Aran Sei

விவசாயிகளை பாதிக்கும் மசோதாக்கள் – எதிர்க்கட்சிகள் போராட்டம்

MPs protest

தற்போது தொடங்கியுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று அவசர சட்ட மசோதாக்களை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் 5-ம் தேதி மத்திய அமைச்சரவையின் பரிந்துரைப்படி அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் மற்றும் விவசாய ஒப்பந்த சட்டம் ஆகியவற்றுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருந்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, இந்த அவசர சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினாய் விஸ்வம் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”கொரோனா பொதுமுடக்கம் என்ற பெயரில் அரசாங்கம் ஜனநாயகத்தின் மீதும், நாடாளுமன்றத்தின் மீதும், அரசியல் சட்ட நிறுவனங்கள் மீதும் தாக்குதலை கட்டவிழ்த்து விடுகிறது. சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) கட்சிகளைச் சேர்ந்த நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய  போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.” என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.ராகேஷ் ”இந்த மூன்று மசோதாக்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை. அவை கார்ப்பரேட்டுகளின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் நாங்கள் அவற்றை எதிர்க்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.

விவசாய சட்ட சீர்திருத்த மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “மோடி அரசின் மூன்று ’கருப்பு’ சட்டங்களும் விவசாயிகளையும், விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் நிலைகுலையச் செய்யும் தாக்குதல். இதனால் அவர்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு பெரும் முதலாளிகளிடம் நிலத்தை விற்கும்படி நிர்பந்திக்கப்படுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வா செய்தியாளர்களிடம் பேசியபோது ”கடந்த 65 ஆண்டுகளாக பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேச விவசாயிகள் இந்தியாவின் மொத்த கோதுமை, நெல், விளைச்சலில் 60% பங்களித்துள்ளார்கள். இந்த விவசாயிகளை முழுமையாக பயன்படுத்திய பிறகு இப்போது அவர்களை கைவிடுவது சரியா?” என்றார்.

”பீகார், ஜார்க்ண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் நெல் வரத்து அதிகரித்துள்ளதால் மற்றவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம். விவசாயிகள் கோருவது குறைந்தபட்ச ஆதரவு விலையினை (MSP) ரத்து செய்ய வேண்டாம் என்பது மட்டுமே.” என பிரதாப் சிங் கூறினார்.

”இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சாந்தகுமாரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, 6% விவசாயிகள் மட்டுமே MSP-ஆல் பயனடைவதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த 6% விவசாயிகள் தான் 60% உற்பத்திக்கு பங்களிப்பு செலுத்துகிறார்கள் என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார்.” எனவும் பிரதாப் சிங் கூறியுள்ளார்.

”இந்த கைவிடலை பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள். MSP கட்டாயமாகத் தொடர வேண்டும். அதானிகளும், அம்பானிகளும் நுழைந்தால் கிழக்கு இந்திய கம்பெனியைப் போல மொத்த இந்தியாவையும் சுருட்டிக் கொண்டு போவார்கள்” எனக் கூறியுள்ளார்.

Credits: thewire.in

மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ள விவசாய சட்ட சீர்திருத்தங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்