Aran Sei

2040ல் முடிய வேண்டியதை 2020ல் முடித்திருக்கிறேன் – பிரதமர் நரேந்திர மோடி

இமாச்சல் மாநிலத்தில் மணாலி – லே இடையே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரமதர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டதால் இச்சுரங்கப்பாதைக்கு அடல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 9.2 கி.மீ நீளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இச்சுரங்கப்பாதையின் சிறப்பம்சங்கள்

  • இச்சுரங்கப்பாதை கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • இப்பாதை மூலம் மணாலி – லே இடையிலான தொலைவு 46 கி.மீ குறைவதோடு, 4 மணி நேர பயண நேரமும் குறைகிறது.
  • இப்பாதையில் 3 ஆயிரம் கார்கள், 1500 லாரிகள் 80 கி.மீ வேகத்தில் தங்கு தடையின்றி பயணம் செய்ய முடியும்.
  • ஒவ்வொரு 150 மீட்டர் இடைவெளியிலும் அவசர உதவிக்காக தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
  • ஒவ்வொரு 60 மீட்டர் இடைவெளியிலும் தீ அணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க்கிறது.
  • ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
  • ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்கு ஒருமுறை காற்றின் தரத்தை கண்காணிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கிறது.
  • ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் அவசர கால வழி அமைக்கப்பட்டுள்ளது.
  • மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை அங்குள்ளது. இச்சுரங்கப்பாதை மூலம் மூலம் எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் எவ்விதத் தடையுமின்றி பயணிக்கலாம்.

அடல் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “என்னுடைய அரசு, எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான அனைத்து வலிமையான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. இதுபோன்று இதற்குமுன் எப்போதும் நடந்தது இல்லை. எல்லையில் சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 2002-ம் ஆண்டு இந்தச் சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார். அடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் இத்திட்டத்தையே மறந்துவிட்டார்கள். அதன் விளைவாக கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 1,300 மீட்டருக்கு மட்டுமே சுரங்கப்பாதை பணிகள் நடந்திருந்தன.

அது போன்று மந்தமான வேகத்தில் சென்றிருந்தால், 2040 ஆம் ஆண்டில்தான் இந்தத் திட்டம் முடிந்திருக்கும். ஆனால், 2014-ம் ஆண்டில் நான் ஆட்சிக்கு வந்தபின் இத்திட்டம் வேகமெடுத்தது. ஆண்டுக்கு 300 மீட்டர் என்பதிலிருந்து 1,400 மீட்டர் என்கிற அளவில் துரிதமாக பணிகள் முடிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. 26 ஆண்டுகள் நடக்கவேண்டிய பணிகளை என்னுடைய அரசு வெறும் 6 ஆண்டுகளில் முடித்துள்ளது.” என்றார்.

மேலும், “இச்சுரங்கப்பாதை மூலம் எல்லையில் தேவையான ராணுவத் தளவாடங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.நாட்டின் வளர்ச்சியை நோக்கித்தான் பாஜக அரசின் செயல்பாடுகள் இருக்குமே தவிர வாக்குகளை நோக்கி இருக்காது. என்னுடைய அரசு, எல்லையில் கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான அனைத்து வலிமையான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. இதுபோன்று இதற்குமுன் எப்போதும் நடந்தது இல்லை. எல்லையில் சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தவுலத் பெக் விமானப்பாதையும் கடந்த 40 ஆண்டுகளாக முடிக்காமல் இருந்தது.

இது போன்று 12-க்கும் மேற்பட்ட தி்ட்டங்கள் அனைத்தும் அரசளவில் மிக முக்கியமான திட்டங்கள். ஆனால், பல ஆண்டுகளாக இவை புறக்கணிக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்பு விஷயங்களில் முன் சமரசம் செய்யப்பட்டது.
ஆனால், என்னுடைய ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்கும், நாட்டின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேசிய நலனை விடவும், தேசத்தைப் பாதுகாப்பதை விடவும் எங்களுக்கு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை.” என்று கூறினார் நரேந்திர மோடி.

வாஜ்பாய் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பிஹாரில் உள்ள கோசி மேகா பாலமும் தன்னால் திறக்கப்பட்டது என்று கூறிய அவர், பாதுகாப்புத் துறையில் பல சீர்திருத்தங்களை அரசு கொண்டுவந்துள்ளதாகவும், உள்நாட்டிலேயே தளவாடங்கள் தயாரிக்கவும், தேவையை நிறைவு செய்யவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மணாலியில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்