Aran Sei

50 கிராம் பொங்கல் 80 ரூபாய் – ரயில்வேயில் பகல் கொள்ளை

ல்லவன் சிறப்பு ரயிலில் 50 கிராம் பொங்கல் 80 ரூபாய்க்கு விற்கப்படுவதைக் கண்டித்துப் பயணி ஒருவர் பேசிய காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. பொங்கலுங்கான காலாவதி 8 மாதங்கள் எனக் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி அப்பயணி பேசியிருக்கிறார். திருச்சி வழியாக காரைக்குடியிலிருந்து சென்னைக்கு, தினசரி காலை பல்லவன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பொது முடக்கத்தின் காரணமாகத் தற்போது சிறப்பு ரயிலாக அது இயக்கப்படுகிறது. பயணிகளுக்கு ஐஆர்சிடிசி ஒப்பந்ததாரர்கள் மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், பல்லவன் சிறப்பு ரயிலில் திருச்சியிலிருந்து சென்னைக்குப் பயணம் செய்த பயணி ஒருவர், ப்ளாஸ்டிக் கப்பில் 50 கிராம் அளவே உள்ள பொங்கலைக் காட்டி, இந்தப் பொங்கல் 80 ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் கொள்ளை என ஐஆர்சிடிசி ஊழியர்களிடம் பேசிய வீடியோ வெளியாகியிருக்கிறது.

“நிச்சயமாக இது அநியாயம்” என்றும் “ஒரு போதும் இதனை அனுமதிக்கக்கூடாது” என்றும் கூறுகிறார் டி.ஆர்.இ.யூ-வின் சதர்ன் ரயில்வே உதவித் தலைவர் இளங்கோ.  ”ரயில்வேயில் உணவுப் பொருட்கள் விற்பனைக்கான ஒப்பந்தம் முழுவதும் தனியாரிடம் இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற கொள்ளைகளில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. சிறப்பு ரயில் என்பதே ஒரு விதத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்டதுதான். இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு கிடையாது.ரயில்வே பயணிகளுக்கென்று 55 வகையான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சிறப்பு ரயில்களில் சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, எந்தச் சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை” என்கிறார்.

மேலும், “என்னதான் சிறப்பு ரயிலாக இருந்தாலும் 50 கிராம் பொங்கல் 80 ரூபாய்க்கு விற்கப்படுவது கண்டனத்துக்குரியது. இதற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவது அவசியம். இது போன்று பாதிக்கப்படும் பயணிகள் மௌனமாக இருக்காமல் சீஃப் கமர்சியல் மேனேஜரிடம் புகாரளிக்க வேண்டும். யாருமே புகார் தரவில்லையென்றால் இந்நிலைதான் தொடரும்” என்கிறார் இளங்கோ.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்