Aran Sei

மணிப்பூரில் 14 பேர் கொல்லப்பட்ட விவகாரம் – சிஆர்பிஎஃப்-ஐ பாராட்டி சிபிஐ அறிக்கை

மணிப்பூரில் 14 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போதுமான சாட்சியங்கள் இல்லாததால் மத்திய ரிசர்வ் காவல்படை (சி.ஆர்.பி.எஃப்) அக்குற்றத்திற்கு பொறுப்பில்லை என்று மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) இறுதி அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.

அக்டோபர் ஒன்றாம் தேதி இம்பால் தலைமை மாஜிஸ்திரேட்டின் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை தள்ளுபடி செய்து, புதிய விசாரணையை தொடங்க வேண்டுமென உயிரிழந்தோரின் குடும்பங்கள், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டில் இந்திய அரசுக்கும், நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (ஐசக் முய்வா) [என்.எஸ்.சி.என்] இடையே போடப்பட்ட பாங்காக் ஒப்பந்தம் மணிப்பூரில் பெரிய கலவரத்தை உண்டாக்கியது. மணிப்பூரின் பிரதேச ஒருமைப்பாடு பாதிக்கப்படும் என்று பயந்த, இம்பாலை சேர்ந்த மெய்டெய் போராட்டக்காரர்கள், தலைநகருக்கு வந்து பங்களா காம்ப்ளெக்ஸில் இருந்த முதல்வரின் செயலகம் உட்பட பல அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.

மணிப்பூர் சட்டசபை சபாநாயகர் சபம் தன்ஞெய் சிங், துணை முதல்வர் சந்திரமோனி சிங், வன அமைச்சர் கங்குமெய் காமெய், உள்துறை அமைச்சர் டி சௌபா சிங், பிற சட்டசபை உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, என்.எஸ்.சி.என் தலைவர்கள் ஐசக் சிசி ஸ்வூ மற்றும் திங்கலெங் முய்வா ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தார்கள். பாஜக மற்றும் சமதா கட்சியின் அலுவலகங்கள் சேதம் செய்யப்பட்டன. காங்கிரஸ், மணிப்பூர் மக்கள் கட்சி, மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

கலவரத்தை கட்டுப்படுத்த, ராஜ் பவன் பகுதியிலும், முதல்வரின் பங்களா காம்ப்ளெக்ஸிலும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் பலத்த காயமடைந்திருந்தாலும், மூன்று பேர் மட்டுமே இறந்ததாக பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான ஆவணங்கள் காணவில்லை என்பதால், போதுமான சாட்சியங்கள் இல்லை என சிபிஐ தெரிவித்திருக்கிறது.

“18.06.2001 ஆம் ஆண்டு நடந்த மரணங்கள் குறித்த பதிவில் மூன்று நபர்கள் மட்டுமே உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்ற 32 பேருக்கு என்ன ஆனது என்று மருத்துவ அறிக்கைகளை பார்க்கும் போது தெரியவில்லை. அப்போது நிலவிய சூழலின் கட்டாயத்தால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர், மேலும் சிலர் காயமடைந்தனர். தங்களுக்கு எதிராக திரண்டு வந்த மக்கள் கூட்டத்தோடு ஒப்பிடும் போது, காவல்படையினர் எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த வேண்டிய கடுமையான பணி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அவர்களின் சேவையை நாம் பாராட்ட வேண்டும்” என சிபிஐயின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன் வழக்கை விசாரித்த நீதிபதி சி.உபேந்திரா கமிஷன் “சி.ஆர்.பி.எஃப் முறையாக யோசிக்காமல், அநாவசியமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது தான்” பல மரணங்களுக்கு காரணம் என்று தெரிவித்திருந்தது. இதற்கு நேர் எதிராக, சி.ஆர்.பி.எஃப்-ஐ பாராட்ட வேண்டும் என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்