மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைத் திருப்பி தரக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இது குறித்து செவ்வாய் அன்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
“மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்க தற்போது அரசிடம் போதுமான நிதி இல்லை” என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை உடனே தர வேண்டும் எனக் கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#WATCH Delhi: TRS, TMC, DMK, RJD, AAP, NCP, Samajwadi Party and Shiv Sena MPs protest in front of Mahatma Gandhi statue at the Parliament premises, demanding GST payments to states. pic.twitter.com/x9f5azAY0I
— ANI (@ANI) September 17, 2020
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும் என்று பல மாநில அமைச்சர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
நிர்மலா சீதாராமன், “மத்திய அரசின் வருவாய் குறைந்துவிட்டதால், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகையைத் தருவதற்கு மத்திய அரசிடம் போதுமான பணமில்லை” என பதிலளித்திருந்தார். மத்திய அரசு இதற்காக இரண்டு சிறப்புத் திட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்திருந்தது.
அதில், ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு அமல்படுத்த உள்ள சிறப்புத் திட்டத்தின் கீழ், குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.97,000 கோடி வரை மாநில அரசுகள் கடன் வாங்கிக் கொள்ளலாம். அல்லது, ஜி.எஸ்.டி வருவாய் பற்றாக்குறை ரூ.2.35 கோடியை மாநில அரசுகள் முன்கூட்டியே கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகஸ்டு 31-ம் தேதி-ல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ”கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இதுவரையில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.12 ஆயிரத்து 250 கோடியாக உள்ளது. அதில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ.11,459.37 கோடி வழங்கப்பட வேண்டும். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மாநில அரசுகளுக்கான வருவாய் வரவுகளில் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது.” என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
“மத்திய அரசு முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளும் மாநிலங்களுக்கு உரிய பிற ஒட்டுமொத்த ஆதாரங்களைக் குறைப்பதாக அமைந்திருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று மற்றும் இதர பணிகளுக்காக செலவிட்டு வரும் மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
“நிதியமைச்சகம் முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகள் குறித்த விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும். அதன்படி, ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகைக்காக ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பாக்கித் தொகையை வழங்கும் முறையை ஏற்கிறோம்.” என்றும் எடப்பாடி பழனிச்சாமி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “மகாராஷ்டிராவில் பாஜக அல்லாத அரசு ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்தில் குற்றமா? மத்திய அரசு மகாராஷ்டிர மாநிலத்துக்கு தர வேண்டியுள்ள 25000 கோடி ரூபாயை வழங்க தயாராக இல்லை. எனில், நாங்கள் எப்படி கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம்? மக்களின் உயிரை எப்படிக் காப்பாற்றுவோம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.