தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை துணைநிலை ஆளுனரிடம் ஒப்படைக்கும் தேசிய தலைநகர் பகுதி டெல்லி அரசாங்கம் (திருத்த) மசோதா 2021 நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா திங்கள் கிழமையன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில், “சட்டப் பேரவை இயற்றும் எந்த ஒரு சட்டத்திலும் அரசாங்கம் என்ற சொல் துணைநிலை ஆளுனரை குறிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி அரசு எடுக்கும் எந்த ஒரு நிர்வாக நடவடிக்கைக்கும் துணைநிலை ஆளுனரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் இந்த மசோதா விதிக்கிறது.
டெல்லி மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் மசோதா – கேஜ்ரிவால் தலைமையில் இன்று போராட்டம்
சென்ற ஆண்டு நடந்த டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில் மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “இந்த மசோதா தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து உரிமைகளை பறித்து துணை நிலை ஆளுனர் கையில் அதிகாரத்தை கொடுக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அபிஷேக் மனு சிங்வி, இம்மசோதாவை, “மாநிலங்களவை இதுவரை கண்டுள்ள மிக மோசமான, அரசியல் சட்ட விரோதமான ஒன்று” என்று விமர்சித்திருக்கிறார்.
பல்வேறு பிரச்சினைகளில் பாஜகவை ஆதரித்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற பிராந்திய கட்சிகள் இம்மசோதாவை எதிர்த்துள்ளன என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
மக்களவையில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் அஇஅதிமுக, சிவசேனா, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைக் குறிப்பிட்டு, “வெளிநடப்பு செய்யாதீர்கள். ஒருநாள் அவர்கள் உங்களையும் குறி வைப்பார்கள். இந்த ஆட்சி, நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தையும் செங்கல் செங்கல் ஆக அழிக்க விரும்புகிறது” என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
மசோதா மாநிலங்களவையில் மசோதான 83 வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிராக 45 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பிஜு ஜனதா தளம், அஇஅதிமுக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
மக்களவையில் ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தேசிய மாநாடு, சிவசேனா, சமாஜ்வாதி கட்சி ஆகிய 8 எதிர்க்கட்சிகள் மசோதாவை எதிர்த்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியுயும் ஒய்எஸ்ஆர்சிபியும் எதிர்த்துள்ளன.
நேற்று மக்களவையில் இம்மசோதா மீதான விவாதத்தில் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இதனை எதிர்த்தன என்றும், பிராந்திய கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய அரசின் அகங்காரத்தை எதிர்த்துள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.
மக்களவையில் 12 எதிர்க்கட்சிகளும், மாநிலங்களவையில் 9 எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்த்துள்ளன. நாடாளுமன்றத்துக்கு வெளியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் இது ஜனநாயகத்துக்கு ஒரு சோகமான நாள் என்று கூறியுள்ளார். டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோதியா, இதனை ஜனநாயகத்தின் “கருப்பு நாள்” என்று கூறியுள்ளார்.
RS passes GNCTD amendment Bill. Sad day for Indian democracy
We will continue our struggle to restore power back to people.
Whatever be the obstacles, we will continue doing good work. Work will neither stop nor slow down.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 24, 2021
மாநிலங்களவையில் 14 கட்சிகளைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பிஜு ஜனதா தளம், திராவிட முன்னேற்ற கழகம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சிவசேனா, சிரோன்மணி அகாலிதள், தெலுகு தேசம் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை அரிதான ஒற்றுமையை வெளிப்படுத்தி மசோதாவை எதிர்த்தன என்றும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான இந்தியா குடியரசுக் கட்சி (அதவாலே)வும் மட்டும்தான் மசோதாவை ஆதரித்தனர் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.