Aran Sei

அப்பாவுக்காக திருடர்களுடன் மோதிய இளம் பெண்

ஸ்மார்ட்ஃபோன் என்பது ஜலந்தரைச் சேர்ந்த 15 வயது குஸூமின் மிகவும்
மதிப்பு வாய்ந்த சொத்து. அதை அவர் எப்போதுமே தன் பக்கத்திலேயே வைத்துக்
கொள்கிறார். ஏதாவது புதிய மெசேஜ்கள் வருகிறதா என்று ஒவ்வொரு சில
வினாடிகளுக்கு ஒரு முறை அதைபார்த்துக்கொள்கிறார். பெரும்பாலும் ஆன்லைன் பாடங்களை அனுப்பும் ஆசிரியர்களிடமிருந்து அல்லது வகுப்புகள் பற்றி விசாரிக்கும் வகுப்பு தோழர்களிடமிருந்து மெசேஜ்கள் வருகின்றன.

இந்த ஸ்மார்ட் ஃபோனுக்காகத்தான் குஸூம் இரண்டு நாட்களுக்கு முன்பு
(ஆகஸ்ட் 31-ம் தேதி) ஜலந்தர் நகரத்தின் ஒரு தெருவில் பைக்கில் வந்து
அதைப் பறிக்க முயற்சித்த இரண்டு திருடர்களுக்கு எதிராக பயமின்றி
சண்டையிட்டார் குஸூம்.

அசாதாரணமான தைரியத்துடன் குஸூம் திருடர்களில் ஒருவனைப் பிடித்துக்
கொண்டார். கூர்மையான ஆயுதம் ஒன்றால் தாக்க முற்பட்ட போதிலும் விடாமல்
போராடிக் கொண்டிருந்த குஸூமுக்கு உதவியாக அருகில் இருந்தவர்கள்
ஒன்றுகூட, திருடனுக்கு சரமாரியாக அடி விழுந்தது.

ஒரு ஃபோனுக்காக உயிரைக் கூட பொருட்படுத்தாமல் ஏன் சண்டை போட்டீர்கள்
என்று கேட்டால் “இந்த ஸ்மார்ட்ஃபோன் சும்மா வந்து விடவில்லை. கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கூடம் மூடிய பிறகு, வகுப்புகள் ஆன்லைனில் நடக்க ஆரம்பித்தன. என் அப்பா கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து அந்த ஃபோனை வாங்கித் தந்தார். இது விலைமதிப்பற்றது” என்கிறார் தினக் கூலி தொழிலாளரின் மகளான குஸூம்.

“எனது செல்ஃபோன் பறி போயிருந்தால், பிறகு நான் எப்படி படிக்க முடியும்?
ஆசிரியர்கள் அனுப்பிய எல்லா பாடக் குறிப்புகளும், பாடங்களும் அதில்
உள்ளன. அது இல்லாமல் படிப்பது சாத்தியமே இல்லை. இன்னொரு ஃபோன்
வாங்குவதும் முடியாது” என்கிறார் குஸூம்.

எதிர்காலத்தில் காவல்துறை அதிகாரியாக விரும்பும் குஸூம் சில மாதங்கள்
டேக்வாண்டோ சண்டைக் கலையை கற்றவர். அந்தப் பாடம் இந்தச் சண்டையில்
உதவியாக இருந்திருக்கிறது.

இதேபோன்ற சூழ்நிலையில் சிக்கும் பெண்களுக்கு குஸூம் சொல்லும் அறிவுரை
“உங்கள் மனதை ஒருபோதும் பயம் ஜெயித்து விட அனுமதிக்காதீர்கள்.
நீங்கள் பயப்படுவதாக எதிரிக்குத் தெரியக் கூடாது. எது நடந்தாலும்
எதிர்த்து நில்லுங்கள், வெற்றி பெறுவீர்கள்”.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்