மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் விளைபொருள் மற்றும் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் பதால் பதவி விலகியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்த இந்த மூன்று மசோதாக்களுக்கும் ஆளும் பா.ஜ.க உடன் பஞ்சாபில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சிரோமணி அகாலி தளம் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா செவ்வாய் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மற்ற இரண்டு மசோதாக்களும் நிறைவேறின.
சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் மத்திய அரசின் இந்த மூன்று மசோதாக்களுக்கும் அகாலி தளம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று கூறியிருந்தார். வாக்கெடுப்பின்போது அகாலி தளம் இந்த மசோதாக்களுக்கு எதிராக வாக்களித்திருந்தது.
விவசாயிகளின் நலனுக்கு எதிராக அமைந்துள்ள இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளம் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரும் தன் மனைவியுமான, மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதால் பதவி விலகுவார் என சுக்பீர் சிங் அறிவித்திருந்தார்.
ஹர்சிம்ரத் பதால் தனது ட்விட்டரில், ”விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை எதிர்த்து அமைச்சரவையில் இருந்து பதவி விலகியுள்ளேன். விவசாயிகளோடு அவர்களின் மகளாகவும் சகோதரியாகவும் துணை நிற்பதில் பெருமை கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
I have resigned from Union Cabinet in protest against anti-farmer ordinances and legislation. Proud to stand with farmers as their daughter & sister.
— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) September 17, 2020
குடியரசு தலைவர் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு ஹர்சிம்ரத் பதால் அளித்திருக்கும் பேட்டியில், “நாடாளுமன்றத்தில் இந்த மசோதாக்கள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பினை பதவி செய்ய வேண்டி, மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள என் அம்மாவைக் கூட விட்டுவிட்டு வந்தேன்.” எனக் கூறியுள்ளார்.
”அமைச்சரவையில் இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதலே நான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன், விவசாயிகளுக்கு இந்த அவசர சட்டங்கள் மீதுள்ள சந்தேகங்களை தீர்ப்பதற்கு அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டேன்.” என்று கூறியுள்ளார்.
மேலும், ”விவசாயிகளின் சந்தேகங்களும் குழப்பங்களும் தீரும் வரையில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டாம் என மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன்.” எனவும் ஹர்சிம்ரத் கவுர் கூறியிருக்கிறார்.
உணவு பதப்படுத்துடல் துறையின் மத்திய அமைச்சராக 2014-ம் ஆண்டு பொறுப்பேற்ற கவுர், 2019 பா.ஜ.க தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அதே துறையில் தொடர்ந்தார்.
காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் இந்த விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சிரோமணி அகாலி தளம் கட்சி மட்டும்தான் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்துகொண்டு இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது,
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.