக இங்கு வந்தார்கள். ஷாஹீன் பாக் குறித்தும் அவர்கள் சில ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். எனவே இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதால் அவர்கள் இங்கு வந்தார்கள். நான் அவர்களிடம் ஒரு விஷயம் மட்டுமே கேட்டேன். இப்போது இருட்டாக இருக்கிறது, நாங்கள் அனைவரும் பயங்கரவாதிகள் உங்களைச் சுற்றி நிற்கிறார்கள், நீங்கள் இரண்டு பெண்கள் தனியாக இருக்கிறீர்கள். பயமாக இல்லையா? என்று கேட்டேன்.

அவர்கள், “உங்கள் தலைப்பாகை மற்றும் தாடியைப் பார்த்தால் எங்களுக்கு பயம் வரவில்லை, நம்பிக்கை வருகிறது” என்றார்கள்

*****

“மோடிக்கும் கட்டருக்கும் நன்றி கூறுகிறோம். அவர்கள் எங்களுக்கு சவால் விட்டார்கள். எங்களுக்கு எதிராகச் சென்றார்கள். நீங்கள் எங்கள் தடுப்பை அகற்ற முயற்சி செய்யுங்கள் என்று சொன்னார்கள்.

விவசாயிகளான நாங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியும். நாங்கள் வறுமையை பொறுத்துக்கொள்வோம், வலியை, எதையும் தாங்குவோம். ஆனால், யாருடைய சவாலையும் ஏற்க நாங்கள் ஒரு கணம் கூட எடுத்துக்கொள்ள மாட்டோம்.

*****

டெல்லியிலிருந்து கிராமங்கள் வரை நீளும் வலைப்பின்னல்

நாங்கள் எல்லையில் அமர்வோம். நாங்கள் 2024 வரை உட்கார்ந்து கொள்வோம். ஒவ்வொரு கிராமத்திலும் நாங்கள் 11 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளோம். அவர்கள் எங்கள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்கள், எங்கள் செலவுகளை கவனிப்பார்கள்.

தினமும் காலை 7 மணிக்கு பஞ்சாபின் செய்தித்தாள்கள் இங்கே வந்து விடுகிறது.நாளை காலை 7 மணிக்கு வாருங்கள், நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். ஒவ்வொரு நாளும், ட்ரிப்யூன், அஜித், ஜக் பானி பத்திரிகைகள் இங்கு வந்து விடுகின்றன.

ஊரில் என்ன நடக்கிறது என்பதை தினமும் தெரிந்து கொள்கிறோம். நாங்கள் வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பில் பேசுகிறோம்.

நீங்கள் எவ்வளவு உணவை விட்டுவிட்டீர்கள்? தினம் தினம் புத்தம் புதிய உணவுப் பொருட்கள் வந்து விடுகின்றன.

மேலும் அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்யச் சொல்கிறார்கள். போராடுவோம் எல்லாவற்றையும் பெறுவோம். ஏனெனில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சங்கங்கள் ஒருமனதாக ஆதரவைப் பெற்றுள்ளன.

*****

பீகாரைச் சேர்ந்த விவசாயி – பஞ்சாபுக்கு கூலி வேலை செய்ய வந்திருப்பவர்

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”

“நான் லூதியானாவிலிருந்து வந்திருக்கிறேன்.”

“இல்லை உங்க சொந்த ஊர்?”

“நான் பீகாரைச் சேர்ந்தவன்.”

“நீங்களும் இவங்களோடு சேர்ந்து வந்திருக்கிறீர்களா?”

“ஆம்.”

“நீங்கள் ஒரு தொழிலாளராக வேலை செய்கிறீர்களா?”

“இல்லை, சேவை செய்ய நான் இங்கே வந்திருக்கிறேன்”

“உங்கள் பெயர் என்ன?”

“ராம் பர்வேஸ் யாதவ்.”

“விவசாயிகள் எதைச் செய்தாலும் அதுதான் சரியான விஷயம், இல்லையா?”

“ஆம், அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள். நாங்களும் விவசாயிகள். எனக்கு பீகாரில் ஒரு வீடு இருக்கிறது, நானும் ஒரு விவசாயி.”

“எவ்வளவு காலம் இங்கு தங்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்?”

“குறைந்தது, இரண்டு முதல் இரண்டரை மாதங்களுக்கு”

“பீகாரைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கும் பஞ்சாபிலிருந்து ஒரு விவசாயிக்கும் என்ன வித்தியாசம்?”

“பீகாரில் கூட, குவிண்டால் ஒன்றுக்கு 800 ரூபாய் கிடைக்கிறது. பஞ்சாபில், ரூ. 1900 கிடைக்கிறது. இருமடங்குக்கு மேல். பஞ்சாபுக்கு நாங்கள் வேலைக்காக வந்துள்ளோம். இங்கேயும் நிலைமை பீகார் போல மாறினால், நாங்கள் எங்கு செல்வோம்? நாங்கள் முதலில் அங்கிருந்து இங்கு வந்தோம், இங்கேயும் இதே நிலை ஆனா என்ன செய்ய முடியும்?”

“பீகாரில் இது ஏன் நடந்தது?”

“அங்கு மண்டி இல்லை. அதை ஒழித்துக் கட்டி விட்டார்கள். வியாபாரிகள் வெளிச் சந்தையில் வாங்குகிறார்கள். நாங்கள் அரசாங்க விலைக்கு, 6 மாதங்களுக்குப் பிறகுதான் பணம் கிடைக்கும். உடனேயே பணம் வேண்டும் என்பதால் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கிறோம். அவர்கள் முழு அமைப்பையும் வியாபாரிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளார்கள்”

“பீகாரில் நடந்தது அனைத்தும் பஞ்சாபில் நடக்குமா?”

“ஆம், அதுதான் நடக்கும். நாங்க அவ்வளவு தூரத்திலிருந்து இங்கு வந்தோம். பஞ்சாபிலும் அதே நிலைமை வந்தால், நாங்கள் எங்கு வேலைக்கு செல்வோம்?”

*****

உணவுப் பொருட்களின் கையிருப்பு

“ஐயா, உங்களிடம் எவ்வளவு உணவுப் பொருட்கள் உள்ளன”

“10 மூட்டை மாவு. 1 பை 50 கிலோ. மொத்தம் 500 கிலோ மாவு. 50 கிலோ அரிசி. 40 கிலோ பயறு. மசாலாப் பொருட்களும், 15 அட்டைப்பெட்டிகள் தண்ணீர். ஒரு பெட்டியில் சுமார் 15 – 18 பாட்டில்கள் உள்ளன.”

“மொத்தம் இதுபோன்ற எத்தனை டிராக்டர் தள்ளுவண்டிகள் இங்கு இருக்கும்?”

“ஆயிரக்கணக்கில். ஒவ்வொரு டிராலியிலும் இவ்வளவு உணவுப் பொருட்களை நீங்க பார்க்கலாம்.”

“இது 6 மாதங்களுக்கு போதுமானது.  ஒவ்வொரு நாளும், எங்கள் கிராமத்திலிருந்து ஒரு வண்டி வரும்”

“கிராமத்திற்கு ஒரு வாகனம் வந்துள்ளது நாளை அது திரும்பிப் போகும். எங்கள் உணவுப் பொருட்களைப் பாருங்கள். எங்களிடம் கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு உள்ளது. எங்களிடம் எல்லாம் இருக்கிறது. இங்கே பாருங்கள் – பயறு. சுண்டல்.”

“இது சப்பத்தி கட்டை, இதை வைத்தே மோடியை அடிப்பேன். அமித் ஷாவையும்”

“எங்கள் கிராமத்திலிருந்து பால் எங்களுக்கு அனுப்பப்படுகிறது. 10 குவிண்டால் பால் எல்லோருக்கும் விநியோகிக்கப்படும். நாளைக்கு பால் கிடைக்கும். தினமும்.”

“நாங்கள் பஞ்சிரி செய்கிறோம். பஞ்சாபிலிருந்து வந்த வெல்லம்”

“அது மட்டார் பன்னீரா? நான் முகக்கவசம் அணிந்திருப்பதால் இதை இப்போது சாப்பிட முடியாது.”

“இப்போதுதான் சமைத்தது. இதைப் போல மோடிக்கு சமைக்கத் தெரியுமா?”

“நல்லா இருக்கா?”

“இப்படி சாப்பாடு கிடைத்தால் 6 மாதம் வரை இங்கேயே இருக்கலாம்.”

“நீங்கள் இங்கே சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்.”

“சாப்பிட்டு விட்டே போகிறேன்.”

“இங்கே ஒரு திருமண விருந்து நடக்கிறது.”

“மோடி எங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்.”

*****

“எனது பொறுப்பு பால். 5 குவிண்டால் பால், அவை இரவு 12 மணிக்கு அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாளும். 5 குவிண்டால் பால். ஒரு தொழிற்சங்கம் சண்டிகரில் இருந்து கொண்டு வருகிறது. இன்னும் எத்தனை அவர்கள் கொண்டு வருகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.”

“இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும்.”

“இங்கே பாருங்கள், இது சண்டிகர் குருத்வாரா 44 பகுதியில் இருந்து வந்தது”

“பாலை எடுத்துக் கொள்ளும்படி எல்லோரிடமும் சொல்லியிருக்கிறோம்.”

“இங்கே குளிரூட்டும் வசதி உள்ளதா அல்லது இல்லையா?”

“இல்லை, எங்களிடம் ஐஸ்பாக்ஸ்கள் உள்ளன.”

“டிராக்டர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் ஒரு குடை உள்ளது. சூடான பாலை அங்கே வைத்திருக்கிறோம்.”

*****

ஏமாற்றி விட்டார், மோடி

“வணக்கம் ஐயா.”

“உங்க டீ ஆறிப் போயிருந்தால், அதை டிராக்டரின் சைலன்சரில் சூடேற்றலாம்.”

“இந்திய விவசாயிகளை நீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் இந்திய அரசு தாக்குகிறது. சுவாமிநாதன் கமிட்டி அறிக்கை செயல்படுத்தப்படும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. அவர்கள் விவசாயிகளை கடன்களிலிருந்து விடுவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். மாறாக, அவர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் நம்மைத் தாக்குகிறார்கள்.

இப்போது நாம் அதைப் பார்த்தால், அவர்கள் எங்களை கம்புகளால் அடிக்கிறார்கள். இது ஒரு நல்ல விஷயமா? எந்த நாட்டின் பிரதமராவது இப்படி இருக்கிறாரா?”

“உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் போராடுகிறீர்கள்.”

“நாங்கள் அவருக்கு எங்கள் வாக்குகளை வழங்கியுள்ளோம். அவர் எங்களிடம் பொய் சொன்னார். நாங்கள் அவருக்கு வாக்களித்துள்ளோம். நாங்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறுகிறார். இங்கு யாரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் அவருக்கு வாக்களித்தோம். நாங்கள் அவருக்கு வாக்களித்ததால் மட்டுமே அவர் வென்றார்.

“சிலர் விவசாயிகளை காலிஸ்தானி என்றும் அழைக்கிறார்கள்.”

“ஆம்.”

“நீங்கள் இப்போது இங்கே இருக்கிறீர்கள். இது முற்றிலும் அமைதியானது மற்றும் அமைதியானது. நீங்கள் சுற்றிப் பார்த்தீர்கள், யாராவது இங்கே காலிஸ்தானைக் கேட்கிறார்களா?”ய

*****

இப்போது 12:30 – 1 AM.

தங்கள் டிராக்டர் டிராலியில் யார் தூங்க முடியுமோ அங்கே தூங்குகிறார்கள். தரையில் தூங்க யார் ஏற்பாடு செய்தாலும், அவர்கள் தரையில் தூங்குகிறார்கள். ஒன்று மெத்தை அல்லது அரிசி வைக்கோல்.
இங்கே அமைதி யாக உள்ளது.

புயலுக்கு முந்தைய அமைதியாக இருக்கலாம். ஆனால், அமைதி இருக்கிறது.

எல்லோரும் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைவரும் ஓய்வெடுக்கிறார்கள்.

நாளை குரு பூரப், இது இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

எல்லோரும் முழுமையாக தயாராக இருக்கிறார்கள். உணவு ஏற்பாடு மட்டுமல்ல. தூங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

இப்போது வெப்பநிலை 9 – 10 டிகிரியாக இருக்க வேண்டும். அதைவிடக் குறைவாக இருக்கலாம்.
தரையில் தூங்குகிறார்கள். டிராக்டர் டிராலியின் கீழ், தரையில், தரையில் ஒரு மெத்தை விரித்து, தங்களை ஒரு போர்வையால் மூடிக் கொண்டு.

இவர்கள் இந்தியாவின் விவசாயிகள். இவர்கள் இந்தியாவுக்கு உணவு வழங்குபவர்கள். இங்கே ஒரு நியாய உணர்வு இருக்கிறது.

சிறிய நகரங்கள் அல்லது இடங்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு, இங்கே ஒரு திருவிழாவின் உணர்வு இருக்கிறது. பஞ்சாபும், ஹரியானாவும் ராஜஸ்தானும் இங்கு வந்து விட்டது போலத் தெரிகிறது.

இன்றும் மக்கள் அமிர்தசரஸ் மற்றும் மோகாவிலிருந்து வந்திருக்கிறார்கள். மேலும் மேலும் சேர்கிறார்கள்
ஒரு வலுவான சமூக உணர்வு உள்ளது. இது நம்முடையது என்ற உணர்வு வலுவாக உள்ளது.

அவர்கள் ஏணிகளையும் வைத்துள்ளனர். உணவு, தண்ணீர், எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு டிராக்டர்-டிராலிக்கும் உள்ளே மின்சாரம் உள்ளது.

இப்போது அதிகாலை 12:30 மணி. இத்துடன் புறப்படலாம்

ஆர்ப்பாட்டங்களை நாள் முழுவதும் பார்த்தோம். வலுவான சமூக உணர்வை பார்த்தோம்

இந்தியாவுக்கு உணவு வழங்குபவர்களும் நாட்டின் குடிமக்களும் ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவர்கள் “கறுப்புச் சட்டங்களுக்கு” எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பு, அதன் நான்காவது நாளில், இன்னும் தொடர்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்