Aran Sei

பிரிட்டன் குடிமக்கள் கொல்லப்பட்ட வழக்கு. நரேந்திர மோடியின் பெயரை நீக்கிய நீதிமன்றம்

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற மதக்கலவரத்தில் பிரிட்டன் குடியுரிமைபெற்ற நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை நீக்கி குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள பிராண்டிச் நகர சிவில் நீதிமன்றம் கடந்த சனியன்று உத்தரவிட்டுள்ளது.

சையத் தாவூத், ஷகீல் தாவூத், முகமது அஸ்வத் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மற்றொருவரும் ராஜஸ்தானிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக குஜராத் நோக்கி வந்துகொண்டிந்தபோது கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உறவினர் சமீமா தாவூத் 2004ஆம் ஆண்டு குஜராத் சிவில் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தாக்கல் செய்தார்.

குஜராத் மதக்கலவரம் நடந்தபோது முதலமைச்சராக இருந்த நரேந்திரமோடி அரசியல் சாசனப்படி மாநில அரசை வழிநடத்தும் பொறுப்பில் இருந்ததால், இந்தப் படுகொலைக்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று சமீமா தாவூத் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். ரூபாய் 20 கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட இவ்வழக்கில் நரேந்திர மோடி, குஜராத்தின் அப்போதைய உள்துறை அமைச்சர் கோர்தன் சடாப்பியாவுடன் 12 நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் ஏற்கெனவே ஆறுபேரை சிறப்பு நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு விடுதலை செய்திருந்தது..

இந்நிலையில், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, பிரதமர் நரேந்திர மோடி சார்பாக வழக்கறிஞர் எஸ்.எஸ் ஷா மனுதாக்கல் செய்திருந்தார்.  விசாரணையின்போது, நரேந்திர மோடி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று நானாவதி ஆணையம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதை ஷா சுட்டிக்காட்டியதாகவும், எனவே, நரேந்திர மோடியின் பெயரை நீக்குவதுடன் வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஷா வாதிட்டதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நீதிபதி எஸ்.கே கதாவி பிறப்பித்த உத்திரவில், மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ”பொத்தாம் பொதுவானதாக” இருப்பதுடன் “தெளிவற்றதாகவும்” உள்ளது என்றும் சம்பவத்தில் நரேந்திர மோடி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுப்பட்டதற்கான சான்றுகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டதுடன் மோடியிடமிருந்து  மனுதாரர் நிவாரணம் கோருவதற்கான சட்டரீதியான உரிமை இல்லை என்றும் கூறியுள்ளார்/. இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்