Aran Sei

விவசாயிகளுக்கு ஆதரவான லண்டன் ஆர்ப்பாட்டம் : பிரிட்டிஷ் உள்துறையிடம் விவாதித்த இந்திய உள்துறை

image credit : ndtv.com

“ஐக்கிய முடியரசில் (பிரிட்டன்) செயல்படும் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள்” குறித்து, கடந்த ஜனவரி மாதம், இந்திய உள்துறை துறை செயலர் பிரிட்டிஷ் உள்துறை அலுவலகத்தின் நிரந்தர செயலுருடன் நடத்திய சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா, பிரிட்டிஷ் உள்துறை செயலர் மாத்யூ ஜான் ரைக்ராஃப்டுடன் ஜனவரி 15-ம் தேதி நடத்திய இந்த இணையவழி சந்திப்பில், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு குறித்தும் விவாதித்ததாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு பிரிட்டிஷ் உள்துறை செயலர் கூட்டம் குறித்து ட்வீட் செய்திருந்தார்.

“இந்திய உள்துறை செயலருடன் மிகவும் பயனுள்ள ஒரு தொலைதொடர்பு சந்திப்பு. வரும் ஆண்டில் உள்நாட்டு விவகாரங்களில் மேலும் நெருங்கிய ஒத்துழைப்புக்கான பல வாய்ப்புகள் உள்ளன” என்று அவர் கூறியிருந்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் எந்த அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

சென்ற வாரம், இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்தும், இந்தியாவில் ஊடக சுதந்திரம் குறித்தும், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தியது, இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும் என்று இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயச் சட்டங்கள் பற்றிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் – உள்விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியா கண்டனம்

இந்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த டிசம்பர் மாதம், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு வெளியில் ஏராளமான பேர் ஆர்ப்பாட்டம் நடத்திய ஒரு மாதத்துக்குள் இந்திய மற்றும் பிரிட்டிஷ் உள்துறை செயலர்களின் சந்திப்பு நடந்துள்ளது.

விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு – லண்டனில் போராடும் இந்திய வம்சாவளிகள்

இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் பிரிட்டிஷ் பஞ்சாபிகள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் சீக்கிய உறுப்பினர் தன்மன்ஜித் சிங் தேசாய் தலைமையிலான 36 பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்-க்கு எழுதினர். இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதிகளால் தலைமை தாங்கப்பட்டது என்று இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார். இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற முகாந்திரத்தில் அவர்கள் தமது சொந்த நோக்கத்தை அடைய முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்