காஷ்மீர் கொள்கையை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation – ஓஐசி) விமர்சித்துள்ளது. இதை இந்திய அரசு ‘கடுமையாக’ நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“நவம்பர் 27-28, ஆகிய தேதிகளில் நியாமியில், 47 வது முறையாக வெளியுறவு அமைச்சர்களின் சபை கூடியது. அந்த அமர்வில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஏற்றுக்கொண்ட தீர்மானங்களில் இந்தியா குறித்த தவறான மற்றும் தேவையற்ற குறிப்புகளை நாங்கள் கடுமையாகவும் திட்டவட்டமாகவும் நிராகரிக்கிறோம்” என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.
வெளியுறவு அமைச்சர்களின் சபையின் 47 ஆவது அமர்வில், மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஓஐசி பொதுச்செயலாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ஜம்மு-காஷ்மீரின் நிலைமையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீரின் மக்கள்தொகை மற்றும் புவியியல் அமைப்பை மாற்ற இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், தொடர்ச்சியாகப் பல கட்டுப்பாடுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. எனவே, இந்த மோதல்களுக்கான தீர்வை நோக்கிச் சர்வதேச சமூகங்கள் முயற்சிகளை எழுப்பியுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினையை அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப் பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவையும் அந்த அறிக்கை ஒப்புக் கொண்டுள்ளது.
அதற்குப் பதிலளித்த வெளியுறவு துறை அமைச்சகம், “ஒரு குறிப்பிட்ட நாடு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. அதுவும், மத சகிப்புத்தன்மையற்று, தீவிரவாதம் மற்றும் சிறுபான்மையினரைத் துன்புறுத்துவது போன்றவற்றிலும், இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்திலும் ஈடுபடும் நாட்டுக்கு ஆதரவு அளிப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அதன் அறிக்கையை இன்னும் இணையதளத்தில் பதிவேற்றவில்லை.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.