Aran Sei

‘ஆய்வு குழுவில் சாதியா?’ 32 எம்.பி.க்கள் குடியரசு தலைவருக்கு கடிதம்

credits:dnaindia.com

ந்திய வரலாற்றை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள கலாச்சார ஆய்வுக்குழு கலைக்கப்பட வேண்டும் என 32 எம்.பி.க்கள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

இந்தியப் பண்பாட்டின் தோற்றம், பரிணாமம், வளர்ச்சி குறித்து வரலாற்று ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளதாக கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார்.

ஆய்வுக் குழுவில் தென்னிந்தியர்களும் வடகிழக்கு இந்தியர்களும் இல்லை என அதிருப்தி தெரிவித்தும், ஆய்வுக்குழு கலைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

அந்தக் கடிதத்தில்,

“நாங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு முக்கியமான பொருளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உங்களின் உடனடித் தலையீட்டையும் நாடுகிறோம்.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திருமிகு பிரகலாத் படேல் அவர்கள் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14 அன்று எழுத்து வடிவில் அளித்த பதிலில் இந்தியாவின் கலாச்சார தோற்றுவாய் பற்றியும், அதன் பரிணாமம் குறித்தும் 12,000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வுக்குட்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நமது நாடு பன்மைத்துவ கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட பெருமை மிக்க மரபு வழியைக் கொண்டதாகும். ஆகவே அதன் ஆய்வுக்கு இம்மாபெரும் நாட்டின் பன் கலாச்சாரங்கள் குறித்த ஆழமான உட்பொருள்கள் இயல்பாகவே தேவைப்படுகின்றன.

நாங்கள் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைவது என்னவெனில், இத்தகைய பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையில் அந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழு இல்லை.

தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தலித்துகள் இல்லை. பெண்கள் இல்லை. அநேகமாக அக்குழுவின் எல்லா உறுப்பினர்களுமே இந்திய சமுகத்தின் சாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற ஒரு சில சமூகக் குழுக்களைச் சார்ந்தவர்களே.

தென்னிந்திய மொழிகளின், பெருமைமிக்க வரலாற்றையும் மத்திய அரசாலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட, ஆய்வாளர்கள் யாரும் அக் குழுவில் இல்லை.

அக்குழுவின் உள்ளடக்கம் பல கேள்விகளை எழுப்புகிறது. விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா?

பாலின பார்வையற்ற, தனித்துவமிக்க பன் தேசிய இனங்கள், பல்வேறு சமூகக் குழுக்களைப் புறம் தள்ளியுள்ள இக்குழுவின் உள்ளடக்கம் இது அமைக்கப்பட்டுள்ள நோக்கம் குறித்த ஐயங்களையே எழுப்புகிறது.

மிகச் சிறந்த ஆய்வாளர்களான ஜான் மார்ஷல், சுனித் குமார் சாட்டர்ஜி, ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர். பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இத்துறைக்கு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர்.

இந்த நேர்மறையான பங்களிப்புகளையெல்லாம் இக்குழு சிதைத்துவிடுமோ என அஞ்சுகிறோம். இத்தகைய உள்ளடக்கம் கொண்ட இக்குழு அறிவியல் பார்வையோடு ஆய்வு செய்ய இயலாது. மேலும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுத்துவிடும் எனக் கருதுகிறோம்.

இப் பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு, அரசு அமைத்துள்ள இக் குழுவை கலைக்க அறிவுறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி”

என தெரிவித்து சு.வெங்கடேசன், கவுரவ் கோகாய், கதிர் ஆனந்த், கனிமொழி, ஜோதிமணி, சுமதி தங்கபாண்டியன், ஆரிஃப் உள்ளிட்ட 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மக்களவை பூஜ்ஜிய நேரத்தில் இதுகுறித்து பேசுகையில், ”மத்திய அரசால் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட தமிழ் மொழி உட்பட தென்னிந்திய மொழி அறிஞர்கள் யாரும் இடம்பெறவில்லை. ஆனால் சாதி சங்கத் தலைவர் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.” எனக் கூறியிருந்தார்.

“பல சிறந்த ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் நிராகரிக்கப்பட்டு புராணங்களை வரலாறென மாற்றுவதற்குத்தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதா?’ எனவும் அவர் அவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்