Aran Sei

21 வயது இளம் பெண்ணுக்கு மேயர் பதவி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதனை

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக, முடவன்முகல் வார்டு பிரதிநிதியாக வெற்றி பெற்ற, 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில், இவ்வளவு இளம் வயதில் ஒருவர் மேயர் பதவியில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

கேரளாவில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து இன்று நடைபெற்ற மாவட்ட கமிட்டி கூட்டத்தில், ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பல மூத்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்தும், இப்பதவி ஆர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் பிரச்சினைகளையும், பிற வளர்ச்சித் திட்டங்களிலுமே தன்னுடைய முழு கவனம் இருக்குமென ஆர்யா தெரிவித்துள்ளார்.

“தூய்மையான திருவனந்தபுரத்தை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் மருத்துவ வசதி செய்துகொடுக்க வேண்டும்” எனும் ஆர்யா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரளாவின் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜாவை முன்னுதாரணங்களாக நினைப்பதாக கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யின் மாநில கமிட்டி உறுப்பினரான ஆர்யா, அக்கட்சியின் சிறுவர்களுக்கான பாலசங்கத்தின் தலைவரும் கூட. பாலசங்கத்தில் இணையும் போது அவரது வயது ஆறு. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதவியல் படித்துக் கொண்டிருக்கும் ஆர்யா, தனது வார்டில் உள்ள ப்ரைமரி பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இளம் வயதிலேயே பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஆர்யா, கட்சியில் கொடுக்கப்படும் பணிகளை முனைப்போடு ஏற்று செய்பவர் என்கிறது இந்துஸ்தான் டைம்ஸ்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்