Aran Sei

விதிமுறை மீறல் – கங்கனா ரணாவத்தின் அலுவலகம் இடிப்பு

மாநகராட்சியின் விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மும்பையில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்லில் இயங்கி வந்த அவரது அலுவலகத்தை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் புல்டவுசர்களைக் கொண்டு இடித்தனர்.
மும்பை மாநகராட்சியின் ஒப்புதல் பெறாமலேயே அந்த அலுவலக கட்டுமானப் பணிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, கழிப்பறை இருந்த இடத்தில் அலுவலகமும், படிக்கட்டுகள் இருந்த இடத்தில் கழிப்பறையும் மாற்றி கட்டப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று கட்டுமானத்தில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து மும்பை மாநகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்த விளக்கத்தை 24 மணி நேரத்துக்குள் அளிக்கும்படி நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத் தனது அலுவலகத்தில் எந்த வித கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை என்றும், மாநகராட்சி அதிகாரிகள் அலுவலக பாதுகாவலரை மிரட்டி அத்து மீறி உள் நுழைந்திருக்கின்றனர் எனவும் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

கொரோனா கால பொதுமுடக்க விதிகளில் எந்த வித கட்டுமானப் பணிகளிலும் ஈடுபடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தும் கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தில் பல மாறுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் மீது மும்பை மாநகராட்சி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது அலுவலகத்தை செப் 9ம் தேதி காலை மாநகராட்சி நிர்வாகிகள் புல்டவுசரைக் கொண்டு இடிக்கத் தொடங்கினர். இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம் கட்டடத்தை இடிப்பதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் அலுவலகத்தின் பெரும்பகுதி இடிக்கப்பட்டு விட்டது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து அது குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார் கங்கனா ரணாவத். மும்பை பாதுகாப்பான நகரமில்லை என்பதைக் குறிக்கும் விதத்தில் மும்பையை பாகிஸ்தானோடு ஒப்பிட்டு ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். மும்பை குறித்த கங்கனாவின் பதிவுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் மும்பைக்குள் நுழையவே கூடாது என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.
மும்பைக்கு வருவேன் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சவால் விட்டு மும்பை வந்தார் கங்கனா. மத்திய அரசிடம் அவர் விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பொய்யான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து அரசியல் உள்நோக்கத்துடன் தனது அலுவலகத்தை இடித்து விட்டதாக கங்கனா தெரிவித்திருக்கிறார்.  #deathofdomacracy என்ற ஹாஷ்டாக்கின் கீழ் ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்