Aran Sei

இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு – ஐஐஎம்-களில் 60%-க்கு மேல் நிரப்பப்படவில்லை

image credit - thehindu.com

யர்கல்விக்கான மத்திய நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதிக்கும் மேல் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், பட்டியல் சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் 40% நிரப்பப்படாமல் உள்ளன என்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நேற்று மக்களவையில் தெரிவித்துள்ள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் உத்தம் ரெட்டி கேட்ட கேள்விக்கு பதிலாக இந்த விபரங்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

இந்திய மேலாண்மை கழங்கங்களில் (ஐஐஎம்-கள்) இந்தப் பிரச்சினை குறிப்பிடத்தக்க அளவு தீவிரமாக உள்ளது. அவற்றில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் 60%-க்கும் மேல் நிரப்பப்படாமலும், பழங்குடியினர் பிரிவில் 80% இடங்கள் நிரப்பப்படாமலும் உள்ளன.

இந்திய தொழில்நுட்பக் கழகங்களைப் பொறுத்தவரை (ஐஐடி-கள்), ஆசிரியர் அல்லாத பதவிகள் பற்றிய விபரங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.

ஐஐடிகளும் ஐஐஎம்களும் கற்பிக்கும் பதவிகளில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருவதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

மத்திய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் மட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை நிரப்புவதில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. பழங்குடி இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட 137 இடங்களில் 9 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதாவது 93% இடங்கள் காலியாக உள்ளன.

மேலும், மத்திய பல்கலைக் கழகங்களில் உள்ள 1,062 பேராசிரியர்களில் 1%-க்கும் குறைவானவர்களே பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தி ஹிந்து தெரிவிக்கிறது.

அதே போல, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான 378 பேராசிரியர் இடங்களில் 5%-க்கும் குறைவான இடங்களை நிரப்பப்பட்டுள்ளன.

நேற்று மக்களவையில் தரப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 42 மத்திய பல்கலைக் கழகங்களில் உள்ள 6,074 காலி இடங்களில் 75% ஒதுக்கீடு செய்யப்பட்டவை என்று தி ஹிந்து செய்தி கூறுகிறது.

இதற்கான பொறுப்பு சுயேச்சை அமைப்புகளான அந்தந்த பல்கலைக்கழகங்களுடையது என்று அமைச்சர் பழியை பல்கலைக் கழகங்கள் மீது போட்டிருப்பதாகவும் தி ஹிந்து கூறியுள்ளது.

ஜூன் 2019-ல் பல்கலைக் கழக மானிய கமிஷன், ஆறு மாதங்களுக்குள் காலியிடங்களை நிரப்புமாறும் அவ்வாறு நிரப்பத் தவறினால் மானியம் வெட்டப்படும் என்று கடிதம் எழுதிய பிறகும் இடங்கள் காலியாக உள்ளன என்பதை தி ஹிந்து சுட்டிக் காட்டியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்