Aran Sei

பிஎம் கேர்ஸ் -க்கு பிரதமர் மோடி நிதியுதவி. வெளிப்படைத்தன்மை இல்லை என ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பிஎம் கேர்ஸ் என்று அழைக்கப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசரக்கால நிவாரண நிதிக்கு (PM CARES) தொடக்க நிதியாக பிரதமர் நரேந்திர மோடி ரூ.2.25 லட்சம் நன்கொடை அளித்தார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளார்.

நன்கொடைகள் அளிப்பது பிரதமருக்குப் புதிதில்லை என்றும், பெண்பிள்ளைகளின் கல்விக்கு, கங்கை நதியின் சீரமைப்பிற்கு, பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் நலனுக்கு என இதுவரை அவர் 103 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்திருக்கிறார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு கிடைத்த அன்பளிப்புகளை ஏலத்தில் விற்றதன் மூலம் கிடைத்த 89.96 கோடி ரூபாய் மற்றும் தனது சொந்த சேமிப்பு தொகையிலிருந்தும் இந்த நன்கொடைகளை அவர் வழங்கியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிஎம் கேர்ஸ் நிதி துவங்கப்பட்டதிலிருந்து அதுகுறித்த விவாதத்திற்குப் பஞ்சம் இல்லை. இந்த நிதி இந்தியாவின் தலைமை தணிக்கை அதிகாரியால் (CAG) தணிக்கை செய்யப்படாமல் தனிநபர் தணிக்கைக்கு உட்படுத்தியதுக்கு எதிராகப் பல விமர்சனங்கள் எழுந்தன. சமூக செயற்பாட்டாளர் கமடோர் லோகேஷ் பாத்ரா, பிஎம் கேர்ஸ் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்த தகவல் “தொகுக்கப்பட்ட வடிவத்தில் அலுவலகத்தில் இல்லை” எனும் காரணத்தினால் மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் அரவிந்த் வாக்மரே பிஎம் கேர்ஸ் நிதியின் விவரத்தை வெளியிட உத்தரவிடக் கோரி தொடர்ந்த பொதுநல வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுனில் சுக்ரே மற்றும் அனில் கிலோர் ஆகியோரின் அமர்வு தள்ளுபடி செய்தது.

காங்கிரசின் முத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் “பிஎம் கேர்ஸ் நிதியின் அறங்காவலர்கள் நன்கொடை அளித்தவர்கள் பெயரை வெளியிட ஏன் தயங்குகிறார்கள்” என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

“2020 மார்ச் 26 முதல் 31 வரையிலான ஐந்து நாட்களில் 3,076 கோடி ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக பெறப்பட்டதை தணிக்கை அதிகாரி உறுதி செய்திருக்கிறார்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

“மற்ற அரசு சார்பற்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகைக்கு மேல் நன்கொடையாக அளிப்பவர்களின் பெயரை வெளியிடும் வழக்கத்தைக் கொண்டுள்ள நிலையில், பிஎம் கேர்ஸ் நிதிக்கு மட்டும் ஏன் இந்த விலக்கு? பெரியமனம் படைத்த நன்கொடையாளர்களின் பெயரை வெளியிட ஏன் மறுக்கிறீர்கள்? அவர்களின் பெயரை வெளியிட இவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்?” என்று ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, காந்திநகரில் ரூ 1.10 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் காந்திநகர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.1.27 கோடி வைப்புத் தொகையை சேர்த்து அவரின் சொத்து மதிப்பு ரூ.2.49 கோடியாக இருந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்