Aran Sei

கார்ப்பரேட் கையில் சந்தை – காலனியச் சூழலை உருவாக்கும்

“முதலாளித்துவ நாடான அமெரிக்கா செய்யாத தவறை இந்தியா செய்து கொண்டிருக்கிறது” என்று இந்தியப் பொருளாதாரத்தின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்துச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரான சோமசுந்தரம்.

பண வீக்கம், வங்கித்துறையில் கார்ப்பரேட் முதலாளிகளின் நுழைவு, ஜிடிபி வீழ்ச்சி என இந்தியப் பொருளாதாரத்தைக் குறித்துக் கவலைப்பட பல காரணங்கள் இருந்தாலும், இப்போது பேசப் போவது, திவாலான டி.ஹெ.எச்.எல் நிறுவனம் ஏலத்தில் விடப்பட்ட போது நடந்த முறைகேடுகளை குறித்து.

டி.ஹெச்.எஃப்.எல் எனப்படும் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் நிதி நிறுவனம் செய்த கடன் மோசடியால், ரிசர்வ் வங்கி திவால் நடவடிக்கை எடுத்தது. டி.ஹெச்.எஃப்.எல்-யின் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்து ஒரு வருடம் ஆகியிருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு உதவும்படி இப்போது வரை ஏலக்கேட்பு (bid) எதுவும் வரவில்லை.

அதிகபட்சமாக, ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா 10,000 கோடி ரூபாய் டி ஹெச் எஃப் எல்-ற்கு கடன் கொடுத்திருக்கிறது.பேங்க் ஆஃப் இந்தியா 4,125 கோடி ரூபாயும், கனரா வங்கி 2,681 ரூபாயும், என்.ஹெச்.பி 2,434 கோடி ரூபாயும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 2,378 கோடி ரூபாயும், சிண்டிகேட் வங்கி 2,229 கோடி ரூபாயும், பேங்க் ஆஃப் பரோடா 2,075 கோடி ரூபாயும், இந்தியன் வங்கி 1,552 கோடியும் ரூபாயும், செண்ட்ரல் வங்கி 1,389 கோடி ரூபாயும், ஐ.டி.பி.ஐ வங்கி 999 கோடி ரூபாயும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி 361 கோடி ரூபாயும்டி ஹெச் எஃப் எல்-ற்கு கடனாக கொடுத்திருப்பதாக  moneycontrol தளம் தெரிவித்துள்ளது.

”ஏலக்கேட்பு சமர்ப்பித்திருப்பவர்களில் முக்கியமான பெயர்களாக இருப்பவை ஓக்ட்ரீ கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட், அதானி ப்ராப்பர்டீஸ். பிரமல் குழுமம் மற்றும் எஸ்.சி லோவி. இப்போது வரை மூன்று சுற்று ஏலம் நடந்துள்ளது. நான்காவது சுற்றுக்கு ஏலத்திற்கு ஏலக்கேட்பைச் சமர்பிக்க டிசம்பர் 14 வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றிலும் இரண்டாம் சுற்றிலும் முன்னிலையில் இருந்தது ஓக்ட்ரீ நிறுவனம். மூன்றாவது சுற்றில் கலந்துகொண்ட அதானி பிரப்பர்டீஸ், விதிக்கப்பட்ட காலக்கெடுவைக் கண்டுகொள்ளாமல், ஒரு நிறுவனம் எதிர்பாராத தொகை ஒன்றை குறிப்பிட்டு ஏலக்கேட்பைச் சமர்பித்து திடீரென ஆட்டத்தில் முன்னேறியிருக்கிறது.” தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் வங்கி ஊழியரான சோமசுந்தரத்திடம் அரண் செய் பேசிய போது “அதானி முதல் ஏலக்கேட்பை சமர்பித்த போது, ஓக்ட்ரீ தான் ஏலத்தை வெல்வதாக இருந்தது. அப்போது, அதானியிடம் ‘ஓக்ட்ரீ குறிப்பிட்டிருக்கும் தொகையை விட அதிகமான ஒரு தொகையை குறிப்பிட்டு, ஏற்கனவே சமர்பித்த ஏலக்கேட்பில் ஒரு சிறு மாற்றத்தை செய்து, புது ஏலக்கேட்பை சமர்ப்பிக்கலாம்’ என்று கடன் வழங்குநர் குழு [committee of creditors (CoC] உதவி செய்வதாக தெரிகிறது என ஓக்ட்ரீ, கடன் வழங்குநர்கள் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் மறைமுகமாக தெரிவித்திருக்கிறது . அதனால், கொடுக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவை தாண்டி அதானி நிறுவனம் ஒரு ஏலக்கேட்பை சமர்பித்து முன்னிலை பெறுகிறது. இதற்கு ஓக்ட்ரீ நிறுவனம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்னர் மும்பை விமான நிலைய ஒப்பந்தம் அதானிக்கு கொடுக்கப்பட்ட போது இப்படித்தான் ஒரு சிங்கப்பூர் நிறுவனம் கண்டனம் தெரிவித்தது” என்று கூறினார்.

“முதல் மற்றும் இரண்டாம் சுற்று ஏலத்தில் ஓக்ட்ரீ நிறுவனமே முன்னிலையில் இருந்தது. இரண்டாம் சுற்றுதான் இறுதி சுற்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஏலம் நேர்மையாக, வெளிப்படையாக நடக்கும் என்றுதான் இதில் நாங்கள் பங்கேற்றோம்” என ஓக்ட்ரீ நிறுவனம் கடன் வழங்குநர்கள் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.  இதற்கிடையே, ஏலம் வெளிப்படையாக நடக்கவில்லை என்று எஸ்.சி லோவி ஏலத்தில் பங்கேற்காமல் விலகிவிட்டது. இப்படி முறைகேடு நடப்பது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிராமல் குழுமம் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது என்று செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் செயல்பாடு குறித்துப் பேசிய சோமசுந்தரம் “இப்படி அதானிக்கு மட்டுமே எல்லா வாய்ப்புகளும் வழங்கப்படும் என்றால், சந்தையில் போட்டியே இருக்காது, அதனால் பொருளாதாரம் வீழ்ச்சி தான் அடையும். இந்துத்துவா என்று சொல்லி வாக்கு கேட்பது இருக்கட்டும், நாங்கள் ஊழல் செய்ததில்லை என்று பொய் சொல்லி வாக்கு கேட்டு, நாட்டை கொள்ளையடிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை” என்று விமர்சித்தார்.

மேலும் “அந்நிய நேரடி முதலீடு வரும் இடங்களில் இதைப் போன்ற மோசடிகள் நடந்தால், சர்வதேச அளவில் இந்தியாவிற்கு ஒரு மோசமான பிம்பம் உருவாகும். இந்தியாவா? அங்கே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டும்தான் வரவேற்பும், ஆதரவும் இருக்கும் என்று வேறு நிறுவனங்கள் எவையும் இந்தியா பக்கமே வராது” என பொருளாதார முறைகேடுகளின் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்தார்.

அறண்செய் – யிடம் பேசிய பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா “இந்திய அரசு, அம்பானி மற்றும் அதானி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கின்றன. அரசின் சலுகைகளால் உபரிகளை அதிகமாக சேகரித்து, விலைகளை குறைத்து, போட்டியாளர்களை அழித்துவிடுகிறார்கள். ஏகபோக சக்தியாக மாறிவிடுகிறார்கள். உதாரணமாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை விற்றுவிடு என்றால் ஏகபோகம் (monopoly) அங்கு உருவாகிறது. அரசின் கொள்கைகள் நேரடியாக இதில் பங்களிக்கிறது என்று சொல்லலாம்” என்று கூறினார்.

ஒரே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கையில் சந்தை இருப்பது, காலனியாதிக்கம் போன்ற ஒரு சூழலை உருவாக்கிவிடும் என்று கூறும் சோமசுந்தரம், “முதலாளித்துவ நாடுகள் கூட, சந்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கைக்குள் போவதை அனுமதிக்காது. அமெரிக்காவில் கூட இது நடக்காது. சந்தையை ஒருவருக்கு கொடுக்க மாட்டார்கள். ஆனால், இந்தியா அந்த தவறை செய்து கொண்டிருக்கிறது. எதற்காக இதை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இது மோசமான விளைவுகளையே உருவாக்கும்” என்று முன்னாள் வங்கி ஊழியர் சோமசுந்தரம் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்