Aran Sei

7-ம் கட்ட பேச்சுவார்த்தை – விவசாய சங்கங்கள் சொல்வது என்ன?

Image Credit : thehindu.com

மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாய சங்கங்கள், நேற்று மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூறிய கருத்துக்களின் தொகுப்பு

பாரதிய கிசான் யூனியன் (தகவுண்டா) தலைவர் பூட்டா சிங் புர்ஜ்கில் : “பெரும்பாலான விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களை ஏற்று்க கொண்டிருக்கிறார்கள் என்று விவசாய அமைச்சர் சொன்னார். அவர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு கேட்டோம். அவர்கள் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. இந்த சங்கங்கள் பாஜகவினதும் கூட்டணி கட்சிகளதும் விவசாய பிரிவுகள் என்று நாங்கள் சொல்கிறோம்”

மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

 

இந்தக் கூட்டத்தில் விவசாய அமைச்சர் நரேந்திர தோமர், உணவுத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சோம் பிரகாரஷ் ஆகியோர் அரசுத் தரப்பில் கலந்து கொண்டனர்.

சுர்ஜீத் குமார் ஜ்யானி, ஹர்ஜீத் சிங் கிரேவால் ஆகிய பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு விவசாயத் தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து இது குறித்து பேச நேரம் கேட்டிருப்பதாகவும், இன்று மாலை 5.45-க்கு மோடி முகாமிட்டிருக்கும் இடத்துக்கு அழைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். விவசாய சங்கங்களுடன் ஒருங்கிணைப்பதற்காக பாஜக அமைத்துள்ள குழுவில் இருவரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

விவசாய சங்கங்களின் கருத்துக்கள்

பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்) தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் : “வேளாண் சட்டங்களின் பலன்களைப் பற்றி விவாதிக்கும்படி சொல்லப்பட்டபோது நாங்கள் கறாராக மறுத்து விட்டோம். பேச்சுவார்த்தை சட்டங்களை ரத்து செய்வது பற்றி மட்டும்தான் இருக்க முடியும். வேறு எதைப்பற்றியும் இல்லை என்று சொல்லி விட்டோம்.”

“நாட்டின் பிற பகுதி விவசாயிகள் இந்தச் சட்டங்களை ஆதரிக்கிறார்கள் என்று சொன்னார்கள். செப்டம்பர் முதல் தெருக்களில் போராடுபவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? இந்தியாவின் 500 விவசாயிகள் சங்கங்கள் போராடுகின்றன. அவர்கள் யாரையும் அங்கீகரிக்கவில்லையா”

“அடுத்த பேச்சுவார்த்தை ஜனவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளது. சட்டங்களை ரத்து செய்வது பற்றியும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதும் பற்றி மட்டும்தான் பேச வேண்டும். இவற்றை அவர்கள் விவாதிக்க விரும்பவில்லை என்றால், பேச்சுவார்த்தைக்கு அழைக்காதீர்கள் என்று கூறி விட்டோம். இதைத் தொடர்ந்து விரிவான விவாதத்துக்குப் பிறகு ஜனவரி 8-ம் தேதி வரச் சொல்லியிருக்கிறார்கள்”

கீர்த்தி கிசான் யூனியன் பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங் தீப்சிங்வாலா : “இன்று, மத்திய அமைச்சர்கள், செப்டம்பர் முதல் போராட்டங்களின் போது நம்மை விட்டுப் பிரிந்த 70 விவசாயிகளின் நினைவாக இரண்டு நிமிடம் மௌனம் அனுசரித்தார்கள். நாங்கள் அவர்களை தியாகிகள் என்று அழைக்கிறோம்.

சட்டங்களின் ஒவ்வொரு பிரிவாக விவாதிக்க வேண்டும் என்று அரசு சொல்கிறது. ஆனால், நாங்கள் அவர்களுக்குச் சொல்வது ஒரே வாக்கியம்தான் – முறையீடு இல்லை, பேரம் பேசுவது இல்லை, ரத்து மட்டுமே. தாங்கள் 10 அடிகள் நடந்து விட்டதாகவும், நாங்கள் சிறிதளவாவது நகர வேண்டும் என்றும் அரசு சொன்னது. நாங்கள் அதை உறுதியாக நிராகரித்து விட்டோம்.”

Image Credit : Indian Express
போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி – Image Credit : Indian Express

பஞ்சாப் கிசான் யூனியன் தலைவர் ருல்து சிங் மன்சா : “இன்றைய சந்திப்பில் ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றாலும், அரசின் அணுகுமுறை மென்மையாக மாறியிருப்பதை உணர முடிந்தது. அடுத்த சந்திப்பில் சட்டங்களை ரத்து செய்வது பற்றி மட்டும்தான் பேசுவோம் என்று கூறினோம். அவர்கள் அந்த திசையில் நடப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்”.

அகில இந்திய கிசான் சபா பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா : “சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேச முடியாது. முதலில் சட்டங்களை ரத்து செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம். அதன் பிறகு குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய விவாதம் எடுத்துக் கொள்ளப்படும்”

செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்